இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து வருகிற 17ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு

சென்னை: இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து வருகிற 17ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேரவைத் தலைவர் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழத் தமிழ் மண்ணில், சிங்கள இனவெறி அரசு மேற்கொண்டு வரும் இனப் படுகொலையை கண்டித்தும், தமிழினப் படுகொலையை இந்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரியும்,

கடல் சார்ந்து வாழும் மண்ணின் மைந்தர்களான தமிழக மீனவர்களை ஈவு இரக்கமில்லாமல், சுட்டுக்கொல்லும் சிங்கள கடற்படைக்கு பாடம் புகட்டக் கோரியும் 17ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரு வணிகர்கள் முதல் சிறு வணிகர்கள் வரை அனைவரும் அதில் பங்கேற்பார்கள். வணிகர்களின் வாடிக்கையாளர்களான பொதுமக்கள் இந்த கடையடைப்பின் அவசியத்தையும், அவசரத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த கடையடைப்புப் போராட்டத்திலிருந்து எந்த வர்த்தகப் பிரிவுக்கும் விதி விலக்கு கிடையாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். மிகச் சிறிய டீக்கடை முதல் மிகப் பெரிய நகைக் கடைகள் வரை அனைத்துக் கடைகளையும் அடைத்து விட்டு தமிழர்களின் உணர்வை வணிகர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று அதில் வெள்ளையன் கூறியுள்ளார்.

Comments