18 நாட்களில் தமிழீழத்தை ஆதரித்து சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்



சென்னையிலுள்ள சிறிலங்கா தூதரகத்தின் முன்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உரையாற்றுகையில், இன்னும் 18 நாட்களுக்குள் தமிழீழத்தை ஆதரித்து சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தவறினால் சட்ட மன்றத்துக்குள் நுழைந்து தொடர் உண்ணாவிரதம் இருப்போம் என்று தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களை கூண்டோடு ஒழித்து விட வேண்டும் என்று செயற்பட்டு வரும் சிங்கள இராணுவத்தையும், ராஜபக்ஸவையும் கண்டித்தே இப்போராட்டம் நடைபெறுகிறது.

ஈழத் தமிழர்களுக்கான போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் உரக்ககுரல் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் உலக அளவில் உள்ள தமிழர்களிடம் உள்ளது.
ஈழத்தில்; தொடரும் இனப்படுகொலை போன்று உலகில் வேறு எங்கும் படுகொலைகள் நடைபெறவில்லை என்று மனித உரிமை அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் கூறிவருகின்றனர்.

தமிழக அரசும், முதலமைச்சரும் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு இன்னும் 18 நாட்களுக்குள் தமிழ் ஈழத்தை ஆதரித்து சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தவறினால் தீவுத்திடலில் 1000 தமிழர்கள் தீப்பந்தம் ஏந்தி தமிழ் ஈழத்துக்கு வெளிச்சம் காட்டுவோம்.

அதன் பிறகும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்றால் எங்கள் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் சட்ட மன்றத்துக்குள் நுழைந்து ஒரு பகுதியை ஆக்கிரமித்து தொடர் உண்ணாவிரதம் இருப்பார்கள்.

அடுத்து எங்கள் எம்.பி.க்கள் வருவார்கள், இளைஞர் படை வரும், மகளிர் வருவார்கள், மாணவர்கள் வருவார்கள். நாங்கள் அமைதியான முறையில் போராட வேண்டும் என்று நினைக்கிறோம். எனவே விரைவாக முடிவு எடுத்து ஈழத்தில் உள்ள தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.

Comments