ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு நினைத்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும்: தொல். திருமாவளவன்

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கம் நினைத்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சென்னையில் ஊடகவியிலாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்திய அரசு ஈழத்தமிழர் பிரச்சினையில் தலையிட்டு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவோம் என்றும் 28 ஆம் நாள் வரை காலக்கெடு விதிப்பதாக அனைத்து கட்சிக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்துப் பேசியது அனைத்து கட்சிக்கூட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அவர்கள் பேசிய தகவல் முழுவதுமாக வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் விரைவில் அனைத்து கட்சிக்கூட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

சென்னையில் நடந்த மனிதச்சங்கிலி தமிழக மக்கள் தமிழீழத்திற்கு ஆதரவாக இருப்பதாக அமைந்தது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினால் இந்திய அரசு நிலை தன்மைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே பதவி விலகுவது நல்லது அல்ல. அதே நேரம் இந்த முடிவை கைவிடாமல், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யும் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவதை தள்ளிப்போட வேண்டும்.

800 தொன் உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட பொருட்களை ஈழத்தமிழர்களுக்கு அனுப்ப உறுதிஅளிக்கப்பட்டுள்ளது. இதுவும் வெற்றிதான்.

ஆனால் 800 தொன் உணவுப் பொருட்களை செஞ்சிலுவை சங்கம் மூலமாகவோ, ஐ.நா. தொண்டு நிறுவனம் மூலமாகவோ மக்களை நேரடியாக சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். அவற்றை சிங்கள ஆட்சியாளர்கள் கையில் ஒப்படைப்பதால் பயன் இல்லை.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட பலர் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்பி வருகிறார்கள்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக நான் பேசியிருந்தால், அடிப்படை ஆதாரம் இருந்தால் முதலமைச்சரோ, தமிழக அரசோ தயக்கம் காட்ட வேண்டிய தேவையில்லை. தகவல் கொடுத்தால் சிறை வாசலில் நிற்க தயாராக இருக்கிறேன். இதனை முதலமைச்சருக்கு தோழமையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

கைதாவதற்கும், சிறை செல்வதற்கும் விடுதலைச் சிறுத்தைகள் அஞ்சமாட்டோம், பின்வாங்க மாட்டோம். அதேநேரம், என்னை கைது செய்தால் முதலமைச்சர் மீதோ, அரசு மீதோ வருத்தப்படவோ, ஆத்திரப்படவோ மாட்டேன். தேர்தல் கூட்டணி என்பது வேறு. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது என்பது வேறு. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நான் பேசியிருந்தால் என்னை கைது செய்ய துளியளவும் தமிழக காவல்துறை தயக்கம் காட்ட வேண்டாம்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்ட முடிவு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) சென்னையில் நடைபெறுகிறது. முதலமைச்சர் தலைமையில் ஈழத்தமிழர்களுக்கு உணவு, மருந்து சேகரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் தவணையாக 2 லட்சம் ரூபாவை முதலமைச்சரிடம் வழங்கினேன்.

இனப்படுகொலையை தடுத்து நிறுத்த போர் நிறுத்தம்தான் முதல் தேவை. இந்திய அரசு நினைத்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.


Comments