இரு வார கெடுவுக்குள் நடவடிக்கை- இல்லையேல் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர்: இந்திய அரசுக்கு தமிழக அனைத்து கட்சிக்கூட்டம் எச்சரிக்கை

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க இரு வார காலத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்றத்தின் 40 உறுப்பினர்களும் பதவி விலகுவர் என்று தமிழ்நாடு அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பாடு செய்திருந்த தமிழக அனைத்து கட்சிக்கூட்டம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தீர்மானங்கள் விவரம்:

தீர்மானம்: 1

இலங்கையில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிற இனப் படுகொலைக் கொடுமைக்கு உள்ளாகி ஆயிரக்கணக்கான தமிழ்க்குடும்பங்களில் பூவும் பிஞ்சும் போன்ற குழந்தைகள் கூட கொல்லப்பட்டு பூண்டற்றுப் போகிற அளவுக்கு நிலைமை நாளுக்கு நாள் பெருகி வருவதால் ஏற்கனவே கண்ணீர்க்கடலில் மிதக்கும் இலங்கைத் தமிழர்கள் சிங்கள இராணுவத்தின் தாக்குதலையும் கண்டு எங்களுக்கு அபயமளித்துக் காப்பாற்ற இந்த உலகில் நாதியே கிடையாதா? என்ற கவலையில், வாடி வதங்கி, இதற்கோர் விடிவு எப்போது ஏற்படும் என்று விழி கலங்கி வழி பார்த்து நிற்கின்றனர். இந்தப் போர் நிறுத்தப்பட்டு ஈழத்தில் அமைதியும் சகவாழ்வும் திரும்புவதற்கேற்ற நடவடிக்கைகளை இந்தியப் பேரரசு உடனடியாக எடுத்து அதனை நிறைவேற்றிட வேண்டும் என்று அனைத்து கட்சித் தலைவர்களின் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 2

இந்திய அரசு, இலங்கை அரசுக்கு ஆயுத உதவி, வழங்கி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பக்கத்து நாடு என்ற முறையில் நல்லெண்ண அடிப்படையில் இந்திய அரசால் வழங்கப்படும் இவ்வகை உதவிகள் - இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தி தமிழர்களை அழித்திடவே - இலங்கை அரசால் பயன்படுத்தப்படுவதால் அவற்றை மத்திய அரசு உடனடியாக நிறுத்திட வேண்டுமென்று இக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 3

இந்தத் தீர்மானங்கள் செயல்வடிவம் பெறவும் இலங்கையில் இரண்டு வாரக்காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யவும் இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிவிலக நேரிடும் என்பதை இந்த அனைத்து கட்சிக்கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது.

தீர்மானம்: 4

போர் நிறுத்தம் செய்யப்பட்டு, போரினால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக இடம்பெயர்ந்து வாழ்வதற்கும், உணவு, உறையுள், மருந்து போன்றவற்றை வழங்குவதோடு, மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் செய்வதற்கும் மத்திய அரசு முன்வரவேண்டுமென்று இந்தக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 5

மனிதாபிமான முறையில் பல்வேறு உதவிகளை வழங்க முன்வரும் தொண்டு நிறுவனங்களின் முயற்சிகள் வேறு வழிகளில் திருப்பி விடப்படாமல், பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாகச் சென்றடைவதற்கு ஏற்ற வகையில் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளின் துணையினை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 6

வாழ்வாதாரம் தேடி கடலுக்குள் மீன் பிடித்திடச் செல்லும் தமிழக மீனவர்களை - இலங்கைக் கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குவதும், சிறைப்பிடித்து மனிதநேயமற்ற முறையில் நடத்துவதும், கருணை துளியுமின்றி சுட்டுக்கொல்வதுமான கொடுமைகள் - தொடர்ந்து நடைபெற்று வருவதை அனைத்துக் கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் மிகவும் கண்டிப்பதோடு மனித நாகரிகமற்ற, மனித உரிமைகளை முழுவதுமாக மீறுகின்ற இச்செயல்களுக்கு மத்திய அரசு உடனடியாக நீடித்த நிலையான தீர்வொன்றை எட்டி, நடைமுறைப்படுத்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தின் முடிவில் முதல்வர் கலைஞர் கருணாநிதி நன்றி தெரிவித்து பேசியதாவது:

என்னுடைய அழைப்பினையேற்று மிக முக்கியமானதும், நம்முடைய உயிரோடும் ஊனோடும் கலந்ததுமான தமிழ் இனத்தைக் காப்பாற்றுவதற்காக ஈழத் தமிழகத்தில் நடைபெறுகின்ற போர் நிறுத்தப்படுவதற்காக நீங்கள் அனைவரும் ஒன்றாக வந்திருந்து ஒருமித்த கருத்தை வழங்கி, இந்திய அரசுக்கு ஓர் உந்துதலையும், இலங்கை அரசுக்கு ஓர் எச்சரிக்கையையும் வழங்கிய இந்த நிகழ்ச்சி உள்ளபடியே நம்முடைய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு அத்தியாயம் என்பதை நான் எடுத்துக் கூறி,

இந்தத் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட என்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வேன் என்பதையும் - நம்முடைய அனைத்துக் கட்சிகளின் தலைவர்களது ஒத்துழைப்பைப் பெற்று அந்த முயற்சியிலே நாம் வெற்றி பெறுவோம் என்பதையும் இந்தக் கூட்டத்திலே எடுத்துச் சொல்லி, வருகை தந்து, வண்ண வண்ணக் கருத்துகளை வழங்கிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்து இந்த அளவில் இந்தக் கூட்டத்தினை நிறைவு செய்கிறேன். வணக்கம் என்றார் கலைஞர் கருணாநிதி.


Comments