விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணிமனை, சமாதான செயலகம் சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் அழிப்பு


அனைத்துலக பிரதிநிதிகள், அனைத்துலக நிறுவனங்களின் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளை சந்தித்து உரையாடும் தமிழீழ அரசியல்துறை நடுவப்பணிமனை செயலகம், சமாதான செயலகம் என்பன சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி நகர மையத்தில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப்பணிமனை மற்றும் சமாதான செயலகம் அனைத்துலக நிறுவனங்களுக்கான விடுதலைப் புலிகளின் தொடர்பகம் அருகான மக்கள் குடியிருப்புக்கள் என்பன அமைந்துள்ள பகுதியை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் 16 குண்டுகளை வீசியுள்ளன.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் 12:50 நிமிடமளவில் வந்த இரண்டு வானூர்திகள் தாழப்பறந்து குண்டுகளை வீசியுள்ளன. வானூர்திகளால் வீசப்பட்ட 16 குண்டுகளும் வீழ்ந்து வெடித்துள்ளன.

இதில் தமிழீழ அரசியல்துறை நடுவப்பணிமனை, சமாதான செயலகம் அனைத்துலக நாட்டு நிறுவனங்களுக்கான தொடர்பகம் என்பன முற்றாக அழிந்தும் சேதமாகியும் உள்ளன.

2002 ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டின் பின் உருவான பேச்சுவார்த்தை காலம் தொடக்கம் அனைத்துலக பிரதிநிதிகள், அனைத்துலக நிறுவனங்களின் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் விடுதலைப் புலிகளை சந்தித்து பேச்சுக்களை நடத்தும் உரையாடும் இடமாக நடுவப்பணிமனை, சமாதானச்செயலகம் என்பன இயங்கி வந்தன.

இறுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனப் பிரதிநிதிகள் இங்குதான் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடியிருந்தனர்.

அனைத்துலக நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்துலக செஞ்சிலுவை சங்கக்குழுப் பிரதிநிதிகள் தமது பணி ஒழுங்கமைப்புக்களை விடுதலைப் புலிகளின் தொடர்பாளருடன் தொடர்புகொள்ளும் தொடர்பகமும் இப்பகுதியில் அமைந்திருந்தது. அதுவும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

மேலும் இப்பகுதியில் இருக்கும் பொதுமக்களின் 17 வீடுகளும் தாக்குதலில் அழிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டும் உள்ளன.

இதில் பொதுமக்கள் இருவர் கொல்லப்ப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர்.

பொதுமக்களுக்கான அரசியல் இராஜதந்திரச் செயற்பாட்டின் விடுதலைப் புலிகளின் மையத்தின் மீது சிறிலங்கா வான்படை நடத்திய அழிப்புத்தாக்குதல் அதன் தெளிவான முடிவை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

தங்கவேல் ரகு (வயது 30)

சுப்பையா சிவலிங்கம் (வயது 48)

இராசலிங்கம் சந்திரா (வயது 40)

ஐயாத்துரை மகாலிங்கம் (வயது 55)

சங்கரப்பிள்ளை ஆனந்தசிவம் (வயது 60)

சின்னக்குட்டி வேலும்மயிலும் (வயது 70)

சந்திரராசா வினோத் (வயது 15)

சிவகுருராசா டெனிஸ் (வயது 22)

மகேந்திரராசா சந்திரகுமாரி (வயது 14)

கருணாநந்தநேசராசா சந்திரசேனன் (வயது 24)

செல்வநாயகம் கந்தசாமி (வயது 64)

தேவகுருசேனன் குருகுலதேவன் (வயது 34)

சிவசற்குணராசா சங்கரன் (வயது 27)

விமலநாதன் சிவகாந்திமதி (வயது 18)

தேவராசா கருணாகரன் (வயது 21)

கோகுலராசா சண்முகதர்சினி (வயது 18)

ஆகியோர் இதில் காயமடைந்தனர்.

கொல்லப்பட்ட இருவரும் வீதியில் சென்று கொண்டிருந்தவர்கள் ஆவர். இவர்களின் பெயர் விவரம் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.






Comments