கபட நாடகம் ஆடும் ஜெயலலிதா: தமிழ்நாடு முதல்வர் கடும் கண்டனம்

ஈழத் தமிழர் விவகாரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா கபடம் நாடகம் ஆடி வருகின்றார் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து முதல்மைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தமிழக அரசு கூட்டிய அனைத்து கட்சிக்கூட்டத்திற்கு வைகோ வராவிட்டாலும், அனைத்து கட்சிக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட "இரண்டு வாரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு நிலையான அமைதிக்கான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்து இலங்கை தமிழர்கள் பாதுகாக்கப்பட இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும்" என்ற தீர்மானத்தை அவரும் ஏற்றுக்கொண்டுள்ள காரணத்தினால் தானே அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக தயார் என்று கூறியிருக்கிறார்?

ஆம், அவர் அனைத்து கட்சிக்கூட்டத்திற்கு வராவிட்டாலும், தனது உணர்வை வெளிப்படுத்தியிருப்பதை படிக்கும்போது நமக்கு புல்லரிக்கிறது. எனவே வரவேற்கத்தக்க அறிவிப்பு. ஆனாலும், ஒன்று "தி.மு.க.வினர் மத்திய மந்திரிகள் பதவியில் இருந்தும் விலக வேண்டும்" என்று அவர் கூறியிருக்கிறார்.

"நாடாளுமன்ற உறுப்பினர்" பதவியில் இருந்து விலகினால், மந்திரி பதவியும் தானாகவே போய்விடும் என்பது அவருக்கு தெரியாதா என்ன?. பா.ஜ.க. அமைச்சரவையிலே தி.மு.க. அங்கம் பெற்றிருந்தபோது, அமைச்சரவை பதவிகளைத்தான் துறந்து விட்டு டி.ஆர்.பாலு, ஆ.ராஜா ஆகியோர் வெளியே வந்தார்கள் என்பதை நினைவூட்டுகிறேன்.

அனைத்து கட்சிக்கூட்டத்தில் இலங்கை தமிழர்களுக்காக நாம் எடுத்த முடிவு கண்டு அங்கமெல்லாம் பதற அம்மையார் ஜெயலலிதா விடுத்துள்ள அனல் கக்கும் அறிக்கையில் "இலங்கையில் தற்போது நடக்கும் போர் விடுதலைப் புலிகள் என்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான போர். இந்த போரில் அங்கு வசிக்கும் அப்பாவித் தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் அமைப்பு அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாக செய்திகள் கூறுகின்றன" என்று குறிப்பிட்டிருக்கிறாரே?

அம்மையாரின் இந்த அறிக்கையை வைகோ ஏற்றுக்கொள்கிறாரா?

மக்களவை உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத் தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, மத்திய மந்திரிகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட அதில் இல்லை என்று ஜெயலலிதா அறிக்கையில் சொல்லியிருக்கிறாரே?

அம்மையார், முதலில் அந்த தீர்மானத்தை மீண்டும் மீண்டும் படித்து தெளிவு பெற வேண்டுகிறேன். "தீர்மானங்கள் செயல் வடிவம் பெறவும், இலங்கையில் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யவும் இந்திய அரசு முன்வரா விட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும்" என்றுதான் தீர்மான வாசகம் இருக்கிறதே தவிர, "மக்களவை உறுப்பினர்கள்" என்று இல்லை.

"நாடாளுமன்ற உறுப்பினர்கள்" என்பதில் மாநிலங்களவை உறுப்பினர்களும், மத்திய மந்திரிகளும் அடங்குவார்கள் என்பதை, நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்றில்லை. மாநிலங்கள் அவை உறுப்பினர்களுக்கும் அத்தீர்மானம் பொருந்தும் என்பதால் தானே, கனிமொழி 29-10-2008 நாளிட்டு தனது பதவி விலகல் கடிதத்தை இன்னும் இரண்டு வார காலக்கெடு இருந்த போதிலும் முன்கூட்டியே அனுப்பியிருக்கிறார்.

தமிழினத்தை இலங்கையில் அழிந்து போகாமல் காப்பாற்ற தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற அனைத்து கட்சிக்கூட்டத்தை, கண்துடைப்பு நாடகம், கபட நாடகம், மோசடி நாடகம், செவிடன் காதில் ஊதிய சங்கு என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா; அதே அறிக்கையில் "கபட நாடகம்'' என்ற சொற்றொடரை மட்டும் பத்து இடங்களுக்கு மேல் பயன்படுத்தியிருக்கிறார்; அதோடு விடாமல் "தனக்கும் கபட நாடகத்தை அரங்கேற்ற தெரியும் என்பதை கனிமொழி நாட்டு மக்களுக்கு உணர்த்தியிருப்பதாக" ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளது பற்றி?

"இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று", இந்த குறளின் பொருளை அம்மையார் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே என் எண்ணமாகும்.

"உண்மையிலேயே கனிமொழிக்கு இலங்கை தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், ராஜ்ய சபா தலைவரிடம் தன் பதவி விலகல் கடிதத்தை இன்றைய நாளிட்டு கொடுத்திருக்க வேண்டும்" என்கிறாரே ஜெயலலிதா?

அனைத்து கட்சி தலைவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு உரிய விளைவு ஏற்பட, அந்த கூட்டத்திலேயே, அந்தத் தீர்மானத்திலேயே இரண்டு வாரங்கள் காலக்கெடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜெயலலிதா காலக்கெடுவைப் பற்றி கவலைப்படாமல் பதவி விலகல் கடிதத்தை உடனடியாக மாநிலங்கள் அவைத் தலைவரிடம் கனிமொழி ஏன் கொடுக்கவில்லை என்று கேட்கிறார். ஜெயலலிதாவின் அவசரத்திற்கு காரணம், இலங்கை தமிழர் பிரச்சினையின் மீதுள்ள அக்கறை அல்ல, கனிமொழி எப்படியாவது மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியில் இருந்து இந்த காரணத்தையொட்டி வெளியே வந்துவிட மாட்டாரா என்ற நல்லெண்ணம் (?) தான் காரணம்.

"பொழுது போக்குக் கூட்டம் போல அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது", மத்திய அரசுக்கு இரண்டு வார கால அவகாசம் கொடுத்திருப்பது மிகப்பெரிய மோசடி நாடகம், என்றெல்லாம் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

தமிழகத்தில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் கலந்து கொண்டு மூன்றரை மணி நேரத்திற்கு மேல் செலவிட்டு விவாதித்த கூட்டத்தை அம்மையார் பொழுது போக்கு கூட்டம் என்கிறார்!. இதற்கு அந்த தலைவர்கள் தான் பதில் கூற வேண்டும்.

தற்போது மத்தியில் உள்ள அரசு கருணாநிதி சொன்னதை செய்யக்கூடிய அரசு என்று ஜெயலலிதா சொல்லியிருப்பதை பற்றி?

வாஜ்பாய் அமைச்சரவையில் அ.தி.மு.க. அங்கம் வகித்த போது பிரதமரை ஒருநாள் கூட அமைதியாக தூங்க விடாமல் செய்தவர் ஜெயலலிதா. அதற்கு மாறாக தற்போதுள்ள கூட்டணி அரசு தோழமை உணர்வுடன் செயல்படுகிறது என்பதை சொல்கிறார் போலும்!.

இலங்கை தமிழர் பிரச்சினை பற்றியும், அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் பற்றியும், கருத்து வெளியிட்டு அறிக்கை வழங்கியுள்ள ஜெயலலிதா மத்திய மந்திரிகள் மூலமாக கருணாநிதிக்கு வருமானம் வருகிறது என்று கூறியிருக்கிறாரே?

தன்னைப் போலவே பிறரை நினைக்கும், தயாபரி அல்லவா, ஜெயலலிதா!.

கருணாநிதியின் கபட நாடகத்தை கண்டு தமிழர்கள் ஏமாறத் தயாராக இல்லை என்று அறிக்கையில் ஜெயலலிதா சொல்கிறாரே?

"கபடம்" என்றால் "வஞ்சகம்" என்று அகராதியில் பொருள் கூறப்பட்டுள்ளது. அந்த பொருளுக்கு தமிழகத்திலே பொருத்தமானவர் யார் என்பதை தமிழர்கள் நன்றாகவே அறிவார்கள். ஜெயலலிதாவின் அறிக்கையை யாராவது பாராட்டுவார்களா?, ஏன் பாராட்ட மாட்டார்கள்?

இதோ, இன்று வெளிவந்துள்ள "ஹிந்துஸ்தான் ரைம்ஸ்" ஆங்கிலப் பத்திரிகையில் ஜெயலலிதா நம்முடைய தீர்மானத்திற்கு பதிலாக வெளியிட்ட மறுப்பறிக்கையை பாராட்டி, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ச என்பவர் கொடுத்த பேட்டி வெளிவந்துள்ளது.

அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?. "நிலைமையை நாங்கள் கவனித்து வருகிறோம். இந்திய அரசு ஏதாவது அறிக்கை வெளியிடுகிறதா என்பதை நாங்கள் பார்ப்போம். அது மாத்திரமல்ல, கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதா பேசியிருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்".

இந்த அளவிற்கு சிங்கள அரசுக்கு ஆதரவாக ஜெயலலிதா இருப்பதை அவர்களே ஒத்துக்கொண்டு சொல்லியிருப்பதைப் படிக்கும்போது, தமிழா, இப்போதாவது புரிகிறதா?. உண்மையில் காட்டிக்கொடுக்கின்ற கபட நாடகம் ஆடுவது யார் என்று?.

ஆதாரம்: தினத்தந்தி

Comments