ஈழத்தில் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதுடன் பசியுடனும் போரடி வருகின்றனர் - சுப. வீரபாண்டியன்




சென்னையில் நடைபெற்ற மற்றைய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுசெயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், ஈழத்தில் தாயக உரிமைக்காக இராணுவத்துடன் போராடி வரும் நமது தமிழர்கள் ஆயுதம் ஏந்தி போராடுவதுடன், பசியுடனும் போராடி வருகிறார்கள் என்பது தான் உண்மை.

இதனை சர்வதேச சமுகம் உணர்ந்து கொண்டு, பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். ஈழத்தில் இறையாண்மை பாதிக்கப்படக்கூடாது என்று சிலர் வலியுறுத்துகிறார்கள். அவர்களுக்காக சில விளக்கங்களை முன் வைக்கிறேன். சுவீடன் நாட்டிலிருந்து நோர்வே பிரிந்து சென்ற போது சுவீடனின் இறையாண்மை பாதிக்கப்படவில்லையே. அதே போல் இந்தோனேஷியாவிலிருந்து கிழக்கு தைமுர் பிரிந்து சென்றபோது இந்தோனேஷியாவின் இறையாண்மை பாதிக்கப்படவில்லையே.

அதனால்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன், சிறி லங்காவில் இருந்து தனி ஈழம் பிரிவதால் அந்நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படாது. அதையும் மீறி “இறையாண்மை’ என்று சொல்வது தமிழர்களுக்கு உரிமை வழங்க மறுப்பதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதம் என்றே பொருள் கொள்ளலாம்.

எந்த ஒரு நாட்டையாவது மற்றொரு நாடு தாக்கினால்இ பிறிதொரு நாடு தாக்குதலுக்கு ஆளாகும் நாட்டை தாங்கும். சமீபத்தில் தாக்குதலுக்கு ஆளான ஈராக் வரை இது தான் வரலாறு.

ஆனால்இ உலகத்தில் உள்ள எந்த நாடும் ஆதரிக்காமல், மண்ணின் உரிமைக்காக தொடர்ச்சியாக, தளர்ச்சியில்லாமல் போராடுவது நம் ஈழ மக்கள். உலக நாடுகளில் ஒன்று கூட இதனை ஆதரிக்காததேன்? ஏனெனில் எந்த ஏகாதிபத்தியத்திற்கும் அடிபணியாமல் தேச விடுதலைக்கான போராட்டம் இது என்பதே காரணம்.

ஒரு கட்டத்தில் இது போன்ற போராட்டங்கள் தனது நிலையை மாற்றிக்கொண்டு, மக்கள் வீறு கொண்டு எழப்போகிறார்கள். இதற்காக கட்சி அரசியல் நடத்துகிறவர்கள் இப்போதாவது விழித்துக்கொள்ளவில்லையென்றால், அதிலும் குறிப்பாக மதசார்பின்மை பேசும் காங்கிரஸ் கட்சி விழித்துக் கொளளவில்லையென்றால் அந்த கட்சி இந்த மண்ணிலிருந்து அந்நியப்பட்டுப் போகும்.

இப்பிரச்சினையில் தமிழக ஊடகங்களும், இந்திய ஊடகங்களும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுகின்றன. இந்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் ஆகியவை தொடர்ந்து முன்னெடுக்கப்படும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக யார் போராட்டம் நடத்தினாலும் அதனை வரவேற்போம். நாடு அடைவது உறுதி என்றார்.

Comments