தங்கங்களே தமிழகச் சிங்கங்களே! உங்களால் செய்ய முடியும்! செய்து முடியுங்கள்!

- வன்னித்தம்பி தங்கரத்தினம் -


தமிழ் இனத்தோடு பிறந்தது தன்மான உணர்வு. அதற்குச் சமாதி கட்ட இனவெறிச் சிங்களம், இந்திய மத்திய அரசின் ஆதரவோடு உலக நாடுகளே உதவிகளையும் பெற்று தமிழனைப் பயங்கரவாதிகளாக்கி விட்டது.

இன்று சிங்கள அரசு இந்திய மற்றும் பிற அரசுகளின் ஆயுத வளங்களைப் பெற்று ~பயங்கரவாதத்துக்கு எதிரான போர்| பெயருடன் ஈழத் தமிழின அழிப்பைச் செய்து வருகின்றது. வெளியே அமைதி வழிதான் தீர்வு என இரண்டு அரசுகளும் கூறிக்கொண்டே மறைமுகமாக போர் மூலம் தமிழின அழிப்பைச் செய்து வருகின்றன.

இவையே இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளரின் செயற்பாடு என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் அம்பலப்படுத்தி உள்ளன. 1987 இல் ராஜீவ் காந்தி செய்து கொண்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்துடன் தொடங்கிவிட்ட இதனை, இந்திய அமைதிப்படை வரவாலும் அதனால் சந்தித்த இழப்புகளாலும் ஈழத் தமிழினம் அறிந்து கொண்டது.

இலங்கையரசின் சூழ்ச்சி வலைக்குள் சிக்கிச் சீரழிந்தது ஈழத் தமிழினம் மட்டும் அல்ல. இந்தியாவும் இந்திய மக்களும்தான் என்பதை வெளிவராத பல இரகசியங்கள் வெளிப் படுத்தும் காலம் ஒன்று கட்டாயம் வரும்.

அப்போது இந்திய வெளியுறவுக் கொள்கையினால் ஈழத் தமிழினம் பட்ட துன்ப துயரங்கள், கொடுத்த விலை மதிக்க முடியா உயிர்கள், சிந்திய இரத்தமும் கண்ணீரின் அளவும் எத்தகையன என்பதை உலகம் அறிந்து கொள்ளும்.

பழைய புண்ணைக் கீறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலைக்கு இது ஏற்ற தருணம் அல்ல. பேரறிஞர் அண்ணாவின் வார்த்தைகளில் சொல்வதானால் 'நடந்தவை நடந்தவைகள் ஆகட்டும். இனி நடப்பவை நல்லவைகள் ஆகட்டும்.

கடந்த 17 வருடங்களாக ஈழத் தமிழினம் சிங்களத்தின் மிக மோசமான இன அழிப்புப் போருக்கு முகம் கொடுத்து இன்று எவருடைய ஆதரவும் இல்லாது அழிந்து கொண்டிருக்கிறது.

கடந்த ஒரு வருடத்துக்கு மேலாகத் தரைவழிப் படை நடத்தி வெற்றி கொள்ள முடியாத சிங்களம் தொலைவில் இருந்து எறிகணைகளை வீசி விமானத்திலிருந்து குண்டுகள் போட்டு அப்பாவி மக்களை விரட்டியும் கொன்றும் காயப் படுத்தியும் பேர் அவலத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியா கொடுக்கும் உதவியையும் ஆதரவையும் கொண்டு கிழக்கு மாகாணத்தில் பேரழிவுகள் மூலம் தமிழ்ப் பொதுமக்களை விரட்டிக் கைப்பற்றிய பகுதியில் வட இந்திய முதலீடுகளை ஏற்படுத்தி அதன் முலம் இந்து - முஸ்லீம் மக்களின் பாரம்பரிய கிராமங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி புத்த விகாரைகளையும் கட்டி இலங்கையின் இனவெறி அரசு தமிழனை அடக்கி ஆட்சி செய்கிறது. அங்கே ஆயுதமுனைத் தேர்தல்களை நடத்தி பொம்மை ஆட்சியாளர்களை உருவாக்கி அதனையே மக்கள் ஆட்சி என்கிறது.

இன்று அதே வழியில் மன்னார் மற்றும் வன்னிப் பிரதேசங்களில் உள்ள தமிழ்ப் பொதுமக்களை விரட்டி அவர்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரித்துவிட எல்லா வழிகளையும் நாடித் தவிக்கிறது.

மக்களின் உண்மை மனநிலையை உலகம் அறிய முடியாத வகையில் சுதந்திரமான ஊடகமோ வெளிநாட்டு அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களோ அப்பகுதிகளில் செயற்படவிடாது தடுத்து நிற்கிறது. அவலத்துக்குள் உள்ளாக்கி விட்டால் தமிழ் மக்கள் புலிகளை விட்டுத் தமது பக்கத்துக்கு வருவர் எனப் போட்ட அரசின் கணக்குத் தப்பாகிப் போய் விட்டது.

வருவார்கள் என அரசு திறந்து வைத்த 3 அகதி நிலையங்களில் சில நூறு பேரே சிக்கி உள்ளனர். மற்றவர்களைப் புலிகள் வெளியே வரவிடுவது இல்லை என அரசு பிரச்சாரம் செய்கிறது.

அதனையே வேத வாக்காக சோ, இந்து ராம் போன்ற பேர்வழிகள் மறு பிரச்சாரம் செய்கின்றனர். அரசு போர்ச் சூனியப் பிரதேசம் என அறிவித்து அதனூடாக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வாருங்கள் எனத் தமிழ் மக்களை வருந்தி அழைத்தும் ஏன் எவரும் போகவில்லை? எதற்காக உயிர் போகும் மிக ஆபத்தான கடற் பயணத்தை மேற்கொண்டு குற்றுயிரும் குலையிருமாக இறந்தவரும் பிழைப்பவருமாக அவர்கள் தமிழகத்துக்கு வருகிறார்கள்?

அப்படித் தமிழகம் வரும் தமிழ்ப் பொதுமக்களைப் புலிகள் ஏன் தடுக்கவில்லை? இவற்றுக்கான விடையைச் சோ, இந்து ராம் போன்றவர்கள் தேட மாட்டார்கள். அது அவர்களின் சிந்தனைப் பாரம்பரியத்துக்கு அப்பாற்பட்ட விடயம்.

வன்னிப் பகுதிகளில் பல மக்களின் உயிர்களைப் பறிக்கும் இலங்கை அரசின் ஆழ ஊடுருவும் அணிகளால் கூடவா இந்த மக்களை அரச பகுதிக்கு அழைத்து வர முடியாது?; யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரிகோணமலை, கொழும்பு போன்ற பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் இலங்கை அரசின் பாதுகாப்புப் படைகளாலும் ஆயுதக் குழுக்களாலும் அல்லும் பகலும் படும் அவதி எத்தகைய கொடுமை நிறைந்தது என்பது வன்னி மக்களுக்கு நன்கு தெரியும்.

அங்கே நிலவும் நீதி பரிபாலனத்தை முன்னாள் தமிழக தலைமை நீதிபதி பகவதி அவர்களை விடவும் அதிகம் தெரிந்தவர் யாரும் இருக்க முடியாது. இத்தகைய சூழலில் இனவெறி அரசியல் பேசும் சிங்கள இராணுவத் தளபதியாலும் போர்க்குரல் எழுப்பும் அரசியல் வாதிகள் மற்றும் புத்த மதக் குருமாராலும் வழிநடத்தப்படும் இரத்த வெறிப் போருக்கு ஈழத் தமிழினம் முகம் கொடுக்கிறது.

ஈழ மக்களின் கையறு நிலையைத் தமிழகத்தில் மூடி மறைத்துச் சிங்களத்துக்கு உதவும் மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளரின் சதிக்குத் தமிழகத் தமிழ் கட்சிகளும், தமிழ் மக்களும் பலியாகிறார்கள்.

இந்த உண்மைகளைத் தமிழகத் தமிழர்கள் தெரிந்து கொண்டு விட்டார்கள். அண்மைக்கால மக்கள் கருத்தெடுப்பு முடிவுகள் மிகத் துல்லியமாக தமிழக மக்கள் மனநிலையையும் அவர்கள் ஈழத் தமிழர் மீது கொண்டுள்ள அக்கறையையும் அன்பையும் மிக ஆழமாக வேரூன்றிய உணர்வுகளையும் காட்டுகின்றன.

கும்பிட்ட தெய்வங்கள் கூட ஈழத் தமிழினத்தைக் கைவிட்டுள்ள நிலையில் தமிழக மக்களின் எழுச்சி எமது வயிற்றில் பாலை வார்ப்பது போல் உள்ளது. தப்போ தவறோ செய்யாத மனிதனோ அவன் சார்ந்த இனமோ உலகில் இருக்க முடியாது. 'குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என தமிழ் மூதாட்டி ஒளவையும் சொன்னாள்.

எல்லாவற்றையும் மறந்து, காலத்தின் தேவை கருதி, ஞாலத்திலும் பெரிய உதவியாக உங்கள் அன்புக்கரங்களை நீட்டி உள்ளீர்கள். தமிழ் இனத்துக்கு ஏற்பட இருக்கும் மிகப் பெரும் அவமானத்தை, இனத்தின் ஒட்டுமொத்த அழிவை என்ன விலை கொடுத்தேனும் தடுக்க வேண்டும்.

இது தமிழனாகப் பிறந்த ஒவ்வொரு உலகத் தமிழனின் தன்மானத்துக்கும் விடப்பட்டுள்ள சவாலாகும். இதனை உணர்ந்து எமக்காகத் தமிழகத்தில் குரல் கொடுக்கும் சகல அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், திரைத்துறையினர், சட்டவாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களையும் ஈழத் தமிழினம் என்றென்றும் நன்றியோடு நினைவு கொள்ளும்.

தமிழக அரசியல் கட்சிகளின் ஈழப் பிரச்சினை தொடர்பான கருத்துகளும் ஒத்த கருத்தின்மையும் இந்திய மத்திய அரசுக்கு காலத்தை இழுத்தடித்து மகிந்தவுக்கு தேவையான போருக்கான கால நீடிப்பைப் பெற்றுக்கொடுக்கும் என்பது ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.

தமிழகத்தின் முக்கிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை தமக்குள் முரண்டு பிடிக்கும் நிலையில் ஏனைய கட்சிகள் எழுப்பும் குரலால் எந்த அளவுக்கு வலுவான அழுத்தம் உருவாகும் எனக் கூறமுடியாதுள்ளது.

இந்தியாவால் இலங்கைத் தமிழருக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொள்ளவோ அல்லது தமிழ் மக்கள் ஏற்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க இலங்கை அரசை நிர்ப்பந்திக்கவோ கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை என்பதே யதார்த்தம்.

சர்வதேச அரசுகளின் ஆதரவைப்பெற்றே இந்திய மத்திய அரசால் இலங்கையை ஒரு வழிக்குக் கொண்டுவர முடியும். ஆனால் இந்தியா சர்வதேச அளவில் இலங்கையை இழுக்கும் அளவுக்கு அக்கறை கொள்ளுமா என்பது சந்தேகமே.

தமிழீழத்; தாயகத் தேச மீட்டெடுப்பை முன்னெடுக்கத் தமிழகத் தமிழர் மாநில அரசையும் மத்திய அரசையும் நிர்ப்பந்தித்தால் அல்லாது இன்றுள்ள எழுச்சி நிலை பிசுபிசுத்து விடும்.

வெளிநாடுகளும் பாராட்டும் வகையில் கடந்த 15 வருடங்களாக செயற்பட்டு வரும் ஆட்சி நிர்வாகத்திறனோடு கூடிய தனி அரசையும்;, தமிழ் மக்களையும் அழித்த அவப்பெயர் இந்தியாவுக்கு ஏற்படாது தடுக்கும் ஆற்றல் தமிழகக் கட்சிகளுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் மாத்திரமே உள்ளது.

எமது அன்பான தொப்புள் கொடி உறவுகளே!

ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஏற்று தமிழீழத் தனியரசை இந்திய மத்திய அரசை அங்கீகரிக்கச் செய்வதிலேயே எங்களின் வாழ்வும், வளமும், வருங்காலமும் தங்கியுள்;ளது.

உலகில் ஒரு தமிழ் அரசு உருவாகவும் ஈழத் தமிழினத்தை அழிவிலிருந்து காப்பாற்றவும் தமிழக உறவுகளே உங்களால் மட்டுமே முடியும். செய்வீர்களா? செய்ய வேண்டும்! செய்வீர்கள்! செய்து முடியுங்கள்!.

நன்றி: நிலவரம்

Comments