ஈழத்தில் அமைதி காண சென்னையில் பிரமாண்ட மனித சங்கிலி அணிவகுப்பு: தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு

ஈழத்தில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை நிறுத்தப்பட்டு அமைதி காண சென்னையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரமாண்ட மனித சங்கிலி அணிவகுப்பு நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

நமது தமிழின மக்கள் இலங்கையில் படும் தொல்லைகள்- கொடிய துன்பங்களில் இருந்து விடுபட்டு- இனப்படுகொலை நிறுத்தப்பட்டு- நிலையான அமைதி காண்பதற்கு தமிழக அரசின் சார்பில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சிக்கூட்டத்தின் ஆறு தீர்மானங்களையும் நினைவூட்டி வலியுறுத்திட- அனைத்து கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன் -

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21.10.08) பிற்பகல் 3:00 மணி தொடக்கம் சென்னையில் மாபெரும் மனித சங்கிலி அணிவகுப்பு நடைபெறும்.

அந்த அணிவகுப்பில் சென்னையில் உள்ளவர்கள் மாத்திரமல்லாமல்- பிற மாவட்டங்களில் உள்ளவர்களும் கலந்து கொள்ளக்கூடிய பிரமாண்டப் பேரணியாக அது அமையும் என்பதால் எல்லா மாவட்டங்களில் இருந்தும் வந்து கலந்து கொண்டு மனிதச் சங்கிலியை பெருமளவில் நடத்திட- அனைத்து கட்சியினரும் குறிப்பாக மகளிர்- மாணவர்கள்- தொழிலாளர்கள்-வணிகர்கள்- விவசாயிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


Comments