இலங்கை தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை இன்றைய சூழ்நிலையில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் என்றாலும் சரி மன்மோகன் சிங் அரசாங்கம் என்றாலும் சரி தமிழக மாநில கருணாநிதி அரசாங்கம் என்றாலும் சரி தத்தம் சுயநல அரசியல் இலாபம் கருதியே காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. அதாவது தத்தம் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வது மற்றும் எதிர்காலத் தேர்தல்களில் வெற்றியீட்டுவதற்கான வியூகங்களை வகுத்துக் கொண்டே அவர்கள் செயற்பட்டு வருகின்றனர் என்பது வெள்ளிடை மலை.
ராஜபக்ஷ அரசாங்கத்தின் கைங்கரியங்கள்
முதலாவதாகப் பார்ப்போமானால் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் கிடையாது என்பதை நிச்சயமாகக் காண முடிகிறது. எனவே தான் இராணுவ முனைப்பையே அரசாங்கம் நாளொரு வண்ணமாக வேகப்படுத்தி வந்துள்ளது. விமானக் குண்டு வீச்சு மட்டும் 6000 தடவைகளுக்கு மேலாக நடத்தப்பட்டதாக அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறிவைத்தது ஞாபகத்திற்கு வருகிறது. இவ்வளவு பெருந்தொகையான குண்டு வீச்சுகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு குண்டும் துல்லியமாக வீசப்பட்டு விடுதலைப் புலிகளின் இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டதாகவே அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருந்தன. அப்படியிருந்தும் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படவில்லை என்பதை யாரும் அறிவர். மாறாக ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் வகைதொகையின்றிக் கொல்லப்பட்டுள்ளனர். சில குடும்பங்கள் பூண்டோடு அழிக்கப்பட்டு விட்டன. ஏறத்தாழ 2 1/2 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து பலர் வானமே கூரையாகக் கொண்டு போதிய உணவு, மருந்து இன்றி சொல்லுந்தரமற்ற சுகாதாரச் சீர்கேடுகள் மத்தியில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அன்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நேரடியாகப் பேசத்தயாரென்று பிரகடனப்படுத்திப் பயணிக்கத் தொடங்கியவராகிய ஜனாதிபதி ராஜபக்ஷ இன்று பிரபாகரனை முழங்காலடிக்குக் கொண்டு வருவேன் உயிரோடு பிடித்தால் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைப்பேன் என்றெல்லாம் பறைசாற்றி வந்துள்ளார். அத்தோடு விடுதலைப் புலிகள் ஒவ்வொருவரும் கொல்லப்படும் வரை அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு அங்குல நிலமும் கைப்பற்றப்படும் வரை இராணுவ நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது எனவும் அவர் சபதம் செய்துவிட்டார். விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கும் கிளிநொச்சியைக் கைப்பற்றும் நாள் நெருங்கி விட்டது. அங்கேயுள்ள கட்டிடங்கள் கண்ணுக்குத் தெரியத் தொடங்கிவிட்டது என்றெல்லாம் கடந்த சில மாதங்களாகக் கூறப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணச் சபைத் தேர்தல் பிரசாரத்தின் போது தேர்தல் தினமான 23.08.2008 ஆம் திகதியளவில் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டு விடும் என குறிப்பாக பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க வெகு ஆக்ரோஷமாகப் பிரசாரம் செய்தவர்.
இவ்வாறாகவெல்லாம் வெற்றி நிச்சயம் என தென்னிலங்கை மக்களை மயக்கி முன்னொருபோதும் இல்லாதளவு பணவீக்கம் சாதாரண உழைக்கும் மக்களை அதாவது. பெரும்பான்மையான ஏழை எளிய மக்களைத் திணற வைக்கும் வாழ்க்கைச் செலவு போன்ற இன்னோரன்ன சுமைகளுக்கு எதிராக மூச்சுவிடாமல் அமிழ்த்தி வைத்திருப்பதில் அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது. ஆக, அவர்களின் மயக்கம் தெளிந்து விடக்கூடாது அவர்கள் தரப்பிலிருந்து ஆர்ப்பாட்டங்களுக்கோ முறுகல் நிலைமைகள் உருவாகுவதற்கோ இடமளித்து விடக்கூடாது என்பதற்காக தீவிரமான பிரசாரப் போர் ஒன்றையும் ராஜபக்ஷ அரசாங்கம் நடத்தி வருகின்றது. இதனிடையில் யுத்த நிலைமை தொடர்பாக அரசாங்கம் தமக்கு இருட்டடிப்புச் செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) தரப்பினர் புழுங்குகின்றனர். ஐ.தே.க. ஆளுங்கட்சியல்ல என்பதால் பாதுகாப்பு விடயங்கள் ஒன்றுமே அக்கட்சிக்கு அறிவிக்க வேண்டியதில்லை என அரசாங்கத் தரப்பினர் கதை சொல்லி முடித்து விடுகின்றனர்.
தமிழகத்தில் நடப்பவை மன்மோகன் சிங் அரசாங்கத்தின் போக்கு
அடுத்ததாக இலங்கை அரசாங்கத்தின் கோரப்பிடியிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காகவெனவும் தமிழ் மக்கள் இனப் படுகொலைக்கு ஆளாக்கப்படுவதைத் தடுப்பதற்காகவென இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்து அவல வாழ்க்கை நடத்தும் துயர் துடைப்பதற்காகவெனவும் தமிழக மாநிலத்தில் வெடித்துள்ள போராட்டத்தை முதல்வர் கருணாநிதி தனது கையில் எடுத்துள்ளார். மத்தியில் மன்மோகன் சிங் கூட்டரசாங்கத்தில் தி.மு.க. அங்கம் வகித்து வருவதால் மத்திய அரசாங்கம் வீழ்ந்து விடக் கூடாது என்பதில் கருணாநிதி குறியாயுள்ளார் என்பது கண்கூடு. எதிர்வரும் மத்திய மாநிலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டே கருணாநிதி தற்போது களமிறங்கியிருக்கிறார் எனலாம். உண்மையில் நாம் முன்பும் சுட்டிக் காட்டியது போல் 02.10.2008 ஆம் திகதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் தலைமையிலேயே இலங்கைத் தமிழர் பிரச்சினை மீது ராஜபக்ஷ அரசாங்கத்தின் மோசமான அணுகுமுறைக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடக்கூடாது என்ற அங்கலாய்ப்பிலேயே கருணாநிதி 14.10.2008 ஆம் திகதி சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டி தனது கையை மேலோங்கச் செய்வதற்கு முனைந்தவர். அக்கூட்டத்திலேயே எரியும் இலங்கைப் பிரச்சினையில் மன்மோகன் சிங் அரசாங்கம் தலையிட்டுத் தீர்வு காண்பதற்கு உழைக்க வேண்டும். இருவார காலத்தில் யுத்த நிறுத்தம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினத்தில் கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனையின் பேரிலேயே மத்திய அரசாங்கத்திற்கு காலக்கெடு விதிக்கப்பட்டது. அத்தோடு, காலக்கெடுவைக் கணக்கில் எடுத்து நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் 40 தி.மு.க. சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் இராஜிநாமா செய்ய வேண்டுமென்றும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் முன் திகதியிடப்பட்ட (29.10.2008) இராஜிநாமா கடிதங்கள் கருணாநிதியிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளன. அது மத்திய அரசுக்கான மிரட்டல் அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.!
நிற்க, இலங்கைத் தமிழர் படுத்தப்படும் பாடு தொடர்பாக கருணாநிதி வெதும்பி வருகிறார் என அறியப்படுகிறது."தமிழ் இனத்தின் எதிர்காலத்தை எண்ணி ஏங்குகிறேன் உறக்கமின்றித் தவிக்கிறேன். இந்த இனப்படுகொலையை என்ன விலை கொடுத்தாவது தடுப்போம்'. என அவர் உருக்கமான அறிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் தனது தலைமையில் மேற்கொள்ளப்படவுள்ள மனிதச் சங்கிலிப் போராட்டத்தின் நிமித்தம் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தான் ஆரம்பகாலம் முதல் அக்கறை காட்டி வந்துள்ளதைச் சித்திரித்து விலாவாரியான அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். அ.இ.அ.தி.மு.க. தலைவியும், கருணாநிதியின் பரம வைரியுமாகிய ஜெயராம் ஜெயலலிதா கடுமையாகச் சவால் விட்டு, கருணாநிதிதான் முதலில் இராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் சீண்டியுள்ளார். அதேநேரத்தில் விடுதலைப்புலிகளுக்கு தான் எதிராயிருந்தபோதும் இலங்கைத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார். மறுபுறத்தில் 1971 இல் அன்றைய இந்திய அரசாங்கம் பாகிஸ்தானில் தலையிட்டு பங்களாதேஷ் நாட்டை உருவாக்கியது போல் ஏன் இன்று மத்திய அரசாங்கம் இலங்கை பிரச்சினையில் தலையிடக்கூடாது. என்றும் கருணாநிதி குரல் எழுப்பியுள்ளார்.
இந்திய மத்திய அரசாங்கம் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு இராணுவரீதியான பலதரப்பட்ட உதவிகளை வழங்கிவந்தது பகிரங்க இரகசியமாகும். "இந்தியா எப்போதும் எம்பக்கமே தான். விடுதலைப்புலிகளை நசுக்குவதற்கு இந்தியா எமக்கு அதிகளவில் உதவியுள்ளது என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் சகோதரருமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ அண்மையில் "சண்டே ஒப்சேவர்' பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசாங்கத்தின் கொள்கை எதுவோ, அது தான் எமது கொள்கையும் என கருணாநிதி கூறிவந்ததை நாம் அறிவோம். தற்போது என்னவென்றால் பங்களாதேஷ் உருவாக்கப்பட்டு உதாரணத்தைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு கருணாநிதி சிறு பிள்ளைத்தனமாகச் சிந்திக்கிறார். எதிர்வரும் தேர்தலிலும் பதவியைக் கைப்பற்றும் நோக்கில் கருணாநிதி வெகு "சாமர்த்தியமாக' காய்கள் நகர்த்தி வருகிறார் எனலாம்.
எது எப்படியாயினும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புகளும் உணர்வலைகளும் முன்னெப்போதையும் விட, அரசியல் கட்சிகளையும் தாண்டி திரையுலகத்தினர், சட்டத்தரணிகள், மாணவர்கள் போன்ற பிரிவினரின் பங்களிப்பும் கிட்டியுள்ளது. எனவே மத்திய அரசாங்கமும் வாழாவிருக்க முடியாதென்ற தர்ம சங்கட நிலையில் இன்று சற்று சூடாக ராஜபக்ஷ அரசாங்கத்தை அணுகியுள்ளது.
"இராணுவ நடவடிக்கைள் மூலமோ களமுனை வெற்றிகள் மூலமோ இயல்பு நிலையை மீளச் செய்ய முடியாதென நாம் இடையறாது எடுத்துக் கூறிவந்துள்ளோம். இலங்கையில் உள்ள ஒவ்வொரு சமூகத்தினரும் தம்மகத்தே பொதிந்திருக்கும் அறிவாற்றல்களை முழுமையாக வெளிக்கொணர்வதற்கான வகையில் சமாதானமான பேச்சுவார்த்தைகள் மூலம் அரசியல் தீர்வு காணப்படுவதே அவசியமாகிறது' என இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் சற்று காட்டமாகக் கூறப்பட்டுள்ளதாவது பின்வருமாறு, "இலங்கை நிலைமை தொடர்பாக இந்தியா கடுமையாக விசனமடைந்துள்ளது. அங்கே தொடர்ந்து கொண்டிருக்கும் நெருக்கடி (யுத்தம்) காரணமாக ஒன்று மறியாத சாதாரண பொது மக்கள் மீது சுமத்தப்படும் மனிதாபிமான ரீதியான பாதிப்புகள் தொடர்பாக நாம் நிச்சயமாக கவலை கொண்டுள்ளோம். அவர்களின் உரிமைகள் மதிக்கப்படுவது, அவர்கள் தாக்குதல்களால் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அவர்களுக்கு கிடைக்கச் செய்வது அவசியமாகும்'.
மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட அப்பாவிமக்களின் அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற விடயங்கள் தொடர்பாக இந்திய அரசாங்கம் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இலங்கையில் மனிதாபிமான நிலைமைகளை மேம்படுத்துவதற்குத் கைகொடுக்கும். இது விடயமாக இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு மட்டங்களில் இந்திய அரசாங்கம் தனது நிலைப்பாட்டினைத் தெரிவித்துள்ளது எனவும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா பிரேசில் தென்னாபிரிக்கா உச்சி மாநாடு சென்ற வாரம் இடம் பெற்றதை அடுத்து, நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாடொன்றில் ?இலங்கை நிலைமை இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது. அங்கே மோதல்கள் தீவிரமடைந்து பொது மக்கள் கொல்லப்பட்டு வருவதையிட்டும் அதிகளவில் மக்கள் இடம் பெயர்ந்து வருவதையிட்டும் நாம் பெரிதும் கவலைகொண்டுள்ளோம். என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இதனிடையில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இலங்கை நிலைமையை இந்திய தலைவர்களுக்கு விளக்குவதற்காக புதுடில்லி செல்லவுள்ளதாகவும், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை வரவுள்ளதாகவும் அறியப்படுகிறது.இந்தியா இலங்கையை ஆக்கிரமிக்கப் போவதாக ஒரு பிரசாரமும் ஜாதிகஹெல உறுமய மற்றும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியினரால் முடுக்கிவிடப்படுவதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனிடையில் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டு வருகின்றார். எனவே, விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த பின்னரே அரசியல் தீர்வு தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி கூறியுள்ளதற்குச் செயல்வடிவம் கொடுக்கும் முனைப்பிலே அரசாங்கம் இருப்பதாகத் தெரிகிறது. இது நாட்டுக்கு மீட்சியில்லாத பயணம் என்பதை உணர்வதற்கு யுத்த மனோபாவம் நீங்க வேண்டும்.
வ.திருநாவுக்கரசு

Comments