தமிழர் தேசத்துக்கு உதவுவதே இந்தியாவின் பாதுகாப்பிற்கு பலமாகும்: பா.நடேசன்


இலங்கையில் சிங்கள தேசத்துக்கு உதவுவதைவிட தமிழர் தேசத்துக்கு உதவுவதே இந்தியாவின் பாதுகாப்பிற்கு பலமாகும்- எதிர்காலத்திலாவது உண்மையான நேச சக்திகளுக்கு இந்தியா உதவ முன்வர வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஜுனியர் விகடன் வாரமிருமுறை ஏட்டுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்:

"இலங்கையில் தற்போது என்னதான் நடக்கிறது. சிங்கள இராணுவத்தின் கை ஓங்கியிருப்பது போல செய்திகள் வருகிறதே?"

"இலங்கைத் தீவில் சிங்கள அரச படையினர், தமிழர் தாயகத்தின் மீது கொடுமையான யுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர். முப்படைகளின் உதவியோடு தமிழினத்தை அழித்தொழிக்க பெரியதொரு இன அழிப்புப் போரை கண்மூடித்தனமாக மேற்கொண்டு வருகின்றது சிங்கள அரசு. இந்த இன அழிப்புப்போருக்கு வெளிநாட்டு இராணுவ உதவிகளையும் பெற்று வருகின்றது.

சிங்கள அரச படைகளுக்கு இராணுவ உதவிகள் செய்துவரும் நாடுகள் தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியுமென நினைக்கின்றேன். இராணுவ நடவடிக்கைகள் மட்டுமல்ல... பாரிய பொருளாதாரத் தடையையும் தமிழர் தாயகத்தின் மீது ஏற்படுத்தி வருகின்றது.

தமிழ்மக்கள் தினமும் லட்சக்கணக்கில் தம்முடைய வாழ்விடங்களை விட்டு ஏதிலிகளாக இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் மீது வானூர்தி குண்டுவீச்சுக்களையும் செல் வீச்சுக்களையும் சிங்கள அரச படைகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கண்மூடித்தனமான இந்தத் தாக்குதல்களினால் மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பது மிகவும் அரிதாகும். நாகரிக உலகில் கொடுமையானதொரு இன அழிப்புப்போரை ஈழத்தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்."


"சிறிலங்கா ஆளும் கட்சியின் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக கருணா நியமிக்கப்பட்டிருக்கிறாரே?"

"கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து எப்போது விலக்கப்பட்டாரோ, அன்றிலிருந்தே தமிழ் மக்களாலும் நிராகரிக்கப்பட்டுள்ளார். கடுமையான இன அழிப்புப்போரை மேற்கொண்டு வரும் சிங்கள அரசு, வெளிநாடுகளை ஏமாற்றி இராணுவ உதவிகளைப் பெறுவதற்காக கருணா போன்ற துரோகிகளைக் கருவியாகப் பயன்படுத்தி வருகின்றது. இவ்வாறானவர்கள், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக அரசினால் நியமிக்கப்பட்டாலும் மக்கள் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்."

"கருணாவின் உதவியோடுதான் இப்போது சிறிலங்கா அரசாங்கம் தேடித் தேடி தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறதா?"

"சிறிலங்கா அரசானது கடந்த முப்பது வருடங்களாகவே தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்புப் போரை மேற்கொண்டு வருகின்றது. எம்முடைய மக்களுக்கெதிரான யுத்தத்தில் கருணா போன்ற துரோகக் குழுக்களை பயன்படுத்தி வருவது, சிங்கள அரசின் தமிழர் விரோத இராணுவ வியூகங்களில் ஒன்றாகும். அந்த வகையில் இப்போது கருணாவையும் சிங்கள அரசு பயன்படுத்தி வருகின்றது."


"இப்போது நடக்கும் போர் புலிகளின் மீதான தாக்குதலா? இல்லை தமிழர்களை அழிக்கும் செயலா? தமிழர்கள் கொல்லப்பட்டால் அதுபற்றி செய்திகள் பெரிதாக வெளிவருவதில்லையே?"

"சிங்கள அரசின் இன அழிப்பு நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்துக்கு தெரியவராமல் இருப்பதற்காகவே ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தமிழர் தாயகப் பிரதேசத்துக்கு வர அனுமதிக்கப்படுவதில்லை. தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கூறிய விடயங்கள் அரசின் இன அழிப்பு யுத்த செய்திகள் வெளியே வராமல் தடுப்பதற்கேயாகும். கொழும்பு போன்ற நகரங்களில் உண்மைச் செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் கடத்தப்படுவதும், காணாமற் போவதும், கொலை செய்யப்படுவதும் சாதாரண விடயமாக மாறியுள்ளது."

"சிங்கள படைக்கு இந்தியாவில் இந்திய அரசின் உதவியோடு இராணுவ பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது என்று செய்திகள் வருவது எந்த வகையில் உண்மை?"

"அண்மைக்காலமாக சிங்கள அரசுப் படைகளுக்கு இந்தியாவில் இராணுவப்பயிற்சி வழங்குவது பற்றி ஊடகங்களினூடாக அறியமுடிகின்றது. இது எங்களுக்கு மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிக்கின்றது."

"சிங்கள படைக்கு இந்திய இராணுவ பொறியாளர்கள் உதவுவதாக தகவல்கள் வந்து கொண்டிருந்த நேரத்தில், சமீபத்தில் இலங்கையில் நடந்த தாக்குதலில் இந்திய இராணுவ பொறியாளர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

"அண்மையில் சிங்கள வானூர்தி படையின் வவுனியாத்தளத்தில் ராடர் கருவியை இயக்குவதற்கும் பயிற்சி கொடுப்பதற்கும் இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் செயற்பட்டுவந்தமை முழு உலகிற்கும் தெரியவந்துள்ளது. இவ்வாறான பயிற்சிகளும் உதவிகளும் வெளிநாடுகள் எந்த நோக்கத்துக்காக வழங்கினாலும் சிறிலங்கா அரச படைகள் அதைத் தமிழ் மக்களைக் கொன்றொழிப்பதற்குப் பயன்படுத்தி வருகின்றமையே யதார்த்தமாகும்."

"சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகள் செய்ய தயாராக இருக்கிறது. அதனால், இந்தியாவுக்கு ஆபத்து என்பதால் உதவுகிறோம் என்று இந்தியா தரப்பில் சொல்லப்படுவது பற்றி..?"

"எம்முடைய மனச்சாட்சி இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. வரலாற்று ரீதியாக இந்திய அரசு சிறிலங்காவிற்கு எவ்வாறான உதவிகளை வழங்கினாலும் அல்லது அழுத்தங்களை பிரயோகித்தாலும் இந்தியாவின் பூகோள நலனுக்கெதிராக சிறிலங்கா அரசு செயற்பட்டு வருகின்றது. தொடர்ந்தும், அவ்வாறே செயற்படுவார்கள் என்பதனை எம்மால் உறுதியாகக் கூறமுடியும்.

இந்திய அரசுக்கு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் சிறிலங்கா அரசு இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடனேயே கூட்டுச் சேர்ந்ததுதான் கடந்தகால வரலாறாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களே இந்தியாவின் நலனிற்காக குரல்கொடுத்தும் செயற்பட்டும் வந்துள்ளமை வரலாற்று உண்மையாகும். இதை இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது எம்முடைய அவாவாகும். சிங்கள தேசத்திற்கு இந்திய அரசு உதவுவதைவிட தமிழர் தேசத்திற்கு உதவுவதே இந்தியாவின் பாதுகாப்பிற்குப் பலமாகும். எதிர்காலத்திலாவது உண்மையான நேச சக்திகளுக்கு உதவ முன்வரவேண்டும்."

"ஈழப் பிரச்சினைக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?"

"தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான 'தமிழீழ விடுதலைப் புலிகள்' மீதான தடையினை நீக்கி எம்முடைய மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்."

"புலிகள் இயக்கத்தை மிக உக்கிரமாக எதிர்த்து வந்த காரணத்தால் ஈழத் தமிழர்களின் பரிதாப நிலை பற்றி குரல் கொடுக்காமல் இருந்த ஜெயலலிதா கூட இப்போது குரல் கொடுத்திருக்கிறாரே..?"

"தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் அனைவருமே இன உணர்வு மிக்கவர்கள். அவர்கள் தமிழீழ மக்களுக்கு இன்னல்கள் ஏற்பட்ட போதெல்லாம் குரல் கொடுப்பதற்கு பின்னிற்க மாட்டார்கள். 'தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும்' என்பது போல அவர்கள் எல்லோரும் தற்போது அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் குரல் கொடுத்திருக்கின்றார்கள்."

"இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் சிறிலங்காவுக்கு ஆதரவான மனநிலையில் உள்ளார் என்று சொல்லப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன..?"

"'இது நாராயணன் அவர்களிடமே கேட்கப்பட வேண்டிய விடயமாகும்."

"'இலங்கை பிரச்னைக்காக எங்கள் ஆட்சி யையும் இழக்க தயார்' என்று கருணாநிதி பேசி இருக்கிறார். மத்திய அரசுக்கு தந்திகள் அனுப்பச் சொல்லியிருக்கிறாரே..?"

"தமிழ் இன உணர்வோடு எம்முடைய மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்திருக்கிறார். வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் நெருக்கடியினை எதிர்கொண்ட காலங்களில் எல்லாம் எம்முடைய மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்கு தமிழக முதல்வர் அவர்கள் ஒருபோதும் தவறுவதில்லை. கடல் கடந்திருந்தாலும் அவர்கள் எல்லோரும் எம்முடைய உடன்பிறப்புக்களே. ஈழத்தில் தமிழ் மக்கள் துன்பப்படும்போது அவர்களால் அதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பது யதார்த்தமாகும்."

"'சிறிலங்கா வானூர்தி படை தாக்குதல் காரணமாக பதுங்கு குழிகளில் மறைந்தபடி பிரபாகரன் நீண்ட காலம் உயிர் வாழ முடியாது' என்று சிறிலங்கா இராணுவ தளபதி பொன்சேகா சொல்லி இருக்கிறாரே..?"

"இது அவருடைய பகற்கனவாகும்."

"புலிகளின் தலைமையிடமான கிளிநொச்சியை சிறிலங்கா இராணுவம் சுற்றி வளைத்துவிட்டது என்று செய்திகள் வருவது பற்றி?"

"புலிகள் எவ்வாறான சுற்றி வளைப்புக்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள்."

"பொருளாதார தடைகள் இப்போதும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறதா..? அத்தியாவசிய பொருட்கள் விலை, வாங்கும் அளவுக்கு இல்லை என்பது உண்மையா?"

"பொருளாதாரத் தடைகள் தொடர்ச்சியாக நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன."

"புலிகள் செயற்பட முடியாத அளவுக்கு முடங்கி விட்டதாக சிறிலங்கா கொக்கரிக்கின்றதே?"

"உலகத் தமிழ் மக்களின் ஆதரவு எமக்கிருக்கும் வரை சிங்கள தேசம் எம்மை வெற்றிகொள்ள முடியாது."


Comments