செயல்வன்மை மிக்க அரசியல் ஆதரவினை தமிழகம் வழங்குமா?

"இந்திய மத்திய அரசு, இலங்கைத் தூதரக அதிகாரி மூலம் விடுத்திருக்கும் எச்சரிக்கை மீறப்பட்டால், இந்த அரசு தேவைதானா என்ற கேள்விக்கு விடை காண வேண்டி வரும் என தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் குறிப்பிட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.இவ்வேண்டுகோளினை மத்திய அரசு செவிமடுக்காவிட்டால் இதே கேள்வியை கலைஞர் ஆட்சியை நோக்கி, தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் சூழலும் ஏற்படலாமென்பது உண்மை.அதேவேளை தமிழ்நாட்டுத் தலைவர்கள் காட்டிவரும் இத்தார்மீக ஆதரவு, செயல்வன்மைமிக்க அரசியல் ஆதரவாக முழுமை பெற வேண்டுமென்பதே ஈழத் தமிழர்களின் அவாவாகும்' என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைச் செயலகம் விடுத்த அறிக்கையினையும் கூர்ந்து நோக்க வேண்டியுள்ளது.

"செயல்வன்மைமிக்க அரசியல் ஆதரவு எதுவாக இருக்கும் அல்லது இருக்க வேண்டுமென்பதை ஊகித்தறியும் போராட்டம் குறித்த புரிந்துணர்வு, தமிழக இன உணர்வாளர்களிடம் உண்டு.ஆனாலும் எதிரணியினரின் ஒன்று கூடல் கண்டு பதற்றமடைபவர்களும் தேர்தல் நெருங்கும் வேளையில் ஈழத் தமிழர் பிரச்சினையை உயர்த்திப் பிடிக்கும் சந்தர்ப்பவாதிகளும் "செயல்வன்மைமிக்க' அரசியல் ஆதரவிற்கு எவ்வகையான செயல் வடிவம் கொடுக்கப் போகிறார்களென்பதே எம்முன்னால் விரிந்து நிற்கும் கேள்வியாகும்.உண்மையிலேயே இந்திய கம்யூனிஸ் கட்சியினரின் உண்ணாவிரதப் போராட்ட முன்னெடுப்பே கலைஞரை அசைய வைத்துள்ளது.

அதேபோன்று விஜயகாந்த் கட்சியினர் முழு வீச்சுடன் கலந்து கொண்ட நிகழ்வு, ஜெயலலிதாவை அறிக்கை விட வைத்துள்ளது.செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக, சேகரித்த நிவாரணப் பொருட்களை யாழ். குடாநாட்டுக்கு அனுப்புமாறு நெடுமாறன் ஐயா மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கலைஞர் அளித்த வாக்குறுதி போன்று இதுவும் அமையலாமென்கிற பெருத்த சந்தேகம் தமிழ் மக்களுக்கு உண்டு.ஏனெனில் சிறிய கோட்டிற்குப் பக்கத்தில் பெரிய கோடொன்றை வரைவதில் கலைஞர் சாணக்கியரென்பது தமிழக அரசியலை நெடுங்காலமாக அவதானிப்பிற்குள்ளாக்கி வரும் மக்களுக்கு புரியும்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை தமிழின அழிப்பிற்கெதிரான காத்திரமான அரசியல் பங்களிப்பு, தமிழக மக்களிடமிருந்து வர வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.தமிழக அரசியல் தலைவர்களின் ஒன்றிணைந்த செயல்பாடுகள், இதுவரை ஏன் முன்னெடுக்கப்படவில்லையென்ற ஏக்கமும் ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.டில்லி நோக்கிய தந்திப் போராட்டம், எத்தகைய மாற்றங்களை இந்திய நடுவண் அரசிற்கு அரசியலில் ஏற்படுத்துமென்பதற்கு அப்பால் ஆட்சியில் பங்குகொள்ளும் தமிழக அரசியல் சக்திகளின் நேரடித் தலையீடே செயல்வன்மை மிக்க மாறுதல்களை மத்தியில் உருவாக்கும் வாய்ப்பினை அதிகரிக்கும்.குடாநாட்டிற்கு உணவு அனுப்பும் விவகாரத்தில் கற்றுக் கொண்ட பாடத்தினை, நினைவில் இருத்தி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னின்று நடத்தினால் மத்திய அரசப் பங்காளர்களை இயங்கு நிலையில் வைத்திருக்கலாம்.

குறிப்பாக தமிழக மக்களின் உணர்வுகளை பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் புரிந்து கொள்வதாகவும் தழுதழுத்த குரலில் கவலையோடு அவர் செவிமடுத்ததாகவும் அவர் நெஞ்சில் தமிழக மக்களின் பாரத்தை இறக்கி வைத்துள்ளதாகக் கூறப்படும் ஆறுதல் வார்த்தைகள் யாவும் செயலுருப் பெறக் கூடிய அடுத்த கட்ட படி நிலைக்கு மாறுதலயடையுமா என்பது சந்தேகமே.ஆகவே பேரினவாதத்தின் தமிழின அழிப்பிலிருந்து தமிழ் மக்களைப் காப்பாற்ற, அவர்களின் அரசியல் அபிலாஷையான, தன்னாட்சியும் இணைந்த சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டை அங்கீகரிப்பதே ஒரே மார்க்கமென்பதை தமிழக தலைவர்கள் அனைவரும் இந்திய நடுவண் அரசினை வலியுறுத்த வேண்டும்.அக் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையில் யதார்த்தபூர்வமான களநிலை அரசியல் காரணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.அரசின் ஒரு தலைப்பட்ச போர் நிறுத்த முறிப்பு போர் நிறுத்த கண்காணிப்பாளர்களின் வெளியேற்றம், தீவிரமடையும் இராணுவத்தின் படை நகர்வு 20 தடவைகளுக்கு மேல் உள்ளக இடப்பெயர்விற்குள்ளாகியுள்ள 3 இலட்சம் தமிழர்கள், இறுதியாக சர்வதேச தொண்டு நிறுவனங்களின் வெளியேற்றம் போன்ற விடயங்களே தமிழர்களிற்கான சுய நிர்ணய உரிமையை அவசியத்தை உணர வைக்கிறது.

அதேவேளை டில்லி அரசியலை ஆட்டிப் படைக்கும் முரண்நிலைச் சக்திகள் குறித்தும் ஆராயப்பட வேண்டும்.அதாவது பிரதமர், தமிழகச் சிந்தனைகளை ஏற்க விரும்பினாலும் "சவுத் புளொக்' கிலுள்ள இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களும் பாதுகாப்புத் துறை விற்பனர்களும் இதற்கு முட்டுக்கட்டை போடுவதாக ம.தி.மு.க. செயலாளர் வைகேõ அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார்.இதில் ஓரளவிற்கு உண்மைத்தன்மை பொதிந்திருந்தாலும் மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கு ஆய்வறிக்கைகளைச் சமர்பித்து அறிவுரை கூறும் முக்கிய பங்கு இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு உண்டென்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது.ஆனாலும் ஓரிரு வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்ற ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துள்ள ஒரு கூட்டாட்சி அமைப்பானது, வெறுமனே கொள்கைவகுப்பாளர்களின் அறிவுரைக்கேற்ப அரசியலை நடத்த முடியாது.

பெரும்பான்மை பெற்ற தனிக்கட்சி ஆட்சியொன்றினால் மட்டுமே இத்தகைய வெளியுறவு, பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தின் அறிவுரைகளை தங்குதடையின்றி முழுமையாக உள்வாங்கி அதை நிறைவேற்றும் வல்லமை கொண்டிருக்கும்.அடிக்கடி தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்து முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தும் சிவசங்கர் மேனன், எம்.கே. நாராயணன் போன்றோரின் நகர்வுகள் தனிப்பலமில்லாத கட்சியின் ஆட்சியில் கொள்கை வகுப்பாளர்களின் தனிச் செல்வாக்கு, எந்த மட்டத்திற்கு கீழிறங்குகியுள்ளதென்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

ஆகவே மற்றவர்களின் ஆசனப் பலத்தில் தங்கியுள்ள ஆட்சியொன்றில் சில விடயங்களைச் சாதிக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகிறது.இதனைச் சாதகமாக மாற்றியமைத்து தமிழின அழிப்பைத் தடுக்கும் வல்லமை தமிழ்நாட்டு தலைவர்களுக்கும் அம்மக்களுக்கும் உண்டென்பதை மானுடவாதிகள் உணர்த்துதல் வேண்டும்.இந்திய அரசின் பூரண ஆதரவு தமக்கு உண்டெனப் பெருமிதம் கொள்ளும் பௌத்த சிங்கள பேரினவாதத்தின் இன அழிப்பு மனோபாவத்தை உடைத்தெறியும் அரசியல் நகர்வுகளை, தமிழ்நாட்டு மக்கள் விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் கொள்கையே எனது கொள்கையெனக் கூறிய கலைஞரின் போக்கில் தற்போது மாறுதல் ஏற்பட்டுள்ளது.அம்மாறுதலானது வருகிற பொதுத் தேர்தலின் அடிப்படையில் நிகழ்ந்த காய்நகர்த்தல்களா அல்லது ஈழத் தமிழர் பால் அவர் கொண்ட இன உணர்வின் அடிப்படையில் ஏற்பட்ட உண்மையான மாற்றமாவென்பதை கலைஞரின் அடுத்த கட்ட செயல்வன்மை மிக்கஅரசியல் நகர்வுகளே சாட்சிப்படுத்தும்.

ஆகவே தமிழின விடுதலைப் போராட்டப் பாதையில் போடப்பட்டுள்ள தற்காலிகத் தடையரண்களை, உடைத்தெறியும் "தடை நீக்கி' களாகத் தமிழகத் தலைவர்கள் செயற்படுவார்களென்கிற நம்பிக்கை ஈழத் தமிழர்களுக்கு உண்டு.ஆனாலும் தமிழக மக்களின் தன்னியல்பான பேரெழுச்சியே, அத்தலைவர்களையும் முன் தள்ளிச் செல்லும் என்பதே மக்கள் போராட்டங்கள் சொல்லும் செய்தியாகும்.

- இதயச் சந்திரன்


Comments