"வான் தாக்குதல் மூலம் புலிகளின் கட்டளைப்பீடத்தை அழித்துவிட முடியாது"

வான் தாக்குதலில் மேலோங்குவதன் மூலம் எதிர்த்தரப்பின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை சிதைத்துவிட முடியும் என்பது படைத்துறை வல்லுநர்களின் கருத்து. ஆனால் விடுதலைப் புலிகளின் உட்கட்டுமானங்கள் வெளியில் தெரிவதில்லை. எனவே இது அவர்களுக்கு பொருந்தப் போவதில்லை என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த வார ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

வான் தாக்குதலில் மேலோங்குவதன் மூலம் எதிர்த்தரப்பின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை சிதைத்துவிட முடியும் என்பது வான் தாக்குதல் கொள்கை வகுப்பாளர்களான கேணல் ஜோன் பேய்டோன் மற்றும் கேணல் ஜோன் வார்டன் ஆகியோரின் கருத்து.

கட்டளை மையங்களை செயலிழக்கச் செய்வது உளவியல் தாக்கங்களை ஏற்படுத்துவதுடன் தொடர்புடையது என்பது பொய்டின் கருத்து. எதிர்த்தரப்பின் மையப்புள்ளியை தகர்ப்பதன் மூலம் எதிர்த்தரப்பை முறியடிக்க முடியும்.

ஆனால் இந்த கொள்கைகளை முறியடிப்பதில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கைதேர்ந்தவர். இவர்களின் கொள்கைகள் முன்னைய ஈழப்போர்களில் பயனற்றதாகவே இருந்தன. அதற்கான காரணம் விடுதலைப் புலிகளின் உட்கட்டுமானங்கள் வெளியில் தெரிவதில்லை. அவர்களின் கொள்கைகள் இரு நாடுகளுக்கு இடையிலான போரின் போதே செயற்திறன்மிக்கது, கெரில்லா போரில் பயன்படப்போவதில்லை.

போர் நிறுத்தம் 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போது வன்னியில் உட்கட்டுமான அமைப்புக்கள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட பின்னர் பொருளாதார செயற்பாடுகள் வன்னியில் அதிகரித்திருந்தன.

ஒரு நாட்டுக்குரிய உட்கட்டுமான அமைப்புக்களை விடுதலைப் புலிகள் நிறுவியிருந்தனர். அவற்றில் சில சமாதான நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்தன.

முன்னர் நடைபெற்ற ஈழப்போர்களில் வான் தாக்குதல்களில் இருந்து தமது படையணிகளை விடுதலைப் புலிகள் விலக்கியே வைத்திருந்தனர்.

பாரிய படை நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகள் தமது படையணிகளின் செறிவாக்கத்தை மிகவும் அவதானமாகவே பேணி வந்திருந்தனர். அவர்களின் கட்டளை மையங்கள் வெளியில் தெரிவதில்லை.

வான் படையினாரின் பிரதான நடவடிக்கை படையினருக்கான ஆதரவு தாக்குதலை வழங்குவதாகவே அமைந்திருந்தது. ஆனால் தற்போது விடுதலைப் புலிகள் தமது கட்டளை மையங்களை அமைந்த போது படையினர் அதனை உன்னிப்பாக அவதானித்து வந்திருந்தனர். அவற்றை தாக்குவதற்கு தேவையான அமைவுப்புள்ளிகளை வான் படையினர் கைவசம் வைத்திருந்தனர். அதன் அடிப்படையிலேயே கடந்த புதன்கிழமை (01.10.08) சிறிலங்கா வான்படையின் மிக்-27 மற்றும் கிபீர் ரக வானூர்திகள் வன்னிப் பகுதியில் தாக்குதலை நடத்தியிருந்தன.

விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமையத்தை தாக்கும் படி அரசு கடந்த வாரம் வான்படையினருக்கு உத்தரவுகளை வழங்கியிருந்தது. ஆனால் தாக்குதல் நடைபெற்ற போது அந்த அலுவலகத்தில் யாரும் இருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா. நடேசன் கூட அங்கு வருவது குறைவு. அலுவலகங்களை தவிர்க்குமாறு விடுதலைப் புலிகளின் தலைமை அதன் தலைவர்களை பணித்திருந்தது.

சிறிலங்கா வான்படையினர் தாக்குதல்களை அதிகரித்ததில் இருந்து, விடுதலைப் புலிகளினின் அரசியல்துறை மற்றும் நிர்வாக அலுவலகங்கள் வெறிச்சோடியே காணப்பட்டன. வான் படையினரின் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் கட்டகளை மையங்கள் செயலிழந்துவிட்டது என கொள்ள முடியாது.

வன்னி தகவல்களின் படி விடுதலைப் புலிகள் தமது கட்டளை மையங்களை ஏற்கனவே இடம்மாற்றி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே கிளிநொச்சி மீதான தாக்குதலுக்கு 57 ஆவது படையணியினர் தயாராகி வருவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இராணுவத்தின் 4 ஆவது சிங்க றெஜிமென்ட், 3 ஆவது 4 ஆவது கஜபா மற்றும் 8 ஆவது சிலோன் இலகுகாலாட்படை போன்றவை அக்கராயனில் இருந்து நகரமுற்பட்டு வருகின்றன.

கிளிநொச்சியை சூழ விடுதலைப் புலிகள் மண் அணைகளை அமைத்துள்ளதக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இராணுவம் கடுமையாக எதிர்த்தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

57 ஆவது படையணியுடன் மேலும் ஒரு பிரிகேட் இணைக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தில் மேலும் ஒரு படையணியை உருவாக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி அழித்துள்ளது. இந்த படையணி தற்போதைய ஈழப்போரில் உருவாக்கப்படும் 6 ஆவது படையணியாகும்.

எனினும் 57 ஆவது படையணியே மிகவும் சிறந்த தாக்குதல் படையணியாக உருவாக்கப்பட்டுள்ளது. 4 ஆவது பிரிகேட்டின் இணைப்புடன் இந்த படையணியில் உள்ள படையினாரின் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வடைந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments