முற்றுகையை உடைத்தெறிய முழுத்தமிழினமும் அணிதிரள வேண்டும்

`நிலமற்ற மனிதர்கள், நிலமில்லாத வரலாற்றைக் கொண்டிருப்பர்'.

மகாவம்சப் பொய்யர்கள், தமிழினத்தின் மீது பிரயோகிக்க முனையும் ஆக்கிரமிப்பு யுத்தம், கூறவிழையும் செய்தியும் இதுதான்.

பூர்வீக நிலமென்கிற அடிவேர் அற்ற மனிதக் கூட்டமாகத் தமிழினம் அலைய வேண்டுமென்கிற விவகாரமே, தற்போது சிங்களத்தின் முதன்மையான இன அடி அழிப்பு கோட்பாடாகவிருக்கிறது. இடம்பெயரும் தமிழ் மக்களின் வாழ்விற்கான இருப்பு, தம்மால் நிர்ணயம் செய்யப்படுவதையே பேரினவாதச் சக்திகள் விரும்புகின்றன.

அவை நிறைவேறாத பொழுது, போர் விமானங்களும், ஆட்டிலெறிகளும், இடம்பெயரும் தமிழர்களின் அசைவியக்க ஊக்கிகளாகப் பயன்படுமென்கிற கற்பிதமும் சிங்களத்திற்கு அதீதமாக உண்டு.

இதுதான் தற்போது வன்னியில் நடைபெறும், நிலமில்லாத வரலாற்றை உருவாக்கும் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதியாகும். உள்ளக இடப்பெயர்விற்குள்ளாகும் வன்னி மக்கள், தம்மை நோக்கி நகர்ந்து வருவார்களென்று எதிர்பார்த்த சிங்களம், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாததால், ஐ.நா தொண்டர் அமைப்புக்களையும், சர்வதேச மனிதாபிமான சங்கங்களையும் வெளியேறுமாறு காலக்கெடு விதித்துள்ளது. கிளிநொச்சி நகரைக் குறிவைத்து நடாத்தப்படும் வான் தாக்குதல்கள், வெளியேறும் நிர்ப்பந்தத்தை இவ்வமைப்புக்கள் மீது செலுத்துமென்பதே அரசின் எதிர்பார்ப்பு.

அதேவேளை அரசின் ஒரு தலைப்பட்சயுத்த நிறுத்த ஒப்பந்தக் கிழிப்பிலிருந்து முன்னெடுக்கப்படும் காய் நகர்த்தல்களை அவதானித்தால், மேற்குலக அனுசரணையாளர்கள், மற்றும் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினரின் வெளியேற்றத்திலிருந்து இற்றைவரையான தொண்டு நிறுவன வெளியேற்ற நிகழ்வுகள் யாவும், தமிழர் தாயகத்தைச் சூழ, இன ஆக்கிரமிப்பு இரும்புத்திரையன்றினை நிர்மாணிக்கப் பேரினவாதம் அவசரப்படுவது தெரிகிறது.

அரச படையினரின் யாழ்குடா முற்றுகையின்போது, வன்னி நோக்கி இடம்பெயர்ந்த மக்களும், மன்னார் ஆக்கிரமிப்பின் விளைவாக கிளிநொச்சி நோக்கி நகரும் மக்களும், சிங்களத்திற்கு ஒரு தெளிவான செய்தியை முன்வைக்கின்றார்கள். அதாவது வன்னி மக்களிற்கான பெருந் தேசியவாதத்தின் ஜனநாயக இறக்குமதியினை, அம்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்கிற விடயம், சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தப்படுகிறது. அதேவேளை யுத்த முன்னெடுப்பை நிறுத்தி, பேசித் தீர்க்க வேண்டுமென அழைப்பு விடுக்கும் சர்வதேசம் மீதான நம்பகத்தன்மை, தமிழ் மக்களின் மனங்களிலிருந்து அகன்று செல்வதை உணரக்கூடியதாகவிருக்கிறது.

சர்வதேசத்தின் மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள் யாவும், பேரினவாத்தின் அச்சுறுத்தலை ஏற்றுக்கொண்டு வன்னியைவிட்டு வெளியேறுவதை, அவலத்தின் விளிம்பில் தத்தளிக்கும் வன்னி மக்கள், சந்தேகத்துடன் நோக்குவதற்கும் இடமுண்டு.மன்னார் பெருநிலப் பரப்பிலுள்ள வயல்வெளிகள் அழிக்கப்பட்டுவிட்டன. குந்தியிருந்த குடிநிலங்கள் சிதைக்கப்பட்டு, மர நிழல்களே வாழ்வாகிப் போய்விட்டன. இரவு பகல் வேறுபாடின்றி, வானிலிருந்து விழும் பேரினவாதக் குண்டுகள், பதுங்குகுழிகளை நிரந்தரப் படுக்கையறையாக மாற்றிவிட்டன. உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி இருக்க குடில் இன்றி, இயல்பு வாழ்விற்குரிய அடிப்படைகள் ஏதுமற்று, வெற்றுத் தரையில் ஏதிலியாகியுள்ள மக்களிற்கு என்ன பதில் கூறப்போகிறது இந்த சர்வதேசம்? ஐ.நா. மனித உரிமைச் சபையில் உறுப்புரிமை இழந்தும் சிங்களம் அசையவில்லை.

ஆடை ஏற்றுமதி சலுகையான ஜீ.எஸ்.பீ.பிளஸ் இனை நிறுத்துவோமென அச்சுறுத்தியும் சிறீலங்கா அரசு மசியவில்லை. மனித உரிமை மீறல்களும், இன அழிப்புக்களும், யுத்த சூழலில் சகஜமென்று புதிய ஜனநாயகத் தத்துவங்களை உதிர்த்து விடுகிறார்கள் ÒஹெலÓ உரிமைக்காரர்கள்.புத்தரின் பஞ்சசீலத்தோடு ஆறாவதாக இதனையும் இணைக்கலாம். இப்படியே அம்மக்களின் வாழ்வுரிமை மிக மோசமாக நசுக்கப்பட்டால், அவர்களால் என்ன செய்ய முடியும்? இருக்கிறது மனிதகுல வரலாறு. வர்க்கப் போராட்டங்கள், பிரெஞ்சுப் புரட்சிகள், தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் யாவும் தற்கால மனிதருக்கு விட்டுச் சென்ற செய்திகள் எவையென்பதை மீட்டிப் பார்க்கும்வேளை நெருங்குகிறது.

இவையனைத்தும் மக்களின் விடுதலைக்கான போராட்டங்களாகவே முன்னெடுக்கப்பட்டன. அவை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த, கொம்யூனிசக் கட்சிகளின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சோசலிசப் புரட்சியாக இருந்தாலும் சரி, 8000 `லீ' தூரம் பின்னகர்ந்து, மீண்டும் அணிதிரட்டிய மக்களோடு முன்னகர்ந்து, புதிய ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றிய சீனப் பெருந் தலைவர் மாவோவின் மக்கள் புரட்சியாக இருந்தாலும், அடிப்படையில், தேசிய விடுதலை இயக்கத்தோடு மக்களின் ஒருங்கிணைப்பே, ஒட்டுமொத்த விடுதலைக்கு வழி சமைக்கும்.பேரினவாதத்தின் இன ஒடுக்கு முறைக்கு உள்ளாகியுள்ள பூர்வீக தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தில், வர்க்க பேதமற்று, சகல பரந்துபட்ட மக்களும் அணி திரள்வார்கள்.

தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழும் நிலமெல்லாம், தனது பெருந்தேசிய இறையாண்மைக்கு உட்பட்ட பிரதேசமென்று கூறுகிறது சிங்களம்.அவ்வாறாயின் வரலாற்றுச் சான்றுகள் கொண்ட தமிழ் தேசிய இனத்தின் தொன்மையான நிலப்பரப்பு, அவர்களுக்கு உரித்தானதல்ல என்று சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா?நிலமீட்புப் போராட்டத்தினை பயங்கரவாதமாகப் பார்க்கும் பார்வை, தவறானதென்பதை, பல தடவைகள், பல்வேறு பேச்சுவார்த்தை அரங்குகளிலும், தமிழினம் முன்வைத்துள்ளது. சர்வதேசத்திற்கும், தாயக மக்களிற்கும் இடையிலான சகல உறவுகளையும் அறுத்திட முனையும் பேரினவாதம், அதற்கான இறுதி நிகழ்ச்சி நிரலில் காலடி எடுத்து வைத்துள்ளதாக எண்ணுகிறது.

புலம்பெயர் மக்களின் எழுச்சியினை முடக்குவதற்கு, கோடிக்கணக்கான பணத்தினை பிரபல்யமான பரப்புரை நிறுவனங்களுக்கு வழங்குகிறது அரசு. ஆகவே தமிழ் மக்களின் சர்வதேச உறவிற்கான சகல வாசல்களையும் அடைப்பதற்கு சிங்களம் மேற்கொள்ளும் முயற்சியினை, போராடும் இனம் உடைத்தெறிய முன்வரவேண்டும். முன்னாள் இந்திய புலனாய்வுத்துறை உதவிச் செயலாளர் பி.ராமன் அவர்கள், தமிழ்த்தேசிய தலைமை குறித்து வெளியிட்ட காத்திரமான கருத்துக்கள், இக்கால கட்டத்தில் மிக உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டிய விடயமாகிறது.இன்னமும் தமது முழுமையான சக்தியை வெளிப்படுத்தாமல், அதேவேளை நன்கு திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட வவுனியா கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் விடுதலைப் புலிகளின் பலமிக்க போராளுமையை வெளிச்சமாக்குகிறதென பி.இராமன் கூறுகிறார்.

ஆயினும், தலைமையின் பலமும், மக்கள் சக்தியும் ஒன்றிணைந்தால், பல புதிய வரலாற்று நிகழ்வுகள் நிகழ்த்தப்படலாம். ஒரு படிமுறையான சுழற்சிக்குள் வலம் வரும் பின்தளச் சிதைப்புக்கள், முழுமைபெறும்போது, மக்கள் எழுச்சியின் உந்துதல் இரண்டறக் கலந்தால், தற்போது சுவிற்சர்லாந்தில் உலக விஞ்ஞானிகள் பரிசோதிக்கும் `பெருவெடிப்பு' போன்றதொரு நிகழ்வு, வன்னியிலும் நிகழும்.

- இதயச்சந்திரன்-

Comments