பொதுமக்கள் இலக்குகள் மீது தொடரும் சிறிலங்கா படையினரின் கொலை வெறித்தாக்குதல்: விடுதலைப் புலிகள் கடும் கண்டனம்

பொதுமக்கள் இலக்குகள் மீது சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக நடத்திவரும் கொலை வெறித் தாக்குதல்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சு வானூர்திகள் திடீரென வள்ளிபுனம் வான்பரப்புக்குள் இன்று வியாழக்கிழமை காலை 9:30 நிமிடமளவில் பிரவேசித்து கரித்தாஸ்-கியூடெக் நிறுவனங்களினால் நிர்மாணிக்கப்பட்ட மக்கள் குடியிருப்புக்கள் மீது கண்மூடித்தனமான அகோரக் குண்டுவீச்சுக்களை நடத்தின.

இதன்போது ஒரு மாணவன் கொல்லப்பட்டும் எட்டுப் பேர் காயமடைந்தும் உள்ளனர்.

இக்குண்டுவீச்சின் போது அப்பிரதேசத்தில் அமைந்திருந்த இரு முன்பள்ளிகளைச் சேர்ந்த சிறுவர்களும் வள்ளிபுனம் கனிஸ்ட/உயர்தர மகாவித்தியாலய மாணவர்களும் ஆசிரியர்களும் பயப்பீதியினால் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இப்பாடசாலை மாணவர்கள் பதுங்கு குழிகளுக்குள்ளும் வீதியோரங்களிலும் பற்றைகளுக்குள்ளும் பாதுகாப்புத்தேடி விழுந்து படுத்தனர்.

சிறிலங்கா அரசு இந்திய மத்திய அரசிற்கும் தமிழ்நாட்டிற்கும், மக்கள்மீது தாக்குதல்களை தாம் மேற்கொள்வதில்லை எனக்கூறி ஒருசில நாட்களுக்குள்ளேயே மக்கள் குடியிருப்புக்களான பரந்தனிலும் வள்ளிபுனத்திலும் கண்மூடித்தனமான வானூர்தி குண்டுவீச்சுக்களை நடத்தியுள்ளது.

அத்தோடு கிளிநொச்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியான பீரங்கித் தாக்குதல்களையும் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பல மக்கள் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் வீடுகள் சேதமடைந்தும் உள்ளன.

நேற்றைய பீரங்கித்தாக்குதலின்போது திருவையாறைச் சேர்ந்த காராளசிங்கம் பிரகலாதன் (வயது 43) என்பவர் கொல்லப்பட்டார்.

இன்றைய வானூர்தி குண்டுவீச்சின்போது மாணவனான சதீஸ்குமார் (வயது 16) கொல்லப்பட்டார்.

நவரத்தினம் தவக்குமார் (வயது 32)

மாணவியான பத்மநாதன் நிலோதினி (வயது 17)

நாகரட்ணம் நவரூபி (வயது 32)

புஸ்பகரன் சாந்தினி (வயது 34)

இராசேந்திரம் யேசுதாசன் (வயது 29)

மூன்று மாதக் குழந்தையான சிறினீவாசன் தமிழரசன்

ஆறுமுகம் மகேஸ்வரி (வயது 45)

மாணவியான பரமநாதன் தேவவதனி (வயது 18)

ஆகியோர் காயமடைந்தனர்.

சிறிலங்கா அரசின் தமிழ்மக்கள் மீதான கண்மூடித்தனமான வானூர்தி குண்டுவீச்சு மற்றும் பீரங்கித்தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று அதில் மேலும் தெரிக்கப்பட்டுள்ளது.


Comments