சிங்கள அரசின் நயவஞ்சக திட்டத்தில் கைகோர்த்திருக்கும் இந்தியா: வைகோ கண்டனம்



கடந்த இரண்டு ஆண்டுகளாக சிங்கள அரசு நயவஞ்சகமாக முயற்சித்து வரும் சதித்திட்டத்தில் இந்திய அரசுதற்போது கைகோர்த்து உள்ளது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று வெள்ளிக்கிழமை (03.10.08) அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

தமிழக மீனவர்களைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படை தாக்குவதும், சுட்டுக்கொல்வதும் இந்தியக் கடற்படையின் கண்முன்னாலேயே நடைபெற்று வருகையில், தமிழக மக்களையும், மீனவர்களையும், ஏன் இந்திய மக்களையும் திசை திருப்பவும் ஏமாற்றவும், சிங்கள அரசு நயவஞ்சகமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே முயற்சித்து வரும் சதித்திட்டத்தில் இந்திய அரசு தற்போது கைகோர்த்து உள்ளது.

இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்கும் சிங்கள அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கு, இந்தியக் கடற்படையினர் ஏற்கனவே தகவல் பரிமாற்றம் செய்யும் ஒப்பந்தம் மூலம் பல வழிகளிலும் உதவி வருகிற நிலையில், இருநாட்டுக் கடற்படைகளின் கூட்டு சுற்றுக்காவல் என்ற வஞ்சக வலையை சிறிலங்கா அரசு வீசியது.

நேற்றைய நாள் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்த பின்பு, மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, இரு நாடுகளின் கூட்டு நடவடிக்கை என்ற திட்டத்தை அறிவித்து உள்ளனர்.

காவலாளியும் கள்வனும் கைகோர்த்துக் கொள்வதுபோல, திருடனுக்கே காவல்துறை உடந்தை ஆவது போல, இந்தத் திட்டத்தை இந்தியா அறிவித்து உள்ளது. ஏற்கனவே இலங்கையில் தமிழ் இனக்கொலை நடத்தும் சிங்கள அரசுக்கு இராணுவ உதவியும், ஆயுதங்களும் செய்து வருகிற இந்தியா, இன்னும் ஒருபடி மேலே சென்று, தமிழ் இனப்படுகொலையைத் தீவிரப்படுத்த சிறிலங்கா அரசுக்கு வெளிப்படையாகவே உதவத் துணிந்து விட்டது.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் கூட்டு நடவடிக்கை கூடாது. ஆட்டுத்தோலைப் போர்த்திய ஓநாயின் திட்டம்தான், சிறிலங்கா முன்வைத்து உள்ள திட்டம் ஆகும். இந்திய அரசின் நடவடிக்கையை, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments