இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?



* பாரழுத கண்ணீர் பனிக்கடலாய் கிடக்க இது யாரழுத கண்ணீர் அலை நடுவே மிதக்கிறது

உப்புக்கடல் நடுவே தனியாக அடையாளம் காட்டி மிதந்து கொண்டிருக்கும் இந்தக் கண்ணீர் திட்டுகள் யாருக்கோ சொந்தமானவை அல்ல. இலங்கையின் பூர்வகுடிகளான ஈழத்தமிழ் மக்களுக்குச் சொந்தமானவை. இடையறாத வெடிகுண்டு சப்தத்தில் வானுயர்ந்த காட்டுமரங்களும் அஞ்சி நடுநடுங்க, ஆதரவற்றவர்களாகிப் போன தமிழ் மக்கள் மண்ணுக்கடியில் தலைபுதைத்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பல ஆண்டுகளாய் தங்களுக்குள்ளேயே வடித்த கண்ணீரின் பெரும் சேமிப்புதான் கடல் நடுவே அமைந்த இந்த கண்ணீர்த் திட்டுகள்.

இதைப் போன்ற கண்ணீர் கதைகள் உலகில் சில தேசிய இனங்களுக்கும் நிகழ்ந்திருக்கிறது. ஐக்கிய நாடுகளின் முயற்சியாலும், உலக சமூகத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளாலும் அவை தீர்க்கப்பட்டுவிட்டன. கிழக்குத் திமோர், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் 15 ஆயிரம் தீவுக்கூட்டங்களுக்கிடையில் அமைந்த ஒரு சின்னஞ்சிறு தீவு. போர்த்துக்கல் கொலணியாக இருந்த இந்த தீவை இந்தோனேசியா 1975 ஆம் ஆண்டில் அதிரடியாகக் கைப்பற்றியது.

தங்கள் அடையாளத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டேயிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடந்து கிழக்குத் திமோர் தனக்கான ஆட்சியை அமைத்துக் கொண்டுவிட்டது.

இதைப் போன்ற நிகழ்வுகள் யூகோஸ்லோவக்கியா, அல்பேனியா போன்ற நாடுகளிலும் நிகழ்ந்துள்ளன. ஆனால் இலங்கை தமிழ் மக்கள் பிரச்சினை மட்டும் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கிறது. ஏன்? இதனை ஆராய்ந்து பார்ப்பது இன்று அவசியமாகிவிட்டது.

காலணி ஆட்சியிலிருந்து விடுபட்ட இலங்கையில் நடந்த முதல் களப்பலி இந்திய வம்சாவளியினர்தான். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட கூலிகளான இவர்கள் , வெள்ளைக்கார தேயிலை முதலாளிகளிடம் இழந்தது போக எஞ்சிய இரத்தத்தை அட்டைகளிடமும் கொசுக்களிடமும் இழந்து நிற்பவர்கள்.

சுதந்திர இலங்கை, உழைத்து உழைத்து எலும்பும் தோலுமாய் தேய்ந்துபோன இவர்களுக்கான நன்றிக்கடனை இவர்களை நாடற்ற ஆதரவற்றவர்கள் ஆக்குவதன் மூலம் நிறைவேற்றிக் கொண்டது. இதன் பின்னர் தமிழ் மக்களுக்கான ஒப்பந்தங்கள் பலவற்றை இலங்கை அரசு நிறைவேற்றியது என்பதும் உண்மைதான்.

ஆனால் ஒப்பந்தங்களுக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த கொடுமைகளைத்தான் யாராலும் சகித்துக்கொள்ள இயலாது. தமிழ் மக்களின் மாமிசத்தை கூறு போட்டு கூவிக் கூவி விற்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது. இறுதியில் இன அழிப்பு தொடங்கியது. பொருளாதார வலிமையை முறித்துப் போடுவதற்காக வணிக நிறுவனங்கள் அனைத்திலும் தீ வைக்கப்பட்டது. பண்பாட்டு அழிப்பு பாய்ச்சல் வேகம் கொள்ளத் தொடங்கியது.

பாலியல் வன்முறை அச்சத்தால் கணவன் இறந்தால் மட்டும் அகற்றிக்கொள்ளும் நெற்றி திலகத்தைத் தமிழ்ப் பெண்கள் அழித்துக் கொண்டார்கள். இன்று பத்து இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். இதில் மிகுந்த துயரம் எதுவெனில் 15 வயதிலிருந்து 40 வயதுக்கு உள்ளிட்டவர்களை இந்த யுத்தம் பலிகொண்டுவிட்டது.

தங்கள் சந்ததியை முற்றாக இழந்து தவிக்கும் முதியவர்களின் புலம்பல் பேரொலிகள் ஈழம் முழுவதும் பரவி நிற்கிறது. கடைசியில் நம்பிக்கையோடு நோர்வே பேச்சுவார்த்தை தொடங்கியது. நான்கு ஆண்டுகளாகியும் குறைந்தபட்ச தீர்வுத்திட்டத்தின் முதல் வரியைக் கூட இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்க முடியவில்லை. இதற்கு மேல் இலங்கைத் தமிழ் மக்களால் என்ன தான் செய்ய முடியும்?

இரண்டாவது தாயகம் என்று கருதிக்கொண்டு தமிழகத்தின் உதவியையும், இந்தியாவின் உதவியையும் எதிர்பார்க்கிறார்கள். இதில் இந்தியாவின் இன்றைய பங்களிப்பு தான் மிகுந்த வேடிக்கை காட்டிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை சகலவிதமான ஒடுக்குமுறையை எதிர்த்து நிற்பதில்தான் அமைந்திருந்தது.

தென்னாபிரிக்காவின் நிறவெறி அரசாங்கத்தை எதிர்த்து மிகவும் கடுமையான போராட்டத்தை நடத்திய கறுப்பின மக்களுக்கு இந்தியா தொடர்ந்து முழு ஆதரவை வழங்கி வந்தது. இதைத்போன்றே பாலஸ்தீனப் பிரச்சினையும். இதன் உயிர்ப்பு மிக்க வாழ்க்கையைப் பாதுகாக்க இந்தியா எல்லா வகையிலும் தனது உதவிகளை வழங்கி வந்துள்ளது.

பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் வங்கமொழி பெரும் ஒடுக்குமுறைக்கு உள்ளானது. பெரும் எண்ணிக்கையில் அகதிகள் இந்தியாவில் குவிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காரணமாகச் சொல்லி வங்கதேசம் என்ற நாடு உருவாவதற்கு இந்தியா அடிப்படையான காரணமாக அமைந்தது. இதைப் போன்ற உதவிகளை இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்தியா தாயுள்ளத்தோடு வழங்கிய உதவிகளை யாரும் மறுக்க முடியாது.

அப்படி இருந்தும் இந்தியா இன்று தடுமாறுவதற்கு எது காரணமாக இருக்கிறது? ராஜீவ் காந்தியின் கொலையை மட்டுமே தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறார்கள். இதனை வரலாற்றில் நடந்த பிழை என்று தான் கூற வேண்டும். இந்தப் பிழையைச் சரிசெய்ய சோனியா காந்தியும் அவரது பிள்ளைகளுமே முயற்சி எடுத்து வருகிறார்கள். எதையும் மன்னித்தல் வேண்டும் என்ற இவர்களின் மேன்மை அனைவரையும் வியக்க வைக்கிறது.

சீக்கிய மக்களை மன்னித்து விட்டோம் என்பதற்காக இப்பொழுது பொற்கோயிலுக்குச் சென்று வருகிறார்கள். இந்த அணுகுமுறையை இலங்கைத் தமிழர்களிடமும் கடைப்பிடிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். ஆனால் மாயத்திரை ஒன்று நம்மீது விழுந்துவிட்டது. இது இலங்கைத் தமிழ் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாய் நமக்கு பொய்த் தோற்றம் காட்டுகிறது. இந்திய உளவுத்துறையின் பங்கு தான் மிகவும் கவலை தரும் விதத்தில் அமைந்திருக்கிறது.

இலங்கையில் நடைபெறும் யுத்தத்திற்கு இந்திய இராணுவம் உதவிகளைச் செய்கிறது என்பது ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் தமிழக முதல்வரை பாதுகாப்புத் துறைக்கான பிரதமரின் ஆலோசகர் எம்.கே.நாராயணன் சந்திக்கிறார். இலங்கை இராணுவத்திடம் உதவியைப் பெற்றுவிட்டேன் என்று கூறிக்கொண்டிருக்கும் போதே தமிழக மீனவர்கள் சுட்டுத்தள்ளப்படுகிறார்கள்.

இதைவிட கொடுமை என்னவென்றால் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் எல்லையைத் தாண்டியதால் சுடப்பட்டனர் என்று நமது அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது. எல்லையைத் தாண்டிய குற்றத்திற்காக உலகில் எந்த நாட்டிலாவது மீனவர்கள் சுடப்பட்டிருக்கிறார்களா?

சர்வதேச நீதிமன்றங்கள் எதிலும் மீனவர்களுக்காக நீதி கேட்கும் தைரியத்தைக் கூட நமது அரசாங்கங்கள் இழந்துவிட்டன. இவையெல்லாம் இலங்கை அரசுக்கு தனி துணிச்சலைத் தந்திருக்க வேண்டும்.

இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கனடா நாட்டைச் சார்ந்த பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளதாவது;

இலங்கை என்பது சிங்களவர்களின் நாடு. இதில் மற்றவர்கள் உரிமை கேட்பதற்கு எதுவுமே இல்லை. இலங்கையின் பொறுப்புமிக்க இராணுவத் தளபதியின் அறிவிப்பு இதுதான் என்றால் சாதாரண இராணுவ வீரர்களின் மனநிலை எப்படியிருக்கும்?

எந்த ஒரு நாட்டின் தளபதிக்காவது இவ்வாறு பகிரங்கமாக அறிவிக்கும் தைரியம் இருந்திருக்குமா? மன்னார் வளைகுடாவை தங்களுக்கான ஆயுதங்களைப் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்து கொள்ள இலங்கை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இது எதிர்காலத்தில் எத்தகைய ஆபத்து என்பதை இந்தியா உணர்ந்ததாக தெரியவில்லை. இதற்கு இந்தியா வகுத்துள்ள செயல்திட்டம் வேடிக்கையானது. மற்ற நாடுகளுக்குப் பதிலாக தாங்களே இராணுவக் கருவிகளை விற்பதில் தவறில்லை என்ற கருத்தைப் பிரசாரம் செய்கிறது.

இதைவிட, தனது சக்தி அனைத்தையும் பயன்படுத்தி இலங்கை இராணுவம் நடத்தும் யுத்தத்தை நிறுத்தினால் இந்திய எல்லைக்கும் பாதுகாப்புக் கிடைக்கும். இதைப்போன்று இலங்கை வாழ் தமிழ் மக்களின் உயிரையும் பாதுகாக்க முடியும். இதை இந்தியா ஏன் உணர்ந்து கொள்ள மறுக்கிறது?

அரசியல் தீர்வுதான் இப்பொழுது இலங்கைத் தமிழ் மக்களுக்குத் தேவை. இன்று கனடா கூட்டாட்சியில் கியூபெக் மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சினையைத் தீர்க்க இந்த அரசியல் சட்டத்தை இலங்கை அரசு ஏன் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தலாம் என்று உலக அறிஞர்கள் பலர் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

வவுனியா தமிழன் ஒருவன் பத்திரிகையில் எழுப்பிய கேள்வி ஒன்றுடன் கட்டுரையை முடிக்க விரும்புகிறேன். எங்கள் தலையைக் குறிபார்த்து குண்டுகள் ஏன் விழ வேண்டும்? உணவும் மருந்துப் பொருட்களும் இல்லாமல் தினம்தினம் நாங்கள் ஏன் சாக வேண்டும்? நாங்கள் செய்த குற்றம் தான் என்ன? தமிழனாய் பிறந்ததைத் தவிர.

இந்தக் கேள்வி ஆறு கோடி தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல. மனித குலத்தின் மனச்சாட்சிக்கும் எழுப்பப்பட்ட கேள்வியாகும்.

சி.மகேந்திரன்


Comments