இடப்பெயர்வு: துரத்தும் துயரங்கள்!

* வன்னியில் இடம்பெயர்ந்தோர் நிலைவரம் தொடர்பாக SEDOT இன் விரிவான அறிக்கை

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு, மடு, கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி, பச்சிலைப்பள்ளி, கரைச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், ஒட்டுசுட்டான், கரைத்துறைப்பற்று, மாந்தை கிழக்கு ஆகிய பிரதேசங்களிலும் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்குப் பிரதேசத்திலும் இடம்பெற்றுவரும் விமானக் குண்டுவீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள் மற்றும் யுத்த முன்னெடுப்புகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது நிரந்தர வாழ்விடங்களை விட்டுப் பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்துள்ளனர்.

மக்களிற் பலர் தமது நிரந்தர வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர்ந்ததன் பின்னராக அவர்கள் தங்கியிருந்த இடைக்கால வாழ்விடங்களில் கூடத் தொடர்ந்து தங்கியிருக்க முடியாத நிலையில் தொடர்ச்சியாக இடம்பெயரும் அனுபவத்தினைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் குண்டுவீச்சுக்கள் மற்றும் எறிகணை வீச்சுக்களினால் மிகுந்த சிரமங்களையும் உயிர் ஆபத்துகளையும் சொத்து இழப்புகளையும் அனுபவித்தவர்களாக தமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பிரயத்தனப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மன்னார் மடு பிரதேச மக்கள் கடந்த ஜூன் மாதக் காலப்பகுதிக்குள் ஆறு தடவைகளுக்குமேலாக தமது நிரந்தர இடங்களில் இருந்து இடம்பெயர்ந்ததன் பின்னராகத் தற்காலிக வாழ்விடங்களில் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

அவர்களது இடப்பெயர்வினாலான விளைவுகள்: இடப்பெயர்வு காரணமாக மக்கள் தமது சுய பாதுகாப்பு, சொத்துகள், வாழ்வாதாரம் என்பவற்றை இழந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு இடப்பெயர்வின் போதான செலவுகளை ஈடுசெய்வதற்கேற்ற பொருளாதார வளமானது பெருமளவிலான குடும்பங்களிடம் இருக்கவில்லை என்பது துயரமானதொன்றே.

வன்னிப் பகுதியில் சடுதியாக அதிகரித்துள்ள எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களினது விலை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமது நிரந்தர வாழ்விடங்களில் இருந்தும் அதன் பின்னராகக் குடியிருப்பதற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்த தற்காலிக வாழ்விடங்களில் இருந்தும் பாதுகாப்பான இடங்களைத் தேடி தொலைதூரத்துக்குப் பயணப்பட வேண்டியிருந்தமை காரணமாகத் தாமெடுத்து வந்த சொத்துகள் மற்றும் தமது வைப்புகள் யாவற்றையும் இழந்து நலிவுற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது கிளிநொச்சி கிழக்கு, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் மக்கள் பெருமளவில் குடியேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தற்காலிக வீடுகள்

இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோருக்கு தங்குமிட வசதிகள் இன்றி இக்கட்டானதோர் நிலையினையே எதிர்நோக்கி வருகின்றனர். பாதுகாப்பான இடங்களில் உறவினர் மற்றும் நண்பர்கள் போன்றோர் இருப்பின் அவர்களது வீடுகள் மற்றும் காணிகளில் தற்காலிகமாக குடியிருப்பதற்கான வாய்ப்புகளைச் சிலர் பெற்றுள்ள போதிலும் பலர் பாடசாலைகள் மற்றும் பொது இடங்களிலேயே தங்கவேண்டிய நிலை உள்ளது.

இத்தகைய இடமாற்றத்தின்போது வசதிவாய்ப்புள்ளோர் உழவு இயந்திரம், இருசக்கர உழவு இயந்திரம் மற்றும் பிற வாகனங்களில் தமது வசிப்பிடங்களில் இருந்து ஆகக் குறைந்தது ஐந்து தொடக்கம் பத்து கிலோ மீற்றர் வரையிலான தூரத்தினை அடைவதற்கு முறையே இருபதினாயிரம் (200US $) எண்ணாயிரம் (80 US $) வரை செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு அதிகரித்துக் காணப்படுகின்ற சந்தை விலைக்கு சடுதியாக அதிகரித்துள்ள எரிபொருள் விலை காரணமாகும். தற்போதைய சூழ்நிலையில் மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 260 ரூபாவிற்கும் பெற்றோல் ஒரு லீற்றர் 1400 ரூபாவிற்கும் டீசல் ஒரு லீற்றர் 340 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்கள் குழுவாக இணைந்து வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவதனால் அவர்கள் எடுத்துச் செல்கின்ற தத்தமது உடைமைகளை மட்டுப்படுத்துகின்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய வருமானம் உள்ள மக்கள் தமது நிரந்தர வீட்டினது கூரைத் தகடுகள் முதலான பொருட்களை எடுத்து வருவதனால் இவர்கள் தமது தற்காலிக வசிப்பிடங்களில் வீடுகளை அமைக்க ஏதுவாக உள்ளதெனினும் அன்றாடம் கூலி வேலை செய்து வந்த வறிய மக்களில் பெரும்பாலானோர் பாடசாலைகள், ஆலயங்கள், முன்பள்ளிகள், பொதுமண்டபங்கள் மற்றும் மரநிழல்களிலேயே தங்கியுள்ளனர்.

தவிரவும், இவர்கள் தமது நாளாந்த வாழ்வை நகர்த்துவதற்காக நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளினது உதவிகளையே எதிர்பார்க்க வேண்டியுள்ளது. பொது இடங்களில் இயல்புக்கு மாறான அல்லது சராசரிக்கும் அதிகமான எண்ணிக்கையில் நெருக்கமாகக் குழுமி வாழ்கின்ற மக்களிடையே சமூக, சுகாதாரப் பிரச்சினைகளும் பற்றைக்காடுகளை அண்டிய பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் விச உயிரினங்களினாலான உயிர் ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அத்துடன் வீதிகளுக்கு அருகே தற்காலிகமாக வசித்து வருகின்ற மக்கள் புழுதி மற்றும் தூசு ஆகியவற்றினால் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதோடு சூழலும் காற்றும் வெகுவாக மாசடைந்து வருகிறது.

தேவையான நிவாரணங்கள்

பொது இடங்களில் தங்கியுள்ள மக்களை அவர்கள் தமது நிரந்தர வாழ்விடங்களில் திரும்பும் வரையிலான காலப்பகுதியில் தங்குவதற்கான தற்காலிக மற்றும் அரை நிரந்தர வீடுகளை அமைத்துக் குடியமர்த்துதல். மீள்குடியேற்றங்களில் நிரந்தரமாகவே தங்க விரும்பும் குடும்பங்களுக்கு நிரந்தர வாழ்விடங்களை அமைத்துக் கொடுத்தல். இடம்பெயர்ந்த மக்களை அரை நிரந்தர வீடுகளில் குடியேற்றும்போது அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளைக் கருத்தில் கொள்ளல்.

நீர், சுகாதாரம்

இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளில் உடனடி நிவாரணம் மற்றும் நீண்டகால நோக்குடைய தன்னிறைவான நிவாரணம் ஆகியவை உள்ளடங்கும். உடனடித் தேவையாக சுத்தமான தண்ணீர் கொள்ளப்படும். இவ்விரண்டுமே இல்லாத பட்சத்தில் உடல் நலமும் வாழ்வியலும் ஆபத்துக்கு உள்ளாகும்.

கட்டாயப்படுத்தப்பட்ட இடப்பெயர்வின் பின்னர் ஏற்படும் போதுமான தங்குமிட வசதிகளின்மையினால் இந்தச் சமூகங்களில் ஏற்படும் நோயினால் கிருமி தொற்றும் மற்றும் பிற சுகாதாரக் குறைபாடுகளும் அவையைச் சூழவுள்ள சமூகத்தினருக்கும் ஏற்படும்.

இடப்பெயர்வின் போது கூடுதலானவர்கள் தண்ணீர் மற்றும் கழிவு அகற்றும் தன்மை ஆகிய வசதிகளையே நாடுகின்றனர். இருப்பினும், சில சமயங்களில் இத்தகைய வசதிகள் ஏற்படும் என்ற நம்பிக்கை இழந்தவர்களாய் அவர்களுக்கான வசதிகள் நிறைவேற்றப்படாத நிலை ஏற்படுகின்றது. இதன் விளைவாக, பலர் தண்ணீருக்காக நீண்ட தூரங்கள் பயணம் செய்ய வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அண்ணளவாக ஒரு சராசரி மனிதனுக்கான தண்ணீர், சமையல் மற்றும் சுய சுகாதாரத் தேவைகளுக்காக எட்டு லீற்றர் தண்ணீர் தேவைப்படுகின்றது.

தற்போது, அணைகளுக்கு அருகிலோ அல்லது துப்புரவற்ற கிணறுகளுக்கு அருகிலோ உள்ளவர்களில் சிலர் அந்தத் தண்ணீரையே சமையல், குளியல் மற்றும் தேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். இது நோய்கள் பரவும் தன்மையில் முக்கியமாக ஒரு அதிகப்படியான சுகாதார முறைகேட்டை தோற்றுவிக்கின்றது. அருகில் கழிவறை வசதிகள் அற்றவர்கள் தங்களின் கழிவுகளை வெளியேற்ற அகழிகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

இது பாரிய, மக்கள் குறைவாக செறிந்து வாழ்கின்ற இடங்களில் பிரச்சினையாக இல்லாவிடினும் மக்கள் அதிகபடியாகச் செறிந்து வாழும் இடங்களில் மிக அதிக அளவிலான சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்கும்.

இந்த புதிதாக உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளோர் கூடுதலாக மக்கள் செறிந்து வாழும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களிலேயே வாழ்கின்றனர். பொது இடங்களில் இருக்கும் மக்கள் சுத்தமான நீர் மற்றும் சுகாதார வசதிகள் குறைந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

எதிர்வரும் மழைக் காலத்துடன், சிறந்த முறையில் கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளாத நிலையில், நோய்கள் பரவும் தன்மை அதிகப்படியாகவே உள்ளது. தேவைப்படும் நிவாரணம் சுகாதாரத்தை பேணுவதற்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்குதல்.

இவை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. நிரந்தரமான அல்லது ஓரளவு நிரந்தரமான தங்குமிடங்கள் உருவாக்கப்பட உள்ள இடங்களிலோ ஏற்கனவே உருவாக்கப்பட்ட இடங்களிலோ ஓரளவு நிரந்தரமான அல்லது நிரந்தரமான தண்ணீர் மற்றும் கழிவகற்றும் வசதிகள் வழங்கப்படல் வேண்டும்.

மாசு ஏற்படக்கூடிய தண்ணீர் உள்ள இடங்களில் குடிதண்ணீர் துப்புரவு செய்யும் வசதிகளை உருவாக்குதல். நீர் மற்றும் சுத்தமான சுகாதாரத் தேவைகள் தொடர்பான ஒரு சுகாதார விழிப்பூட்டல் வழங்கப்படல் வேண்டும்.

சுகாதாரத்தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான சுத்தமான தண்ணீர் வசதிகளை விநியோகித்தல். சூரிய ஒளியில் இயங்கும் தண்ணீர் சூடு செய்யும் கருவிகளை வழங்குவதற்கு சீடொட் திட்டமிட்டுள்ளது. சுத்தமான வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நோய்க்கிருமிகளைக் கொல்வதற்கு பயன்படுவதோடு அவர்களின் பொருளாதாரத்துக்கும் இது உகந்ததாக இருக்கும்.

உணவு பழுதடையாத பொருட்களே இடப்பெயர்வின் போது எடுத்துச் செல்லக்கூடிய உணவுப் பொருட்களாக இருக்கும். அவர்கள் இடம்பெயரவேண்டி ஏற்பட்ட இந்த அவசரமான கால நிலைகளில் அனைத்து இடம்பெயர்ந்த மக்களினாலும் இத்தகைய பொருட்கள் எடுத்துவரப்பட இயலாத நிலையே ஏற்பட்டிருக்கும். உணவுப் பொருட்கள் இல்லாதவர்களுட் பொருட்களை வாங்குவதற்குப் போதுமான பண வசதியற்றவர்களும் தங்களின் நாளாந்த வாழ்வியல் தேவைகளுக்காக நிவாரணத்திலேயே நம்பி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்தகைய நிவாரண உதவியும் நம்பகரமானதாக இருக்காது.

குழந்தைகள், பெண்கள், முதியோர் மற்றும் உடல் வலுவுற்றோர் போன்ற பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு இது பட்டினியையே ஏற்படுத்திவிடும். இந்த சமூகங்களில் உள்ளவர்களுக்கு கடல் உணவும் மரக்கறிகளுமே வழமையான உணவாக இருந்து வந்துள்ளது.

அரசின் படை நடவடிக்கை காரணமாக இவர்களின் வயல்கள் மற்றும் மீன்பிடி செய்யும் இடங்களில் இருந்து இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதால் இந்தப் பொருட்களுக்கான விலையும் பொதுவாக அதிகரித்துள்ளது. தற்போது மீனின் விலை 450 ரூபாவாக உள்ளது. (4.5 ஐக்கிய அமெரிக்க டொலர்கள்) இது கூடுதலானவர்களால் வழங்க இயலாததாகவே இருக்கும். இதனால் கருவுற்ற தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் உடல் வலுவுற்றோருக்கு போதுமான சத்துணவு வழங்கப்படாத நிலையே ஏற்படுகின்றது. இடப்பெயர்வின்போது பொருட்களையும் அதிகமாகவே இவர்கள் இழந்திருப்பதனால் இவர்களில் கூடுதலானவர்கள் தங்களின் வருமானத்தை இழந்தவர்களாகவே உள்ளனர்.

இது அவர்களின் குடும்பங்களின் நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஒரு பாரிய தாக்கத்தை உண்டு பண்ணுகின்றது. தேவையான சமையல் உபகரணங்களைக் கொண்டுவர இயலாமை, விறகுகள் இல்லாமை ஆகியவற்றினால் சமையலில் சிக்கல் ஏற்படுகின்றது. ஒரு ஈருருளிச் சுமை விறகு 600 ரூபாவாக தற்போது உள்ளது. இது இடம்பெயர்ந்து வாழும் மக்களினால் செலுத்தப்பட இயலாத செலவுத் தொகையாகவே இருக்கும். இதன் பலனாக குடும்பத்துக்கான அன்றாட சமையல் மற்றும் உணவு வழங்கல் என்பது மிகப்பெரிய சவாலாகவே இவர்களுக்கு இருக்கும்.

தேவையான நிவாரணம் இடம்பெயர்ந்த சமூகங்களில் வாழும் பாதிக்கப்பட்டவர்களுக்கு போஷாக்கான உணவுப் பொருட்களை வழங்குதல். நாளாந்த தேவைகளைச் சீர் செய்யும் முகமாக கல்வி மற்றும் தொழில்சார் உதவிகளை வழங்குதல். சத்தான உணவு உற்பத்தியை ஊக்குவிக்கு முகமாக விவசாய முயற்சிகளை ஊக்குவித்து சிறு அளவிலான உணவு உற்பத்திக்கான நிதி உதவிகளை வழங்குதல்.

இது தேவையான நிதி முதலீட்டை அவர்களுக்கு வழங்குவது என்பதோடு அவற்றுக்கான உபகரணங்கள் மற்றும் உற்பத்திக்கான விதைகள் ஆகியவற்றை வழங்குதல் என்பதையும் உள்ளடக்கும். இந்த இடத்தில் ஏற்படும் அதிகரித்த உணவுத் தேவைகளுக்கான பாரிய அளவிலான உணவு உற்பத்தி மையங்களை உருவாக்குதல். உடல் சீர்கேட்டை உருவாக்கும் உணவு மற்றும் மாசுபடுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்துக் கொள்ளும் பாதுகாப்பான உணவுக் கருத்தூட்டல்களை வழங்குதல்.

சூழல் மாசுக்கு உகந்த தூசு அடுப்புகளையும் சீடொட் மிகவும் குறைந்த விலையில் விறகுக்கான மாற்றீடாக வழங்கி சமையல் மற்றும் சுத்தமான குடிநீர் இடம்பெயர்ந்த மக்களுக்குக் கிடைக்கும் வகையில் செய்ய உதவுகின்றது.

சுகாதாரம், மருத்துவப் பராமரிப்பு

வன்னியில் ஏற்பட்டுள்ள தற்போதைய மருத்துவத் தடை காரணமாக மக்கள் பெரும் அளவில் மருத்துவப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றனர்.


Comments