தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதையும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் நடத்தப் பட்டுவரும் ராணுவத்தாக்குதலையும் எதிர்த்து தமிழ் நாடே கொந்தளித்திருக்கும் நிலையில்... ''இலங்கைத் தமிழ் மீனவர்களின் சோகம் தெரியுமா?'' என கேள்வி எழுப்பியுள்ளார் யாழ் பல்கலைக்கழக பேரா சிரியர் ஏ.எஸ்.சூசை.
'பாக் நீரிணை கடற்பரப்பில், இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள்' என்ற தலைப்பில் உரையாற்ற சென்னை வந்திருந்த சூசையை சந்தித்தோம்.
''தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் போதெல்லாம் நாங்கள் படும் வேதனை சொல்லி மாளாது. அதேநேரம், எங்களுடைய மக்கள் படும் வேதனையை நீங்கள்
அறிந்துகொள்ள வேண்டும். 1980-களுக்கு முன்... இனக்கலவரம் ஆரம்பித்திராத நேரம். எம்.ஜி.ஆர். படம் என்றால் எங்களுக்கு உயிர். 'படகோட்டி' திரைப்படத்தை, ரிலீஸ் தேதியன்றே பார்த்துவிடவேண்டும் என்ற துடிப்பில் எத்தனை படகுகள் தமிழகத்தில் கரையேறின என்பதற்கு கணக்கில்லை. இரவு தமிழ்நாட்டில் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு, காலையில் தாய்நாடு திரும்பிவிடுவோம். ஆனால், இன்றைய நிலைமை?'' என பெருமூச்சு விட்டபடி தொடர்ந்தார்.
''இந்திய மீனவர்களின் பிரச்னைகளைப் பேசுகிற யாரும், இலங்கை வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவது குறித்து வாய் திறப்ப தில்லை. அங்கே அத்துமீறி மீன்பிடித்துச் செல்லும் தமிழக மீனவர்களைப் பற்றிப் பேசினால், அது சிங்களப் படைக்கு ஆதரவாக வெளிப்பட்டுவிடுமோ என்று மக்களும் பேச பயப்படுகிறார்கள். யாழ்குடா நாட்டுக்கும், தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட அந்த மிகச்சிறிய கடற்பரப்பை நம்பி நூறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் மீனவ மக்கள் இருக்கிறார்கள். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த இவர்கள் அனைவருமே தமிழர்கள். இறால், நண்டு, கணவாய், சங்கு, கடல் அட்டை என வருடம் முழுவதும் தொழில் செய்யும் அளவுக்கு செழிப்பான மீன்வளம் நிறைந்தது இப்பகுதி. சுமார் 24 கி.மீ. நீளமே உள்ள இந்தக் கடற்பரப்பை, இருநாடுகளும் சரிபாதியாக பங்கிட்டுள்ளன. 1976-ல் மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தப்பப்படி சர்வதேச எல்லைக்கோட்டைத் தாண்டுவது தடுக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
ஆனால், இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த பிறகு, சொந்த மக்கள் மீன் பிடிப்பதற்கே பல தடைகள். 'இரவு நேரங்களில் மீன்பிடிக்கக்கூடாது, இயந்திரப் படகுகள், இழுவை வலைகளைப் பயன்படுத்தக்கூடாது. மூன்றில் இருபகுதி கடற்பரப்பு தடை செய்யப்பட்டு, ஒரு பகுதியில் மட்டுமே மீன்பிடிப்புச் செய்யலாம். அதிலும், அரசு அறிவிக்கும் நேரத்தில் குறிப்பிட்ட தூரம் வரையே செல்லவேண்டும்' என்றெல்லாம் உத்தரவிடப்பட்டுள்ளது. சிங்கள கடற்பகுதிக்குள்ளும் தமிழ் மக்கள் மீன்பிடிக்க முடியாது. யுத்தம் காரணமாக பல கிராமங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
எம்முடைய மக்களிடம் நவீன மீன்பிடிக் கருவிகளோ, படகுகளோ இல்லை. சாதாரண நாட்டுப் படகுகள்தான். ஆனால், தடை செய்யப்பட்ட இழுவை வலைகள் மற்றும் இயந்திரப் படகுகளை இந்திய மீனவர்கள் எம்முடைய பகுதியில் பயன்படுத்துகிறார்கள். நாங்கள் மீன்பிடிப்பதற்கே அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நாட்களில்கூட, தமிழக மீனவர்கள் அத்துமீறுவதை வாய்மூடி பார்த்துக்கொண்டு நிற்கிறோம். இப்படியாக பேசாலை, பாலைத் தீவு, நெடுந்தீவுக் கரையோரம் வரை இந்தியர்கள் வந்து போகிறார்கள். எம்முடைய மக்கள் கடலில் விட்டுவைத்திருக்கும் படுப்பு வலைகள் இந்திய மீனவர்களின் இழுவை வலைகளால் (ரோலர் நெட்) அறுத்தெறியப்படுகின்றன. அந்த நொடியில், இரண்டரை லட்ச ரூபாய் எங்களுக்கு நட்டம். இதையெல் லாம் நாங்கள் யாரிடம் போய்க் கேட்பது?
ராணுவத்துக்கு யார் மீதும் அக்கறை இல்லை. படகில் வருபவர்கள் போராளியாக இருக்கக்கூடும் என்கிற சந்தேகத்திலேயே அவர்கள் சுட்டுத் தள்ளுகிறார்கள். எங்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு தேசத்து மக்கள் இப்படிக் கொல்லப்படுவது கேட்டு நாங்கள் வேதனைப்படுகிறோம். அதேவேளையில், எங்களுடைய நிலைமை அவர்களைவிட மோச மாக இருக்கிறது. இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் இனப்பிரச்னைக்கு சுமுகமான தீர்வு எட்டப்படாதவரை இந்திய-இலங்கை மீனவர் பிரச்னையும் தீரப் போவ தில்லை. கூடுமானவரை இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் ஊடுருவாமல் இருப்பது இரண்டு பேருக்குமே நல்லது. இதற்காக இரு நாட்டு மீனவர்களையும் ஒன்றினைத்து, இரண்டு நாட்டு அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்'' என்கிறார் சூசை.
Comments