![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXMZSw7SB2fYiWPg7YrAbGIqZTi1ZpJy2LcfHk9UhgPDzm38q0PVALOS6GVAZfh40ADfpfvtpN0zI1ux5Tarmw_23AB8LRI73IrXvpIbTARCIxUt1W9kGRdHZV8ta-Y5QQrOzBTA0nz3ZQ/s400/pg1.jpg)
வெகு அபூர்வமாகத் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருசேர இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக குரல் கொடுத்திருக்கின்றன.
எதிர்க்கட்சிகள் உண்ணாவிரதத்துடன் தங்கள் எதிர்ப்பைக் காட்டின. தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அரசு உடனடியாகத் தலையிடக் கோரியதுடன் - `தி.மு.க. அரசு தேவையா என்பதற்கு விடை காணவேண்டும்' என்று உணர்வுபூர்வமாகப் பேசியிருக்கிறார்.
இலங்கையின் முற்றிவரும் போர் நெருக்கடியும் கிளிநொச்சி போன்ற பகுதிகளில் தொடர்ந்து நடக்கும் தாக்குதல்களும், இந்திய மீனவர்கள் மீது நடக்கும் அத்துமீறல்களும் இலங்கை அரசின் வரம்பற்ற சர்வாதிகாரத்தையே வெளிப்படுத்துகின்றன.
ஏற்கெனவே சுமார் 70000 பேர் வரை தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் நிரம்பியுள்ள நிலையில், இலங்கையின் போர்த் தீவிரம் இன்னும் ஆயிரக்கணக்கான அகதிகளையே இங்கு வரவழைக்கும். போர் உக்கிரத்தினால் கிளிஞ்சல்களைப் போல கடலோரங்களில் நிர்க்கதியாக ஒதுங்குவது எத்தனை பெரிய வேதனை?
அகதிகளாக ஒதுங்குபவர்கள் மீது காட்டும் கருணையை அவர்கள் அகதிகள் ஆக்கப்படுவதற்கு முன்பே காட்டக்கூடாதா?
இலங்கைத் தூதரை அழைத்து, தன்னுடைய கண்டனத்தை மத்திய அரசு தெரிவித்திருப்பது நல்ல அறிகுறிதான். இருந்தாலும் அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக நடக்கும் போரில் இலங்கை அரசுக்கு உதவி செய்வதும் ஆதரவுக் கரம் நீட்டுவதும் தடுத்து நிறுத்தப்படவேண்டும். இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தலையிட்டு இந்தத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
இலங்கையில் தமிழினம் படிப்படியாக வேரறுக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் மௌனமான `தமிழ் சாட்சிகளாக' நாம் மாறி விடக்கூடாது..
Comments