கிளிநொச்சி சமர் போரின் முடிவா? இல்லை தொடக்கமா?

கடந்த மாதம் வான்புலிகள் வவுனியா படைத்தலைமையகம் மீது மேற்கொண்ட தாக்குதல் இந்திய மத்திய அரசின் இரட்டை நிலைப்பாடு தொடர்பில் ஓர் அழுத்தமான நெருக்கடியை தென்னிந்தியாவில் ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அரசு மறைமுகமாக மேற்கொண்டு வந்த படைத்துறை உதவிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை விடுதலைப்புலிகளின் இந்த தாக்குதல் ஆதாரபூர்வமாக நிரூபித்ததால் இந்திய மத்திய அரசு பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதுடன்,

இலங்கையில் துன்பப்படும் தமிழ் மக்கள் தொடர்பான தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழக கட்சிகளும் உள்ளன.

இந்திய படைத்துறை பொறியியலாளர்க ளான (ஏ.கே.தாகூர், சிந்தாமணி ரான்ட்ற் ஆகியோர் காயமடைந்தது, ஆயுத உதவிகளுக்கு அப்பால் இந்திய மத்திய அரசு ஆளணி உதவிகளையும் வழங்கி வருகின்றதா என்பது தொடர்பில் பலத்த சந்தேகங்களை எழுப்பி யுள்ளது.

இந்திய தொழில்நுட்பவியலாளர்கள் ராடர்களை இயக்குவதற்கு அப்பால் பீரங்கி தாக்குதல்கள் மற்றும் வான் தாக்குதல்களை நெறிப்படுத்துதல் போன்றவற்றிலும் உதவிகளை மேற்கொண்டு வருவதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுத் துள்ள இந்திய அரசின் தாக்கம் கடந்த மாதம் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா சபையின் 63 ஆவது கூட்டத்தொடரில் எதிரொலித்துள் ளது. இலங்கைத் தரப்பு பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்ட போதும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க மறுத்துவிட்டார்.

இருந்த போதும் வெளிப்படையாக சந்திக்க மறுப்பதும், இரகசியமாக படைத்துறை உதவிகளை வழங்குவதுமான இந்த இரட்டை நிலைப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் என கொள்ள முடியாது.

இதனிடையே வன்னி கள?னைகளில் இராணுவம் பாரிய வெற்றிகளை சந்தித்து வருவதாக அரசினால் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் கூட சரிந்து வரும் இலங்கை அரசின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த உதவவில்லை என்பது தென்னிலங்கையின் பொருளியல் நிபுணர்கள் மத்தியில் தோன்றி யுள்ள புதிய அச்சம். இந்த வருடத்தில் இலங்கையின் பங்குச்சந்தை 104.8 பில்லியன் ரூபாக்களை இழந்துள்ளது.

இந்த இழப்புடன், நடப்பு வருடத்தில் பங்குச்சந்தை 16.3 வீத இழப்பை சந்தித்துள் ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பங்குச்சந்தை 14 பில்லியன் ரூபாக்களை ஒரே நாளில் இழந்திருந்தது. இது 2000 ஆண்டில் போர் ஓர் உக்கிர நிலையை அடைந்திருந்த முதல் நான்கு மாத காலப்பகுதிகளில் ஏற்பட்ட இழப்பை விட 10 மடங்கு அதிகமாகும்.

உலகின் பொருளாதார நெருக்கடிகள் இலங் கைப் பொருளாதாரத்தில் அதிக பாதிப்புக் களை ஏற்படுத்தியிருந்த போதும், உறுதியற்ற அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளும் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு தள்ளி வருகின்றது. எனினும் இழுபட்டு செல்லும் போரில் இருந்து மீள முடியாத அரசு அதற்கு தேவைப்படும் நிதிகளை வாரி இறைத்து வருகின்றது.

எதிர்வரும் ஆண்டுக் கான பாதுகாப்பு செலவினமும் 21 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன.

வன்னி களநிலைமைகளை பொறுத்த வரையில் கடந்த மாதத்தின் ஆரம்பத்தில் நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் பகுதி வரையிலும் ஆரம்பித்த உக்கிர மோதல்கள் தொடர்ந்தவாறு உள்ளன.

நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் பகுதி வரையிலுமான 25 கி.மீ தூரத்திற்கு விடுதலைப்புலிகள் அமைத்துள்ள வலுவான பாதுகாப்பு மண் அணைகளும் அதனை அண்டிய பொறிக் கிடங்குகள் மற்றும் பதுங்குகுழிகள் படை யினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

வளைவு நெளிவுகளுடன் அமைக்கப்பட் டுள்ள இந்த 12 அடி உயர மண் அணைகளில் விடுதலைப்புலிகளின் சினைப்பர் அணிகளும் நிலையெடுத்துள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

எனினும் உக்கிரம் பெற்றுவரும் மோதல்கள் படைத்தரப்பிலும் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த மாதம் 2 ஆம் மற்றும் 15 ஆம் நாட் களில் ஏற்பட்ட மோதல்களில் இராணுவத்தின் 57 மற்றும் 58 ஆவது படையணிகள் கடுமை யான சேதங்களை எதிர்கொண்ட நிலையில் இராணுவம் தனது படையணிகளை மறுசீர மைக்கும் முயற்சிகளையும் மேற்கொண் டுள்ளது.

இதுவரை 3 பிரிகேட்டுக்களை கொண்டி ருந்த 57 ஆவது படையணியில் மேலும் ஒரு புதிய பிரிகேட் இணைத்துக் கொள்ளப்பட்டுள் ளது. இந்த புதிய 574 பி?கேட்டின் கட்டளை அதிகா?யாக லெப். கேணல் செனக்க வியஜசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 11 ஆவது இலங்கை இலகுகாலாட் படை பற்றலி யனின் கட்டளை அதிகாரியாக 58 ஆவது படையணியின் 3 ஆவது பிரிகேட்டில் பணியாற்றி வந்தவராவார். 571 பிரிகேட் இராணுவம் திருமுறிகண்டி அக்கராயன் வீதியை குறிவைத்து இரு முனைகளால் நகர முயன்றுவருகையில், 572 பிரிகேட் கொக்காவில் நோக்கி நகர்வை மேற்கொண்டு வருகின்றது. இந்த பிரிகேட்டின் கட்டளை அதிகாரியான லெப். கேணல் செனரத் பண்டார கடந்த வாரம் கேணலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸின் வழிநடத்தலில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் 57 ஆவது படையணி 1997 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வெற்றி நிச்சயம் படை நடவடிக்øயில் ஈடுபட்ட 53 ஆவது படையணியின் தரத்தில் பேணப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

எனினும் கடந்த ஆண்டு விளாத்திக்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதல் அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் தொடர் எதிர்த்தாக்குதல்களில் இந்த படையணி கடுமையான இழப்புக்களை சந்தித்து வருவதும் இராணுவம் மீண்டும் மீண்டும் அதனை மறுசீரமைத்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த மாத ஆரம்பத்தில் வன்னேரிக்குளம் மற்றும் அக்கராயன் பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் 571 ஆவது பிரிகேட்டை சேர்ந்த 4 ஆவது சிங்கப்படை பற்றலியன் (4குகீ) கடுமையான இழப்புக்களை சந்தித் திருந்ததுடன், லெப். கேணல் எஸ்.வெலிகல தலைமையிலான இந்த பற்றலியனின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததும் நீங்கள் அறிந்தவையே.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிடாச்சூரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஜெகத் டயஸ் மயிரிழையில் உயிர்தப்பியிருந்தார். அதன் பின்னர் அவர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டிருந்தார். ஆரம்பத்தில் மூன்று பிரிகேட்டுக்களை கொண்டிருந்த இந்த படையணியுடன் மேலதிகமான 2,500 இராணுவத்தினர் சேர்த்துக் கொள்ளப்பட்டு நான்கு பிரிகேட்டுக்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. ஏனைய படையணிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களையும், புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள��
�யும் கொண்டே நான்காவது பிரிகேட் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 57 ஆவது படையணியில் உள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவே இலங்கை இராணுவத்தில் உள்ள மிகப்பெரும் தாக்குதல் டிவிசனாகும்.

இதனிடையே 573 ஆவது பிரிகேட் வட்டக்காடு ஊடாக மாங்குளம் நோக்கிய நகர்வை முனைப்பாக்கி வருகையில், 574 ஆவது பிரிகேட்டை கிளிநொச்சி நோக்கிய நகர்விற்கு இராணுவம் தயார் படுத்தி வருகின்றது. எனினும் கிளிநொச்சி நோக்கிய படையினரின் நகர்வு சுலபமாக இருக்கப்போவதில்லை. விடுதலைப்புலிகளின் அதி உச்ச பயிற்சி கொண்ட படையணிகளின் தாக்குதல்களை படையினர் எதிர்கொள்ள நேரிடும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

மேலும் வெற்றி நிச்சயம் படை நடவடிக்கையின் முடிவுப்புள்ளியாக ஒட்டுசுட்டான் களமுனை அமைந்தது போல தற்போதைய படை நடவடிக்கையின் முடிவுப்புள்ளியாக கிளிநொச்சி களமுனை அமைவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் தென்படுகின்றன.

ஆனால் தமது படை நடவடிக்கைகளை இலகுவாக்கும் நோக்கத்துடன் இலங்கை வான்படை தீவிர வான் தாக்குதல்களை கிளிநொச்சி மற்றும் அக்கராயன் பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றது.

கடந்த புதன்கிழமை அதிகாலை 5.30 மணியில் இருந்து மாலை 2.30 மணிவரையில் மூன்று தடவைகள் வான்படையினர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு நகரங்களை தாக்கியுள்ளனர். கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 13 க்கு மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் வான் தாக்குதல்களில் பொதுமக்களுக்கு உயிரிழப்புக்களும் பொருளாதார அழிவுகளும் ஏற்பட்டு வருவது கவனிக்க தக்கது.

புதன் மாலை 2.30 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலானது கிளிநொச்சியில் இயங்கிவந்த உயர்தொழில்நுட்ப நிறுவனமான கணனிநுட்பக்கூட்டு நிறுவனம் மீதே நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை ரம்ழான் விடுமுறை என்பதனால் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்ட போதும், வளாகம் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது.

உலகில் பரந்து வாழும் தமிழ் கணனி நிபுணர்களின் உதவியுடன் வன்னியில் உள்ள இளைய சமூகத்தின் தொழில்நுட்ப தரத்தை உயர்த்தும் நோக்குடன் அமைக்கப்பட்டிருந்த இந்த வளாகம் தாக்குதலில் அழிக்கப்பட்டது தமிழ் மக்கள் மத்தியில் அதிக வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் மறு நாள் வியாழக்கிழமை (02) மதியம் 12.50 மணியளவில் வன்னி வான்பரப்பிற்குள் நுளைந்த இரண்டு கிபீர் விமானங்கள் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் மீது 16 குண்டுகளை வீசியுள்ளன.

இந்த தாக்குதலில் சமாதான செயலகம் சேதமடைந்ததுடன், அதற்கு அருகில் இருந்த வீடுகளும் கடுமையான சேதத்துக்குட்பட்டன.

இரு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 18 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் வான்படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை நோக்கும் போது கிளிநொச்சியின் உட்கட்டுமானங்களை முற்றாக அழித்து விடும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவே எண்ணத் தோன்றுகின்றது. அனைத்துலக இராஜதந்திரிகளும், சமாதான அனுசரணையாளர்களும் விடுதலைப்புலிகளை சந்தித்து கலந்துரையாடும் சமாதான செயலகம் மீதான தாக்குதல் மிகவும் உணர்திறன் மிக்கது.

அதன் மறு தாக்கம் தென்னிலங்கையில் பலமான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் என வன்னியில் இருந்து இயங்கிவரும் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கொக்காவில் நோக்கிய நகர்வில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினர் ஏ9 நெடுஞ்சாலையை குறிவைத்து தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதுடன், கிளிநொச்சி நகரப்பகுதியை நோக்கியும் கடந்த வியாழக்கிழமை இராணுவத்தினர் எறிகணை வீச்சுக்களை ஆரம்பித்துள்ளனர்.

கொக்காவிலுக்கும் முறிகண்டிக்கும் இடைப்பட்ட ஏ9 நெடுஞ்சாலையில் வீழந்து வெடிக்கும் எறிகணைகளால் பொதுமக்களின் போக்குவரத்துக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளன.

விடுதலைப்புலிகளின் விநியோக வழிகளை தடுக்கும் நோக்குடன் இராணுவம் ஏ9 பாதையை குறிவைத்து தாக்குதலை நடத்தி வருகின்ற போதும், விடுதலைப்புலிகள் பழைய கொக்காவில் ஒட்டுசுட்டான் கரிப்பட்டைமுறிப்பு வீதியையோ அல்லது அதற்கு அப்பால் உள்ள உட்பகுதிகளையோ தமது போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியும்.

வன்னியின் பிரதான போக்குவரத்து பாதைகளை தடை செய்து, அங்கு வாழும் மக்களின் அடிப்படை வசதிகளை சிதைப்பதன் மூலம் ஒரு முழுமையான முற்றுகைப் போரை நடத்துவதற்கு அரசு முயன்று வருகின்றது.

தொடர்ச்சியான வான் தாக்குதல்கள் மூலம் அங்கு வாழும் மக்களை அச்சுறுத்தி வெளியேற்றவும் அரசு முயன்றுள்ளது.

முதலில் அங்கு வாழும் மக்களை வவுனியாவின் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு கவர்ந்து இழுக்கும் நோக்கத்துடன் வவுனியா பகுதியில் பல இடைத்தங்கல் முகாம்களை அரசு அமைத்ததுடன் பெரும் பிரசாரங்களையும் மேற்கொண்டு வந்திருந்தது.

தனக்கு சார்பான அனைத்துலக பிரதிநிதிகள் மூலமும் இந்த பிரசாரங்களை அது முன்னெடுத்திருந்தது. எனினும் யாருமே வன்னியில் இருந்து வெளியேறாத நிலையில் அங்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வந்த தொண்டர் அமைப்புக்களை வெளியேற்றும் முடிவை அரசு மேற்கொண்டிருந்ததுடன், அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் விநியோகத்தையும் முடக்கியிருந்தது.

எனினும் அரசின் இந்த நடவடிக்கைகள் மக்களை கவர்ந்திழுப்பதற்கு பதிலாக அனைத்துலகத்தின் வெறுப்புக்களை சம்பாதித்திருந்தது. தற்போது உணவு விநியோகத்திற்கு அரசு சம்மதித்துள்ள அதே சமயம் வான் தாக்குதல்களையும், எறிகணை தாக்குதல்களையும் அரசு தீவிரப்படுத்தியுள்ளதுடன், கிளிநொச்சியின் உட்கட்டுமானங்களையும் சிதைக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது.

இந்த வருடத்தின் இறுதிக்குள் கிளிநொச்சியை கைப்பற்றினால் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் பொதுத்தேர்தலை நடத்திவிடலாம் என்பது அரசின் கணிப்பு.

ஆனால் கிளிநொச்சியை கைப்பற்றுவதோ அல்லது அதனை தக்கவைப்பதோ இலகுவானதல்ல. 1996 களில் இலங்கை இராணுவத்தின் 53 மற்றும் 55 ஆவது படையணிகள் கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னர் 54 ஆவது படையணியின் ஒரு பிரிகேட் அங்கு நிலைகொண்டிருந்தது.

ஆனால் 1998 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நடைபெற்ற தாக்குதலில் இந்த பிரிகேட் கடுமையான சேதங்களை சந்தித்ததுடன், இந்த இரு தாக்குதல்களிலும் அது ஏறத்தாழ ஒரு முழுமையான அழிவை சந்தித்திருந்தது.

வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்களின் படி விடுதலைப்புலிகள் பெரும் தாக்குதல் ஒன்றிற்கு தமது படையணிகளை ஒருங்கிணைத்து வருவதாகவும், தாக்குதல் ஒன்று ஆரம்பமாகும் போது இலங்கைத் தீவு முழுவதையும் அது போருக்குள் தள்ளும் எனவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.

அதற்கான அறிகுறிகள் தற்போது கிழக்கிலும், யாழ்குடாவிலும், அம்பாந்தோட்டையிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளதைக் காணமுடியும். எனவே கிளிநொச்சி மீதான தாக்குதல் என்பது அரசு கூறுவது போல போரின் முடிவா அல்லது ஆரம்பமா என்பது இன்னும் ஓரிரு மாதங்களில் தெரிந்துவிடும்.

-அருஷ்-

Comments