சீமான்-அமீரை விடுவிக்க சரத் கோரிக்கை

ஈழத் தமிழர் படுகொலை தொடர்பாக உணர்ச்சிவசப்பட்டு பேசிய இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையின் போது, பெருமைமிக்க ஒரு தலைவியை இழந்த ஆவேசத்தில், எவ்விதத்திலும் சிறிதும் அக்கொலைக்கு தொடர்பில்லாத ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்களை கொன்று குவித்த நிகழ்வுகளெல்லாம் வரலாற்றின் பதிவுகளில் இடம் பெற்றிருக்க,

இன்று மட்டும் இலங்கையில் ஈவு இரக்கமில்லாமல் 25 வருடங்களுக்கு மேலாக சிங்கள இன வெறியர்களாலும், இலங்கை ராணுவத்தாலும் அழிக்கப்பட்டு வரும் ரத்த உறவுகளான ஈழத் தமிழர்களின் படுகொலைக்காக, உணர்ச்சிவயப்பட்டு ஒரு தமிழன் சில வார்த்தைகள் உதிர்ப்பதைக்கூட தேச விரோதம் என்று கூக்குரல் விடுப்பதை நினைத்து வெட்கப்பட வேண்டியுள்ளது.

சீக்கிய மதத்தைச் சார்ந்த மன்மோகன் சிங்கை பிரதமராக்கி, ஒரு வன்முறையாளரின் குற்றத்திற்கு ஒரு இனம் கூண்டில் ஏற்றப்படக் கூடாது என்னும் மன்னிக்கும் பக்குவத்தை இந்த நாட்டிற்கு சொன்ன காங்கிரஸ் கட்சியின் தமிழக தளகர்த்தாக்கள், தமிழ் ஈழ விவகாரத்தில் மட்டும் விடுதலைப் புலிகளை மனக்கண்ணில் நிறுத்திக் கொண்டே இலங்கை வாழ் தமிழர்களின் அபயக்குரலை புறக்கணிப்பது எவ்வகையில் நியாயம்?

மறைந்த பிரதமர் ராஜீவின் கொலை என்பது விடுதலைப் புலிகளின் தற்கொலைக்குச் சமம் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் அக்கொலைக்கு பரிகாரமாய் எவ்வகையிலும் கிஞ்சித்தும் தொடர்பில்லாத 35 லட்சம் ஈழத்தமிழர்களை பலி கொடுத்துத்தான் ஆக வேண்டுமா? என்பதைத்தான் பிறப்பால் தமிழர்களான தமிழக காங்கிரசார் பரிவோடு பரிசீலிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை சதியில் முக்கிய பங்காற்றியவராக குற்றம் நிரூபிக்கப்பட்டு தூக்குத் தண்டனை கைதியாக வேலூர் சிறையிலுள்ள நளினியை, பிரியங்கா காந்தி ஏன், எதற்காக சந்தித்தார் என்பதையெல்லாம் கேள்வி எழுப்பாமல் பொறுத்துக் கொண்டவர்கள்,

தன் இனத்தில் பிறந்த அப்பாவித் தமிழர்கள் செத்து மடிகிறார்களே என்ற கண்ணீர் கசிவில் சிங்கள ராணுவத்தை கண்டித்தும் அந்த ராணுவத்திற்கு பயிற்சியையும், தளவாடங்களையும் கொடுத்து உதவுகிற இந்திய ராணுவத்தின் தமிழின விரோதத்தை கண்டித்தும் பேசிய தமிழ் திரைப்பட இயக்குனர்கள் அமீர், சீமானை மட்டுமே தண்டித்தே ஆக வேண்டும் என்று ஆவேசம் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது.

ஒருபுறம் கண்மூடித்தனமாக நடத்தப்படும் ராணுவத் தாக்குதல்களாலும், வான்வெளித் தாக்குதல்களாலும் செத்து மடியும் ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழர்கள், மறுபுறமோ அடர்ந்த காடுகளில் ஒளிந்தாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று முயற்சித்து விஷப்பாம்புகளால் செத்து மடியும் அப்பாவித் தமிழ் பெண்கள், குழந்தைகள் என்று ஒரு இனமே அழிக்கப்பட்டு வரும் நிலையில் நாம் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.

மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக போராடி வரும் ஈழத் தமிழ் மக்கள் இந்திய வாழ் தமிழர்களின் தொப்புள் கொடி உறவு என்பதை இந்திய அரசு உணர்வுப் பூர்வமாக உள்வாங்கிக் கொண்டு, சிங்கள இலங்கை ராணுவத்திற்கு எந்தவித உதவிகளையும் செய்யாதிருக்க அரசியல் கடந்து அனைத்துக் கட்சிகளும் இந்திய அரசை தொடர்ந்து நிர்பந்திக்க வேண்டும்.

பாகிஸ்தானிடமிருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காய் பங்களாதேஷ் என்னும் புதிய நாடு உலக வரை படத்தில் உருவாவதற்கு ஒரு யுத்தத்தையே நடத்திய அன்றைய இந்திய அரசு போல் இல்லாவிடினும், இலங்கையில் உள்ள தமிழ் இன மக்களின் உரிமைப் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து அம்மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்றுத் தரும் நோக்கோடு இப்பிரச்சனையை இந்திய அரசாங்கம் அணுக வேண்டும்.

தமிழக முதலமைச்சருடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்திப்பில் தெரிவித்துள்ள கருத்தின்படி, நார்வே தூதுக்குழு மீண்டும் இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன், இலங்கை அரசு ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திட வேண்டும் என்றும், நார்வே தூதுக்குழுவில் தமிழக தலைவர்களும் இடம் பெற வேண்டும் என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

அரசியல் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்தோ, இல்லை அதிகார நாற்காலியின் முட்டுத்தாங்கிகள் தங்களை விலக்கிக் கொண்டு விழ வைத்து விடுவார்களோ என்று அஞ்சியோ பின் வாங்கி விடாமல், தமிழக முதலமைச்சர் தமிழ் இனத்தின் வாழ்வுக்காக முன்னின்று போராட வேண்டும்.

மேலும் தமிழ்ச் சகோதரனின் சாவுகண்டு கோபம் கொண்டு எவ்வகையிலும் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்காத வகையில் மட்டுமே பேசிய தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் இருவரையும் தமிழக அரசு தொடுத்த வழக்கை திரும்பப் பெற்று உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சரத்குமார்.



Comments