சிறிலங்கா, இந்திய அரசுகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாநிலை போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு


ஈழத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும், சிறிலங்கா அரசைக் கண்டித்தும், சிறிலங்கா அரசுக்கு ஆயுதம் வழங்கும் இந்திய அரசினைக் கண்டித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றினர்.

இந்த உண்ணாநிலை போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்த அதிமுக கட்சி பங்கேற்கவில்லை. அதிமுக கட்சியின் சார்பில் அதன் அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் முன்னாள் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிமுக திடீரென உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது சிறிது பரபரப்பாக இருந்தது.

உண்ணாநிலை போராட்டப் பந்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் தா.பாண்டியன், இணைச் செயலாளர் சி.மகேந்திரன், விஜயகாந்தின் தேமுதிக சார்பில் முன்னாள் அமைச்சரும், ஈழத் தமிழர் பிரச்சினையை ஐ.நா. சபையில் ஒலிக்க செய்தவருமான பண்ருட்டி இராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டபிள்யூ ஆர்.வரதராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.


இவர்களுடன் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் இராமமூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் தொல். திருமாவளவன், பழ.நெடுமாறன், உலகத் தமிழர் பேரவை தலைவர் இரா.ஜனார்த்தனம், ஜெகவீரபாண்டியன், சேக்தாவூத், விஜய டி.இராஜேந்தர், இயக்குநர் சீமான், கவிஞர் முத்துலிங்கம், படைப்பாளி பா.ஜெயப்பிரகாசம், ஓவியர் புகழேந்தி உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

சேப்பாக்கத்தில் சாலையின் இருமருங்கிலும் போடப்பட்டிருந்த இருக்கைகள் நிரம்பி நிற்கக்கூட இடமில்லாமல் மேலும் மேலும் கூட்டம் சேர்ந்ததால் சேப்பாக்கம் சாலையில் பேருந்து போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.

உண்ணாநிலை போராட்டத்தினை தொடக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.ராஜா ஆற்றிய உரை:

இது இலங்கையின் உள்விவகாரம் என்று ஒதுக்கிவிட முடியாது. அங்குள்ள தமிழ் மக்கள் மீதான தாக்குதல் இந்தியாவையும் பாதிக்கக்கூடியதாகும். அங்கே தாக்கப்படும் தமிழர்கள் இங்கேதான் ஓடி வருகின்றனர்.

எனவே, இந்தியாவை பாதிக்கும் இந்த பிரச்சினையை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. இது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தையோ, குறிப்பிட்ட தலைவரையோ ஆதரித்து நடக்கும் போராட்டம் அல்ல. தமிழ் மக்களுக்கு ஆதரவான போராட்டம். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை.

தமிழ் மக்களின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். அவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். ராஜபக்ச அரசு கொடுங்கோல் அரசாக மாறி தமிழ் இனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

அண்மையில் இலங்கையின் வடக்குப் பகுதியில் மூன்று இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார்? அவர்களுக்கு அங்கு என்ன வேலை? ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் இந்திய தூதரகம் குண்டுவைத்து தாக்கப்பட்ட போது இது ஒரு தேசிய துக்கம் என்று கூறிய மத்திய அரசு, இலங்கையில் இந்தியர்கள் கொல்லப்பட்டது பற்றி மெளனம் சாதித்துள்ளதே ஏன்?

சிறிலங்காவுக்கு இந்திய அரசு அறிவிக்கப்படாத இராணுவ உதவி செய்கிறதோ என்ற கடுமையான சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. அதை இந்திய அரசு மறுக்க தயாரா? அவ்வாறு இராணுவ உதவி அளித்தால் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கின்றோம். சிறிலங்கா குறித்த இந்தியாவின் கொள்கை மாற வேண்டும். மறைமுக இராணுவ உதவி நிறுத்தப்பட வேண்டும்.

கச்சதீவு ஒப்பந்தத்தில் இந்திய மீனவர்கள் இழந்த உரிமைகளை மீட்க வேண்டும். மத்திய அரசை நாங்கள் வெறும் அணுசக்தி ஒப்பந்தத்திற்காக மட்டும் எதிர்க்கவில்லை. இலங்கை பிரச்சினைக்காகவும் எதிர்த்தோம் என்று திமுக தலைவருக்கு கூறிக்கொள்கின்றோம்.

தமிழ் மக்களின் உணர்வை வெளியிடும் இந்த போராட்டம் தொடர வேண்டும். அதற்காக தொடர்ந்து ஒன்றுபட்டு போராடுவோம் என்றார் அவர்.

உண்ணாநிலைப் போராட்டம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆற்றிய விளக்கவுரை:

தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த இந்த நாளில் அவர் கடைப்பிடித்த வழியிலேயே அண்டை நாடான இலங்கையில் அநியாயமான படுகொலைக்கு பலியாகி நிற்கக்கூடிய சகோதரர்களின் அழுகுரல் கேட்டு இதயம் துடித்த காரணத்தால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றோம்.

நாங்கள் இந்தியக் குடிமக்களாக இருப்பதால் இந்திய அரசின் மூலமாகவே சிறிலங்கா அரசை வற்புறுத்தக் கேட்கின்றோம். கொலை செய்வதை நிறுத்துங்கள் என்றும், வானூர்திகள் மூலம் குண்டுகள் போட்டும், தரைப்படைகள் மூலம் கொன்று குவிப்பதை நிறுத்த வேண்டும் என்றும், பசியால் வாடும் எங்கள் தாய்மார்களுக்கு நீங்களாவது உண்வு கொடுக்க வேண்டும் இல்லயேல் நாங்களாவது உணவு கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்றூதான் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தினை தமிழகம் முழுக்க நடத்துகின்றோம்.

ஆறரை கோடி தமிழ் மக்களின் மனிதாபிமான கோரிக்கையாகத்தான் இதனை முன்வைத்துப் போராடுகின்றோம். இந்த உண்ணாநிலைப் போராட்டத்துக்கு பலர் அழைத்தோம் வந்திருக்கின்றனர். அழைக்காமலும் பலர் உணர்வால் உந்தப்பட்டு வந்திருக்கின்றனர்.

ஈழத்தமிழர்களுக்காக நாங்கள் எழுப்புகின்ற குரல் அரசியல் நோக்கம் கொண்டதல்ல. இந்த நெருக்கடியான நேரத்திலும் இது நெருங்கி வருகின்ற தேர்தலுக்கான கூட்டணி சேர்வதற்கான முயற்சி எனச் சிலர் எழுதுகின்றனர்.

இருபத்தி நான்கு மணிநேரமும் தேர்தல் - தொகுதி - வெற்றி அதற்குப் பிறகு பதவி என்று எப்போதும் இந்தக் கனவிலேயே மிதப்பவர்களுக்கு இரக்கமுள்ள இதயத்தோடு மனிதர்கள் இருக்கின்றனர் என்று சிந்திப்பது கொஞ்சம் கடினம்தான்.

இது தேர்தல் கூட்டணிக்கான கூட்டம் அல்ல. அங்கே இலங்கையில் ஈழத்தமிழர்கள் நமது சகோதரர்கள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் நாம் இங்கே தேர்தலைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்போமேயானால் நாங்கள் எங்களை தமிழர்கள் என்று அழைத்துக்கொள்ளவே தகுதியற்றவர்கள்.

சொந்த சகோதரங்கள் சாதல் கண்டு நாம் கோட்டையை நினைத்து கனவு கண்டு கொண்டிருக்க முடியாது. கடந்த நான்கு ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த போது அமைதியாக இருந்தீர்களே என்று ஒரு முதிர்ந்த அரசியல்வாதி இன்று காலை கேட்டிருக்கின்றார். அவருக்கு பத்திரிகைகள் படிக்கின்ற பழக்கம் இருக்கும் என நினக்கின்றேன்.

கட்சி தொடங்குவதற்கு முன்பே முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுகின்றவர்கள் பத்திரிகைகள வாசித்தல் நல்லது. கடந்த நான்காண்டுகளாக சிறிலங்காவுக்கு அரசுக்கு இந்தியா எந்தவிதமான உதவியும் செய்யக் கூடாது என்று எங்கள் டி.ராஜா மாநிலங்களவயில் குரல் கொடுத்தார்.

இந்திய அளவில் ஹைதராபாத் மாநாட்டில் நாங்கள் குரல் கொடுத்தோம். அந்த மாநாட்டின் தீர்மானத்தை இந்திய அரசு பின்பற்ற வேண்டும் என்று பெரியவர் நெடுமாறன் வலியுறுத்தினார். அரசியல் என்பது எங்களுக்கோ ஜயா நெடுமாறன் அவர்களுக்கோ தொழில் அல்ல. எங்களின் தீர்மானத்தை படிக்காதவர்கள்தான் இன்று எங்களை கேள்வி கேட்கின்றனர். தமிழகத்தைப் பிடித்த சாபக்கேடு இதெல்லாமல் வேறென்ன?

தமிழக மீனவர்கள் 420 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். கொல்லப்பட்டவ்ர்கள் குடும்பத்துக்கு நிதி கொடுப்பதோடு விடயம் முடிந்து விட்டது. சுட்டவனை இன்னும் இந்தியா கண்டிக்கவில்லை.

பீகார், ஒரிஸ்ஸா போன்ற மாநில மீனவர்கள் எல்லை கடந்து அண்டை நாடுகளுக்குள் சென்று விட்டால் அந்த நாடுகள் சுட்டுக்கொல்வதில்லை. ஆனால் சுண்டைக்காய் சிறிலங்காக்காரன் சுடுகிறான். அதனை நீங்கள் கண்டிக்க மறுக்கின்றீர்கள் என்றால் மறமுகமாக நீங்கள் அதனை ஆதரிக்கின்றீர்கள் என்றுதானே பொருள்.

மியான்மர், பர்மா, பாகிஸ்தான் என எந்த அரசுகளும் இந்திய மீனவரை சுட்டுக்கொல்லவில்லை. பர்மா பாகிஸ்தான் செய்யாததை சிறிலங்கா செய்கின்றது. இதனை தடுத்து நிறுத்துங்கள் என்று ஒரு கண்டனக்குரல் டில்லியில் இருந்து வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் வரவில்லை. இந்திய மந்திரி சபையில் தமிழகத்தைச் சார்ந்த 10 பேர் மந்திரிகளாக இருக்கின்றனர். மத்திய மந்திரி சபை தமிழர்களால் ஆதிக்கம் செய்யப்படுகின்றது என்று வட இந்தியர்களால் குற்றம் சாட்டப்படும் அளவுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் டில்லியில் செல்வாக்கு செலுத்துகின்றனர். எது எதற்கோ ஆதரவினை பின்வாங்குகிறோம் என்று மிரட்டுகின்றனர்.

ஆனால் எங்கள் சொந்த சகோதரர் கொல்லப்படுவதற்கு எதிராக வாயே திறக்க மறுக்கின்றனர். கொல்பவனுக்கு ஆயுதம் கொடுக்கின்ற இந்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் வாங்க வேண்டியதானே. வசூலித்து எம் சகோதரர்களுக்கு அனுப்பச் சென்ற நெடுமாறன் அவர்களயும் தடுத்து இழிவுபடுதினீர்களே?

ஆக, ஈழத்தமிழர்களின் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும், தமிழக மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சிறிலங்கா அரசுக்கு ஆயுதம் கொடுக்கிற மத்திய அரசைக் கண்டிக்க வேண்டும் என்றார் அவர்.

உண்ணாநிலைப் போராட்டம் முடிவடையும் மாலை நேரம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.கே.சிவாஜிலி்ங்கம், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து உரையாற்றினர்.

இன்று நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டம் என்பது அதிமுக, திமுக என்கிற இரண்டு சக்திகளையும் தவிர்த்த மூன்றாவது வலுவான சக்திகள் நடத்தியது மிக முக்கியமானது.







Comments