ஈழத் தமிழருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள தமிழகம்


ஈழத் தமிழர் இனப்படுகொலையில் சிங்கள அரசுக்கு எதிராக 1983 இல் கொதித்தெழுந்த தமிழகத் தமிழர்கள், ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று சீற்றம் கொண்டு மீண்டும் எரிமலையாக குமுறத் தொடங்கியிருக்கின்றனர்.

உலகில் எந்த ஒரு தேசிய இனமும் எதிர்நோக்காத கொடுமை ஈழத் தமிழருக்கு ஏற்பட்டிருக்கிறதென்றும், ஈழத் தமிழரை அழித்து, தமிழ்மொழியை ஒழித்து, தமிழ் மண்ணை அபகரிக்கும் ஒரு தந்திர யுத்தத்தையே ராஜபக்ஷ அரசு பிரகடனப்படுத்தி உள்ளது என்றும் தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி கலை, இலக்கியவாதிகள், படைப்பாளர்கள், இலக்கிய அமைப்புகள், ஊடகத் துறையினர் மற்றும் பலதுறைப் பிரிவினரும் இந்திய அரசுக்கு அழுத்தமாகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஈழத் தமிழரின் இனப் போராட்டத்துக்கு அன்று முழு ஆதரவளித்த தமிழக மக்களும், அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் 1991 இல் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர், முதலில் அடக்கி வாசித்து, படிப்படியாக பல பிரிவினரும் மௌனம் சாதிக்கத் தொடங்கிய காலகட்டத்தில், குறிப்பிட்ட ஓரிரு அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் மட்டும்தான் தொடர்ந்து நேசக்கரம் நீட்டி வந்தனர்.

ஆனாலும் இந்த எழுச்சி 1983 காலத்தில் ஏற்பட்டதுபோல் பரவலாக அமையவில்லை. அன்று, தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர் சமுதாயம் எப்படி எல்லாம் விழிப்புணர்வை வெளிக்காட்டி, மக்களின் தமிழின உணர்வை தூண்டிவிட்டது என்பதை, தமிழ்நாட்டில் அங்குமிங்கும் நடைபெற்ற பல சம்பவங்களை அன்று நான் தமிழகத்தில் நேரில் கண்டு ?ஈழநாடு? பத்திரிகையில் பதிவு செய்ததை நினைத்துப் பார்க்கின்றேன்.

திருச்சியில் நடைபெற்ற ஈழத் தமிழர் பற்றிய புகைப்படக் கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது உணர்ச்சிவசப்பட்ட மதுரை ஆதீனத்தார் ஒரு கட்டத்தில் நிஜத் துப்பாக்கியை கையிலெடுத்து "ஈழத் தமிழரின் உயிர் காக்க நாம் துப்பாக்கி ஏந்தவும் தயார்" என்று கோஷமிட்டதையும் (01-11-83), இலங்கைத் தமிழர்கள் குறித்தும் அங்கு நடைபெறும் இனப்படுகொலை பற்றியும் இந்திய மத்திய அரசு கண்டுகொள்ளாமல் தூங்குவதாக கண்டித்து, கோயம்முத்தூருக்கு அருகே சன நடமாட்டம் மிகுந்த பெதப்பம்பட்டி பஸ் நிலையத்தில் நாராயண சுவாமி நாயுடுவின் இந்திய விவசாயிகள், உழைப்பாளிகள் கட்சியைச் சேர்ந்த இருபத்து ஐந்து ஊழியர்கள் வேணுகோபால் தலைமையில் இரவு எட்டு மணி முதல் அதிகாலை நான்கு மணி வரை பஸ்நிலையத் தரையில் தூங்கி மத்திய அரசின் கும்பகர்ணத் தூக்கத்தை நூதனமாக , சுலோக அட்டைகளுடன் வெளிப்படுத்தியதையும் (11-10-83), ஈழத் தமிழர் துயர் துடைக்க இறைவனை வேண்டி, தஞ்சாவூர் பெரிய கோவிலில் நாதஸ்வர கலாநிதி எம்.பி.சேதுராமன் தனது சக கலைஞர்களுடனும், மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் ஏராளமான நாதஸ்வரக் கலைஞர்கள் ஒன்றுகூடியும் இரண்டு மணி நேரம் நாதமழை பொழிந்ததையும் (23-11-83), தமிழ்நாடு சேலம் அருகேயுள்ள சிங்கிபுரம் கிராமத்திலுள்ள ஒரு பாடசாலைக்கு "குட்டிமணி பாடசாலை" என்று அன்றைய தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் இராசாராம் பெயர் சூட்டி திறந்து வைத்ததையும் (10-10-83), தமிழ்நாடு சிவ காசியில் சன நடமாட்டம் மிகுந்த ஒரு கோப்பிக் கடைக்கு "விடுதலைப்புலி வீரன் குட்டிமணி காபி பார்" என்று பெயர் சூட்டப்பட்டு நிறைவு கூர்ந்ததையும் (7-10-83), திருச்சியில் ?அலமேலு உறந்தாஸ்? எனும் புதிய ஜவுளி நிறுவனத்தை தமிழர் விடுதலை கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பபம் திறந்துவைக்க, வீ.ஆனந்தசங்கரி முதலாவது துணியை வாங்கியதையும் (7-11-83) .அந்தப் பசுமையான, உயிர்த்துடிப்பான நினைவுகளை மறக்கத்தான் முடியுமா? இதே பற்று - உணர்வு தானாடாவிட்டாலும் சதை ஆடும் நிலைக்கு இன்று தமிழகத்தில் மேலோங்கி நிற்கிறது. அண்மைக்காலமாக தமிழர் பகுதியில், குறிப்பாக வன்னியில் நடந்துவரும் தொடர் குண்டுவீச்சு - இராணுவத் தாக்குதலினால் தமிழ் மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாகி உணவு, உறைவிடம், உடை, மருந்து என்று எதுவுமே கிடைக்காது அநாதைகளாகிவிட்ட சோகத்தின் எதிரொலியே தமிழக மக்களை இன்று கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இந்த நிலையில் இந்த அரசின் ?இட்டை வேடமும்? அம்பலமாகி இவர்களை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது. இலங்கைக்கு இராணுவ உதவி செய்யமாட்டோம் என்றும், இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வே சாத்தியமானது என்றும் கூறிக்கொண்டே இந்திய மத்திய அரசு இலங்கைக்கு ஆட்பலமும் ஆயுதபலமும் அளித்திருந்தது.

அண்மையில் வவுனியாவில் இலங்கை இராணுவ முகாம்கள் மீது விடுதலைப் புலிகளின் குண்டுவீச்சு அம்பலப்படுத்திவிட்டது. இதன் தாக்கம், இந்திய மத்திய அரசுக்கு இப்போது ?திருகுவலி? யை உண்டாக்கியிருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், இலங்கைக்கு இந்திய இராணுவ ரீதியிலான ஆளணி, ஆயுத உதவிகளின் செயல்பாடுகள் குறித்து இந்திய பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுக்கவும் அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளிப்படையாக இதனை அறிவித்துள்ளது. இந்த நிலையில் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதிலும் முழுவீச்சில் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையிலும், மாவட்டத் தலைநகர் இருபத்து எட்டு இடங்களிலும் நடைபெற்ற இப்போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு ஈழத் தமிழரின் துயர்துடைக்க உணர்வபூர்வமாகச் சூளுரைத்தனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் அழைப்பின் மீது மார்க்ஸிய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., தே.மு.தி.க.,இலட்சிய தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், திராவிடர் கழகம், பெரியார் திராவிட கழகம், தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி, முஸ்லிம் லீக், தமிழ்த் தேசிய இயக்கம், தமிழர் நீதிக்கட்சி, உலகத் தமிழர் பேரவை, தேசியவாத காங்கிரஸ், இலங்கை எம்.பி.க்கள், மாவை சேனாதிராசா, சிவாஜிலிங்கம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள், கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் நிறைந்த அளவில் இப்போராட்டத்தில் தங்களது பங்களிப்பை செய்தனர்.

சென்னை சேப்பாக்கத்திலும் மற்றும் மாவட்ட ரீதியாகவும் நடைபெற்ற இப்போராட்டங்களில் உரையாற்றிய தலைவர்கள், ஈழப் பிரச்சினையில் தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய அவசர அவசியத்துக்கு அறைகூவல் விடுத்தது. இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் டி.ராஜா, "இலங்கைத் தமிழர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் முழு இந்தியாவையே பாதிக்கும். இலங்கை குறித்த இந்திய வெளியுறவுக் கொள்கை அவசியம் மாற்றப்பட வேண்டும்" என்றார். கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நா.பாண்டியன் "இலங்கைத் தமிழருக்கு உணவு, உடை, மருந்து சேகரித்து அனுப்ப இருக்கின்றோம்.

இதற்கு அரசு அனுமதி மறுத்தால் ஈழத்துக்கு எப்படி அனுப்புவது என்று மாற்றுவழி பற்றி ஆராய்வோம்" என்று எச்சரித்தார். வைகோ தனது உரையில், "எதியோப்பியாவில் பட்டினிச் சாவு பற்றி கவலைப்படும் இந்தியா, இலங்கை தமிழர் உயிர் பற்றி சிறிதளவும் சிந்திக்கவில்லை. தமிழினப் படுகொலைக்கு இந்தியா உதவுகிறது என்று நான் பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகின்றேன்.

நாங்கள் தொடர் போராட்டம் நடத்தப் போகின்றோம். கைதானாலும் அஞ்சமாட்டோம். இன்றைய உண்ணாவிரதப் போராட்டம் நிச்சயம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும்" என்றார். தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தனது உணர்ச்சிபூர்வமான உரையில், "வவுனியாவில் புலிகளின் குண்டுவீச்சுக்கு இலக்கான ராடார் சாதனங்களை இயக்கியவர்கள் இந்திய இராணுவ தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லை என்றும், அவர்கள் இந்திய சிவிலியன்களாக இருக்கலாம் என்றும் இந்திய இராணுவ துணைத் தளபதி மிலன் லலித்குமார் கூறியுள்ளார்.

அப்படியானால் அந்த இரண்டு இந்திய குடிமக்களும் போரில் கலந்துகொள்ள முன்னதாகவே இந்திய அரசிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெறாமல் அவர்கள் அங்கு சென்றிருந்தால் அதே உரிமை எங்களுக்கும் உண்டு.

புலிகளுக்கு ஆதரவாக அங்கு போராட தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் செல்வதையும் இந்தி அரசு தடுக்க முடியாமல் போய்விட நேரிடும்" என்று வாதிட்டார்.

தமிழ்ப் படைப்பாளிகள் சார்பில் அதன் செயலாளர் பா.ஜேயப்பிரகாசம் (சூரியதீபன்) தனதுரையில், "ஈழ மக்களுக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் பெரிய அளவில் வெற்றி கொடுத்து எல்லா தரப்பினரையும் ஒன்றுதிரட்டி ஒரு உத்வேகத்தை எற்படுத்தியிருக்கிறது.

தமிழர் பிரச்சினையைத்தொடாமல் யாரும் இங்கு அரசியல் நடத்தமுடியாது என்பதையே இது நிரூபித்திருக்கிறது. ஆயிரம் இளைஞர்களை தமிழ் நாட்டிலிருந்து ஈழத்துக்கு அனுப்ப வேண்டும் என்று திருமாவளவன் சூளுரைத்தார்.

அதுதான் நடக்கப் போகிறது" என்று குறிப்பிட்டார். இலட்சிய தி.மு.க. பொதுச் செயலாளர் விஜய டி.ராஜேந்தர் பேசுகையில்; "இன்றைய உண்ணாவிரதப் போராட்டத்தின் தாக்கத்தை உணர்ந்த முதல்வர் கருணாநிதி அவசரம் அவசரமாக வரும் ஆறாம் திகதி ஈழத் தமிழருக்காக கூட்டம் நடத்த அறிவித்திருக்கிறார்.

இவர் ஏன் கூட்டம் நடத்த வேண்டும்? கருணாநிதி அழைத்தால் பிரதமர் அவர் வீட்டுக்கே வந்துவிடுவார். பிரச்சினையை முடித்துவிடலாம்.

ஆனால், அவர் இப்படிச் செய்யமாட்டார்" என்று கிண்டலடித்தார். "விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன்", "சர்வதேச விதிமுறைகளை மீறி இலங்கைப் படையினர் இரசாயன குண்டுகளை பயன்படுத்துகின்றனர். இலங்கைத் தமிழர்கள் பட்டினியால் சாவதற்கு இந்தியாதான் காரணம்" என்று குற்றம் சுமத்தினார்.

ஈழத் தமிழர்கள் மீது தமிழகத்தில் இப்பொழுது ஏற்பட்டுள்ள இன உணர்வுகளின் ஒட்டுமொத்த எதிரரொலியாக பாரிய மாற்றங்கள் தொடர்ச்சியாக நடக்கலாம் என்று எதிர்பார்க்கும் அரசியல் அவதானிகள், ?தனி மரமாக? நின்ற கட்சிகள் இன்று ?தோப்பாக? காட்சி அளிக்கிறது என்றும், இதன் எதிர்பார்ப்புகள் இந்தியப் பாராளுமன்றம் முதல், தொடர் போராட்டங்கள், சட்ட மீறல்கள், மறியல்கள் என்று நீடிக்கும் என்றும், உலகில் 52 நாடுகளில் வாழும் தமிழர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு பெரும் மகாநாட்டை தமிழ் நாட்டில் அடுத்த இரண்டு மாதங்களில் நடத்தும் பெரும் கூட்டு முயற்சி ஈழத் தமிழரின் அழுகுரலுக்கு இறுதித் தீர்வை காணும் என்று கணிக்கின்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ?தேர்தல் கூட்டணி? என்று அரசியல் சாயம் பூசப்பட்டாலும், முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க., பா.ம.கட்சிகள் அழைப்பை ஏற்றும் கலந்துகொள்ளாததும் போராட்டங்களை தனியாக நடத்த பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் திட்டமிட்டிருப்பதும் கூட்டணிப் புரளியைப் பொய்யாக்கிவிட்டது.

விஜயகாந்த் கட்சி கலந்துகொண்டதுதான் அ.தி.மு.க. கட்சி வராததுக்கு காரணம் என்று பேசப்படுகிறது. அதேநேரத்தில் பா.ம.கட்சி பங்கு கொள்ளாதது கேள்வியாகவே நீடிக்கிறது. அடுத்த வாரம் வைகோ தனியாக ஈழத் தமிழருக்காக அறப்போராட்டம் நடத்துகிறார்.

இதில் அ.தி.மு.க. கலந்துகொள்கிறது. கலைஞர் கருணாநிதியும் நாளை ஆறாம் திகதி தன்நிலை விளக்கக் கூட்டம் நடத்தி ஈழத்தமிழருக்கு தி.மு.க. செய்தவற்றை பட்டியலிடுகின்றார்.

ஈழத் தமிழர் இனப் படுகொலையைத் தடுக்க உடனடியாக எதுவும் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் தமிழகத்தில் எல்லாக் கட்சிகளும் இன்று களம் இறங்கியிருப்பதும் இதற்கு காங்கிரஸும் தி.மு.க. கழகமும் தடையாக இருக்கமுடியாத சூழ்நிலை உருவாகியிருப்பதும்தான் இன்று தமிழகம் கண்டுகொண்டிருக்கிறது.

அடுத்தடுத்த வாரங்கள் இதற்கு நிச்சயம் பதில் கிடைக்கும். மத்திய அரசின் போக்கும் மாறும் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா

Comments