இந்திய மத்திய அரசின் பிரச்சினை தான் என்ன?

இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிட்டு 21ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்திய -சிறிலங்கா கூட்டுச் சதியில் உயிர்நீத்த குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு போராளிகளின் 21 ஆவது நினைவு தினம் சமீபத்தில் நமது தேசத்தால் நினைவு கொள்ளப்பட்டது. இந்த 21 வருடங்களில் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் அரசியல், இராணுவ மற்றும் சர்வதேச அரசியலை கையாளும் ராஜதந்திரம் என அபார வளர்ச்சியை அடைந்திருக்கின்றனர். இதில் அழுத்திச் சொல்ல வேண்டிய விடயம் என்னவென்றால் நான் மேலே குறிப்பிட்ட விடுதலைப்புலிகளின் வளர்ச்சியாக இருந்தாலும் சரி அவர்களின் ஏனைய சர்வதேச ரீதியான தொடர்புகளாக இருந்தாலும் சரி, புலிகளின் அனைத்து வளர்ச்சியும் இந்தியாவின் பல்வேறு தடைகளையும் புலனாய்வு சதி முயற்சிகளையும் தாண்டியே நிகழ்ந்திருக்கிறது. நான் இவ்வாறு அழுத்திச் சொல்வதற்கு ஒரு பிரத்தியேகமான காரணம் உண்டு.

கடந்தகாலங்களில் விடுதலைப்புலிகளின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த வேண்டுமென்பதிலும், ஈழத் தமிழர்கள் தமக்கான தனித்துவமானதொரு அரசை ஸ்தாபித்துவிடக் கூடாது என்பதிலும் மிகவும் மூர்க்கமாகத் தொழிற்பட்ட ஒரு அந்நிய சக்தி இருக்கிறதென்றால் அது இந்தியா மட்டும்தான்.

அந்தளவிற்கு இந்தியா நமது தேசத்தின் நலன்களுக்கு ஊறுவிழைவிக்கும் ஒரு சக்தியாக இருந்தது. இது பற்றி எனது இந்தியா தொடர்பான முன்னைய கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.

இந்திய தலையீட்டிற்கு வயது 21 ஆகிவிட்ட நிலையில் இந்தியாவின் ஈழம் தொடர்பான கொள்கை வகுப்பில் மாற்றங்கள் நிகழுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சமீப நாட்களாக வரலாற்றில் முன்னர் எப்போதுமில்லாதவாறு தமிழகம் ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பில் எழுச்சி கொண்டிருக்கும்; பின்னணியில்தான் குறித்த கேள்வி எழுந்திருக்கிறது. இந்தியாவின் நேரடித் தலையீடும் சரி மறைமுகமான தலையீடுகளும் சரி தமிழகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நிகழ்ந்திருக்கிறது.

இலங்கையில் ஒரு சுமுக நிலைமை காணப்படாத நிலையில் இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பிற்கு அது அச்சுறுத்தலாக அமையும் என்ற வாதத்தை அடித்தளமாகக் கொண்டே இந்தியா தனது தலையீட்டிற்கான நியாயத்தை கூறிவந்திருக்கிறது. சமீப காலங்களில் குறிப்பாக மகிந்த நிர்வாகம் மீண்டும் யுத்தவாத தமிழர் எதிர்ப்பு அரசியலை புதுப்பித்த பின்னர், இந்தியா தான் இதுவரைகாலம் கூறிவந்த அதே காரணங்களுடனேயே மீண்டும் களமிறங்கியது.

மகிந்த நிர்வாகம் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுடன் நெருங்கிச் செல்வது நீண்டகால நோக்கில் தனது மூலோபாய நகர்வுகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதே அதன் தலையீட்டு நியாயமாக இருந்தது. நோர்வேயின் ஒதுங்கலைத் தொடர்ந்து, இந்தியா இலங்கை தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் நேரம் நெருங்கிவிட்டது என்ற கருத்துப்பட இந்திய கொள்கை வகுப்பிற்கு துணைசெய்யும் ஆய்வகங்களும் ஆய்வாளர்களும் அழுத்திக் கூறிவந்த பின்புலத்தில்தான் இந்தியா மீண்டும் கொழும்புடனான நெருக்கத்தை வலுப்படுத்த முயன்றது. ஆனால் இதில் உள்ள முரண் நகையான விடயம் என்னவென்றால் இந்தியா எப்போதெல்லாம் தனது பிராந்திய பாதுகாப்பினை முன்வைத்து இலங்கை அரசியலில் தலையீடு செய்ய முயல்கின்றதோ அப்போதெல்லாம் அதற்கான பலமான தார்மீக பொறுப்பாக தமிழகத்தையே சுட்டுவதுண்டு.

இலங்கையில் மோதல் தீவிரமடைந்தால், அது தமிழகத்தை நோக்கி ஈழத் தமிழர்கள் அதிகளவில் இடம்பெயர வழிவகுக்கும். அவ்வாறு நேர்ந்தால், தமிழக அரசியல் போக்கில் அது அதிர்வுகளை ஏற்படுத்தும். அது இந்திய அரசியல் சமநிலையை பாதிக்கும் என்ற விளக்கங்களை எப்போதுமே இந்தியா முன்வைக்கத் தவறியதில்லை. இந்த பின்புலத்தில் பார்த்தால் இந்தியாவின் வரலாற்று ரீதியான தலையீடுகள் அனைத்துமே ஈழத் தமிழ் மக்களை பாதுகாத்தல் என்ற பேரில்தான் நிகழ்ந்திருக்கின்றன.

ஆனால் அதன் யதார்த்த நிலைமை என்ன? எப்போதெல்லாம் இந்தியா இலங்கை அரசியலில் தலையீடு செய்கின்றதோ அப்போதெல்லாம் சிங்கள அரசு முன்னரைக் காட்டிலும் தீவிரமாக ஈழத் தமிழர்களை துன்புறுத்துவதும், முன்னரைக் காட்டிலும் வலுவாக தமிழர் போராட்டத்தை அழித்தொழிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுவதும்தான் நிகழ்ந்திருக்கிறது.

சமீப காலமாக இந்தியா மூலோபாய நெருக்கடிகள், என்ற பேரிலான மகிந்த நிர்வாகத்தை தனது வழிக்கு கொண்டுவரும் முயற்சியிலும் அதே பழைய குருடி கதவைத் திறவடி நிலைமைதான் ஏற்பட்டிருக்கின்றது.

வழமைபோல் சிங்களத்தை வழிக்கு கொண்டுவருதல் என்ற பேரில் இந்தியா சிங்களத்தின் இராணுவ வெறித்தனத்திற்கு முண்டுகொடுத்திருக்கிறது. மகிந்த நிர்வாகத்தினால் யுத்தம் புதுப்பிக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழலில், சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இராணுவ ஒத்துழைப்பு ரீதியாக ஏற்பட்டிருக்கும் நெருக்கம் காலப்போக்கில் கொள்கை ரீதியான உடன்பாடுகளாகவும் பரிணமிக்கலாம்.

அதற்கு வாய்ப்பில்லை என்று நாம் கணிக்க முடியாது. சீனாவும் பாகிஸ்தானும் சமகால பூகோள அரசியலில் நேசசக்திகளாக உருவெடுத்திருக்கும் சூழலில் இந்தியாவின் அச்சங்கள் நியாயமானதே. குறிப்பாக பர்மா விவகாரத்தில் இந்திய சீன முரண்பாட்டு அனுபவத்தில் பார்த்தால் இந்தியாவிற்கு நிச்சயமாக இது ஒரு மூலோபாய நெருக்கடிதான்.

ஆனால் இந்தியா தனது மூலோபாய நெருக்கடிகளை சரி செய்து கொள்வதற்கு ஈழத் தமிழர் தேசத்தின் போராட்டத்தை பலிகொடுக்க முயல்வதில்தான், இந்தியா தொடர்ந்தும் நமது தேசத்தின் எதிர் சக்திகளின் வரிசையில் நிலைகொண்டிருப்பதற்கான காரணம்.

ஏன் இந்தியா தொடர்ந்தும் தனது மூலோபாய நெருக்கடிகளை தீர்ப்பதற்கு ஈழத் தமிழர்களை எதிர்நிலையில் வைத்து சிந்திக்கிறது? இவ்வாறானதொரு கொள்கை வகுப்பில் தொடர்ந்தும் இந்திய அதிகார வர்க்கம் நிலைகொண்டிருப்பதற்கான காரணம் என்ன? இந்தியா தொடர்ந்தும் விடுதலைப்புலிகளை தனது பிராந்திய நலனுக்கான அச்சுறுத்தல் சக்தியாக பார்ப்பதன் விளைவாகத்தான்.

இந்தியாவால் ஈழத் தமிழர் நலன்களுக்கு சாதமாக எதனையும் செய்ய முடியாதுள்ளது.

இவ்வாறானதொரு அச்சத்தில் ஏன் இந்திய மத்திய அரசு நிலைகொண்டிருக்கிறது என்பதற்கு துல்லியமான காரணங்களை மதிப்பிட முடியாமல் உள்ளது. சிலர் இதனை ராஜீவ் விடய எல்லைக்குள் பார்க்கின்றனர். சிலர் புலிகள் இந்தியாவுடன் ராணுவ ரீதியாக மோதியதன் பின்புலத்தில் பார்க்கின்றனர்.

வரலாற்று ரீதியான பார்ப்பனிய சக்திகளின் தமிழர் விரோத மனோபாவத்தில் இந்திய கொள்கை வகுப்பின் ஈழ விரோதத்தை புரிந்து கொள்ளும் பார்வைகளும் உண்டு. குறிப்பாக நாராயணன் வகையறாக்கள் இந்திய மத்திய அரசை வழிநடத்தும் பொறுப்பில் தொடர்ந்து நிலைகொண்டிருப்பதும் இதற்கு ஒரு காரணம் என்ற ரீதியிலான அவதானங்கள் இலகுவாக நிராகரிக்கக் கூடியவையுமல்ல.

மேற்படியான அனைத்து பார்வைகளுமே இன்றைய இந்திய கொள்கை வகுப்பின் ஈழத் தமிழர் விரோதத்தை புரிந்து கொள்வதில் செல்வாக்குச் செலுத்தத்தான் செய்கின்றன.

காரணங்கள் எதுவாயினும், இந்தியா தனது ஈழத் தமிழர்களின் அரசியலில் குறிப்பாக விடுதலைப்புலிகளின் தலைமையிலான அரசியல், தனது பிராந்திய நலனுக்கு அச்சுறுத்தல் என்ற நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது என்பது மட்டும் வெள்ளிடைமலை. அவ்வாறனதொரு புரிதல் இந்தியாவிடம் இல்லாவிட்டால் இந்தியா தொடர்ந்தும் இவ்வாறனதொரு எதிர் நிலை அரசியலை காவித்திரியாது. மேற்படியான தவறான புரிதலிலிருந்து இந்தியா மீளாத வரைக்கும் இந்திய கொள்கை வகுப்பில் பெரியளவான மாற்றங்களை நாம் எதிர்பார்க்க முடியாது என்றே நான் கருதுகிறேன்.

இந்த பின்னணியில்தான் தற்போது தமிழகத்தில் உச்சமடைந்திருக்கும் எழுச்சியானது இந்திய கொள்கை வகுப்பில் எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது. தமிழகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் உணர்வுகரமான சூழல் நிச்சயமாக இந்திய மத்திய அரசுக்கு ஒரு நெருக்கடியான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் இரு வேறு பேச்சுக்கு இடமில்லை.

இது ஒரு வகையில் இந்திய கொள்கை வகுப்பினர் எதிர்பார்க்காத ஒன்றாகவும் இருந்திருக்கும். ராஜீவ் விடயத்தை அடிப்படையாகக் கொண்டு நீண்ட காலமாக இந்திய புலனாய்வுத் துறையும் அதற்கான அபிப்பிராய பரப்புரைகளை செய்யும் ஊடகங்களும் தமிழகத்தில் ஈழ ஆதரவு குன்றிவிட்டது என்ற கருத்தையே தொடர்ந்தும் பிரச்சாரப்படுத்தி வந்த சூழலில்தான் இவ்வாறானதொரு எழுச்சிகரமான நிலைமை தோன்றியுள்ளது. இந்த சூழலை கட்டுப்படுத்த இந்திய மத்திய அரசு மத்திய அரசின் அதிகாரங்கள் வேறு என்ற தொனியில் நிலைமைகளை கட்டுப்படுத்த முயலலாம். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபக் சிங்வி, தமிழக நிலைமைகள் தொடர்பாக கூறிய கருத்துக்கள் இந்திய மத்திய அரசு அவ்வாறனதொரு முடிச்சை போட முயல்வதையே தெளிவுபடுத்துகின்றது.

அடுத்த நாடுகளில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் கருத்துக் கூற முற்படும் போது மத்திய அரசு இதைச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் எவரும் வலியுறுத்த முடியாது. அது மத்திய அரசின் அதிகாரங்களுக்கு உட்பட்டவை என்ற கருத்தில் பேசியிருக்கிறார் சிங்வி.

இது இந்தியாவின் கொள்கை வகுப்பில் மாநில அரசுகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதையே கோடிகாட்டுகின்றது. ஒரு தேசத்தின் கொள்கை வகுப்பில் கூட தலையிட அதிகாரமற்ற அரசியல் கட்டமைப்பொன்றைத்தான் இந்தியா கடந்த 21 வருடங்களாக ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வாகச் சொல்லி வருகிறது என்பது இன்னொரு வேடிக்கை. எனவே தற்போது தமிழகத்தில் இடம்பெற்றுவரும் எழுச்சி மேலும் இந்திய மத்திய அரசுக்கு நெருக்குவாரங்களை கொடுக்க வேண்டுமாயின் தற்போது அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து சற்று விலகியிருக்கும் உணர்வுகரமான எழுச்சிகள் மேலும் மக்கள் மத்தியில் விரிவடைய வேண்டும்.

குறிப்பாக மாணவர்களின் வெளிவருகை இதில் முக்கியமானது. அது மேலும் முழுமையாக தமிழக பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள், புரட்சிகர மாணவர் அமைப்புக்கள் என்று விரிவடைய வேண்டியிருக்கிறது. ஈழப் பிரச்சினை குறிப்பாக ஈழத் தமிழ் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கை குறித்து இந்திய கொள்கை வகுப்பினர் மத்தியில் ஒரு அச்சம் உண்டென.

நான் நினைக்கின்றேன் அந்த அச்சத்தைத்தான் இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்த ஏ.பி.வெங்கடேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் என்று. ஈழத்திற்கு பதிலாக வங்காளியரைச் சார்ந்து அல்லது பஞ்சாபியரைச் சார்ந்து ஈழம் போன்றதொரு சிக்கல் தோன்றியிருக்குமானால் இந்தியாவில் மீண்டும் ஒரு வங்கப் போர் தொடங்கியிருக்கும் ((Hindu April,26, 1987) தமிழக எழுச்சி இந்த கருத்தை நிதர்சனமாக்குவதாக அமையுமாயின் இந்திய கொள்கை வகுப்பினரை அது நிச்சயம் அசைக்கும் என்பதில் இரு வேறு பேச்சுக்களுக்கு இடமில்லை. ஆனால் அது நடைபெற வேண்டும்.

தாரகா


Comments