'சரணடையச் சொல்கிறது சிங்களம் தலைவனோடு இணைகிறது தமிழினம்'

இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், அரச பயங்கரவாதத்தால் உள்ளக இடப்பெயர்விற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு, மனிதப் பேரவலத்தை எதிர் நோக்கியுள்ளனர்.

வன்னியில் உருவாக்கப்பட்டிருக்கும், தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் பேரினவாத உளவியல் சமரினை எதிர்கொண்டவாறு, மக்கள் படைக் கட்டமைப்பும் விரிவடைகின்றன.

மரணத்தின் விளிம்பில் தத்தளிக்கும் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய, அர்ப்பணிப்புடன் இயங்கும் தொண்டு நிறுவனங்களை முடக்கும் குரூரச் செயற்பாட்டில், தனது அரச இயந்திரப் பரப்புரை நிறுவனத்தை முடுக்கி விட்டுள்ளார் மகிந்தர்.கொழும்பு சமாதானச் செயலகமும், இடர் முகாமைத்துவ, மனித உரிமை அமைச்சும், தமிழ் மக்களின் அவல நிலை குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறது.

வவுனியா அகதி முகாம்களில், நிரந்தரமாக இம் மக்களைக் குடியமர்த்த, சிங்களம் தீட்டும், இஸ்ரேலிய பாணி ஹம்லட் (பிணீனீறீமீt) மையங்கள் புரியப்படாத விடயமல்ல. ஆயிரக்கணக்கான பாலஸ்தீன அகதிகளை பல முகாம்களுக்குள் முடக்கி, அவர்கள் தங்கியிருந்த ‘சாப்ரா', சட்டில்லர் என்கிற அகதி முகாம்கள் மீது, இன அழிப்புத் தாக்குதலைத் தொடுத்து, பாலஸ்தீனர்களை கொன்றொழித்த, மனிதகுல வரலாற்றின் கறைபடிந்த பதிவுகளை இலகுவில் மறக்க முடியுமா?வவுனியாவிற்கு வாவென்று வருந்தி அழைப்பது, இடம் பெயர்ந்த தமிழ் மக்களின் இயல்பு வாழ்வினை அவர்கள் கரங்களில் ஒப்படைத்தற்கல்ல.

மாறாக, கைதுகளிற்கும், காணாமல் போகடித்தலுக்குமான இன அழிப்புப் படலத்தை அங்கிருந்து விரிவுபடுத்துவதற்கே, சொந்த மக்கள், துன்பத்தில் வாடுதல் கண்டு, சிந்தை இரங்குவதாக, சிறீலங்காத் தேசியம் பாடுகிறது அமைச்சர் மகிந்த சமரசிங்காவின் பரிவாரம். தமிழ் மக்களும், தமது நாட்டு மக்கள்தான் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறுவதனூடாக, மனிதம் சாகாத மகத்தான மனிதர் தாமென அமைச்சர் உரக்கச் சொன்னாலும், தமிழ் மக்கள் ஏமாறப் போவதில்லை.ஏனெனில் அகதிமுகாமில் சரணடையாவிட்டால், தொடர்ந்தும் எறிகணைகள் வீசுவேனென அச்சுறுத்துகிறது சிங்களம். முன்பு மறைமுகமாக நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் புதிய நிலைப் பரிமாணமாக, இராணுவவெறிகொண்டு அம்மக்களை அவர்களின் பூர்வீக வாழ்விடங்களிலிருந்து அகற்றி, அகதி முகாம்களுக்குள் முடக்கும் நிலை தோற்றுவிக்கப்படுகிறது. அதாவது முன்னைய காலங்களில் விரட்டியடிக்கப்பட்ட மக்களிற்கு அகதி முகாம்கள் கிடையாது. சிதறி வாழும் ஒற்றைத் தெரிவே அவர்மீது திணிக்கப்பட்டது. இன்று அந்நிலை மாறுதலடைந்து, அகதி முகாம்களிற்குள் தமிழ் மக்களை அடைத்து, இன அடையாளமழித்தல் என்கிற சூத்திரத்துள், தமிழ் தேசியத்தை குழி தோண்டிப் புதைத்து விடலாமென்பதே சிங்களச் சிந்தனையின் புதிய வடிவமாக அமைகிறது.

ஏனெனில் நிலமிழந்தவன், தனித்துவமான தேசிய இனமென்கிற அடையாளத்தையும் இழந்து விடுகிறான்.இதய பூமியாம் மணலாற்றை ஊடறுத்து, தாயகப் பிரிப்பிற்கு, சிங்களக் குடியேற்றங்களை நிறுவிய பேரினமேலாண்மைவாதிகள், காந்தி தேசத்தின் அரவணைப்பில் தேசியத் தலைமையை அழித்திடத் தாண்டவமாடுகின்றனர்.தமிழ் மக்களை வென்றெடுக்காமல், யுத்தத்தில் வெற்றியீட்ட முடியாதென இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராணயன் அருளிய பொன்மொழிகளை, சிங்களம் தமது பேரினவாதப் புரிதலுக்கூடாக தெரிந்து கொண்டுள்ளது. வன்னியில் வாழும் தமிழ் மக்களை, எறிகணை வீச்சுக்களினூடாகத் தம்பக்கம் ஈர்த்து, அவர்களின் மனங்களை, அகதி முகாமில் குடியமர்த்தி, வென்று விடலாமென்று தவறாகப் புரிந்துகொள்கிறது சிங்களம்.

பல்குழல் எறிகணைகளும், ஆட்டிலறிகளும் நில ஆக்கிரமிப்புக் கருவிகளென்று தவறாகக் கற்பிதம் கொள்ளும் இராணுவம், மக்கள் படை எழுச்சியின் உன்னதவடிவம், விடுதலையை உயர்த்தும் நெம்புகோல் என்பதனை உணர்ந்து கொள்ளவில்லை.துணைப்படை, எல்லைப்படை, மக்கள் படையென விரியும் விடுதலையின் விரிதளங்கள்யாவும், பூநகரி, கிளிநொச்சி, மாங்குளம் நோக்கி கிளைபரப்பும் எதிரியின் தீச்சுவாலைப் பாதைகளை நிச்சயம் ஊடறுக்கும்.

அதேவளை கொடிய இனவாத நெருப்பாறுகளைத் தீரமுடன் நீந்திக் கடந்த விடுதலைப் பேரொளியின் தளபதிகள், தலைவனின் விரலசைவிற்காக காத்திருக்கின்றனர். பேரெழுச்சி ஒன்றுகூடலில், அக் காத்திருப்பிற்கான கனமான செய்தியை, பல களமுனைத் தளபதிகள் தெரிவித்தவண்ணமுள்ளனர். ஆனாலும் செப்டம்பர் மாதமானது, பல காத்திரமான செய்திகளை சிங்களத்திற்கு சொல்லி வைத்ததை தற்போது நினைவிற் கொள்ளலாம்.ஆனையிறவுப் பெருந்தளத்திலிருந்து, கிளாலி இறங்கு துறையைக் கைப்பற்றுவதற்காக 29.09.1993 அன்று 5000 இற்கு மேற்பட்ட இராணுவத்தினர் மேற்கொண்ட ‘ஒப்பரேசன் யாழ்தேவி' படைநகர்வு, விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.4 மணிநேர சமரில் 125 சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர்.

கேணல் சரத் பொன்சேக்கா உட்பட 284 படையினர் படுகாயமடைந்தனர். இரண்டு ரி-55 ரக தாங்கி, ஒரு பவள் கவச வாகனம் முற்றாகச் சேதமடைந்தது.26.09.1990 அன்று, 170 நாள் முற்றுகைச் சமரின் பின், விடுதலைப் புலிகளால் யாழ், கோட்டை மீட்கப்பட்டது. அங்கு தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றப்பட்டது. அதேவேளை, கிளிநொச்சி மீட்புச் சமரும், இந்த செப்டெம்பர் மாத நிகழ்வாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஓயாத அலைகள்-2 நடவடிக்கை மூலம் ஒரு பிரிகேட் தலைமையகமும், பல மினி முகாம்களும் உள்ளடக்கப்பட்ட 8 கி.மீ. நீளமான இராணுவ வலயம் அழிக்கப்பட்டு, கிளிநொச்சி நகரம் மீட்கப்பட்டது.

27.09.1998 முடிவுற்ற இச் சமரில் 1500 க்கு அதிகமான சிங்களப் படைகள் (இராணுவத்தில் தமிழர்கள் இல்லையென்பதால், சிங்களப் படையென்று குறிப்பிடப்படுகிறது) கொல்லப்பட்டு, இரண்டு யுத்த தாங்கிகள் உட்பட பெருந்தொகையான கனரக ஆயுத தளவாடங்களை விடுதலைப் புலிகள் கையகப் படுத்திக் கொண்டனர். ஓயாத அலைகள்-3 தொடர்ந்த பொழுது, 03.09.2000 அன்று, சிங்கள இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட `ரிவிகிரண் படையெடுப்பு அதேநாளில் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

19.09.1994 அன்று ஏ-602 இலக்க, சிறீலங்கா கடற்படையின் கட்டளைக் கப்பலான `சாகரவர்த்தனா', கடற்கரும்புலி மகளிர் படையணிச் சிறப்புத்த தளபதி லெப். கேணல்.நளாயினி தலைமையிலான கடற் கரும்புலிகளால் முறியடிக்கப்பட்டது. கற்பிட்டிக் கடற்பரப்பில் நடைபெற்ற இந்த அழித்தொழிப்புச் சம்பவத்தில், கட்டளை அதிகாரி கப்டன் அஜித் போயாகொட மற்றும் உதவி கட்டளை அதிகாரியருவர் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டனர். ஆகவே மேற் குறிப்பிடப்பட்ட சமர்களெல்லாம் ஏறத்தாள 8 வருடங்களிற்கு முன்பு செப்டம்பரில் நடைபெற்ற போர் நிகழ்வுகள்.

ஏழு தடவையாக, வெற்றிகரமாகத் தாக்குதலை நடாத்திய பின் பாதுகாப்பாகத் தளம் திரும்பும் வான் புலிகளின் வளர்ச்சியும், புதிய பல வளர்ச்சிநிலை கொண்ட படைக் கட்டமைப்புக்களும், நவீன இராணுவ தொழில்நுட்ப இணைப்புக்களும், இந்த 8 வருட காலத்தில் முதிர்ச்சி நிலையைப் பெற்றிருக்கும். போராட்ட இயங்கியல் வளர்ச்சியோடு, வெகுஜன போராட்ட அதியுயர் வடிவமான மக்கள் புரட்சிப் படையணிகளின் படிநிலை உச்சமும் நிலை நிறுத்தப்படுகிறது. வெற்றிகள் பெறுவது மட்டுமல்ல, போராட்டம் குறித்த இலக்கை அடைவதும், அந்த இலக்கிற்குரிய வரையறைகளை, சுயமாக, அம்மக்கள் நிர்ணயம் செய்வதுமே உண்மையான வெற்றியாகும்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்கிற கோட்பாட்டை அடையும்வரை, பின்னகர்வுகளும், முன்னகர்வுகளும் மாறி மாறி வரும். ஆனாலும் சரியான வரலாறு, நேர்த்தியாக முன்னோக்கி நகர்ந்து செல்லும்.

- இதயச்சந்திரன்-

Comments