ஈழத் தமிழருக்கு குரல் கொடுக்கும் இந்திய ஊடகங்களுக்கு கனடிய தமிழ் ஊடகங்களின் ஒன்றியம் நன்றி தெரிவிப்பு

மனிதப் பேரவலத்துக்கு உள்ளாகியிருக்கும் ஈழத்தமிழர்களின் உயிருக்கான போராட்டத்தை வெளிக்கொணர்வதில் முன்னின்று செயற்படும் இந்திய ஊடகங்களுக்குப் பொதுவாகவும், தமிழக ஊடகங்களுக்குச் சிறப்பாகவும் நன்றிகளைத் தெரிவிப்பதுடன் இந்தப் பணி தொடர்ந்து ஈழ மக்கள் தமது உரிமையுடன் வாழும் விடுதலை வாழ்வு கிடைக்க வழியமைக்க வேண்டுமெனவும் கோருகின்றோம் என்று கனடியத் தமிழ் ஊடகங்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் கனடிய தமிழ் ஊடகங்களின் ஒன்றியம் நேற்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

வன்னிப்பெரு நிலத்தில் சிறிலங்காவின் சிங்கள அரசு மாதக்கணக்கில் நடத்தி வரும் அராஜக நடவடிக்கைகள், வான்குண்டு வீச்சுகள், எறிகணைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு ஊரூராய் அலைந்து கொண்டிருக்கும் எமது உறவுகளுக்கு உதவுவதற்காக 2008 ஒக்ரோபர் மாதம் 24, 25 ஆம் நாட்களில் கனடாவின் ரொறன்ரோவில் 'ஊட்டும் கரங்கள்" 24 மணி நேர நிகழ்ச்சியை நடத்திய கனடியத் தமிழ் ஊடகங்களின் ஒன்றியம், இங்கு கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பின்வரும் தீர்மானங்களைப் பிரகடனப்படுத்துகின்றோம்.

அவல வாழ்வுள் சிக்கியிருக்கும் எமது உறவுகளுக்கு எல்லா வழிகளிலும் தொடர்ந்து உதவிட நாங்கள் உறுதி பூணுகின்றோம்.

இதற்காகக் கனடிய மண்ணில் புகலிடம் பெற்றிருக்கும் மூன்று லட்சம் வரையான தமிழ் மக்களை ஒன்றிணைத்துத் தாயக உறவுகளுக்கு உதவிடும் அனைத்துச் செயற்பாடுகளையும் ஒருமுனைப்படுத்திச் செயற்பட முன்னின்று உழைப்போம்.

எமது உறவுகளின் துயர் துடைக்கத் தாமாகவே முன்வந்து குரல் கொடுப்பதோடு நிற்காது, தமிழக மக்கள் கருத்தை வெளிக்கொணர்ந்து அதன்பாற் செயற்பட இந்தியாவின் மத்திய-மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் இந்திய ஊடகங்களுக்குப் பொதுவாகவும், தமிழகச் சிற்றிதழ்கள் மற்றும் நாளேடுகளுக்குச் சிறப்பாகவும் கனடியத் தமிழ் ஊடகங்களின் ஒன்றியம் நன்றியைத் தெரிவிக்கின்றது.

மனிதாபிமான அடிப்படையில் ஊடக தர்மத்தின்பால் செயற்படும் இந்த ஊடகங்கள் ஈழ மக்கள் தமது உரிமையுடன் வாழும் விடுதலை வாழ்வு கிடைக்கும் வரை தம் பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென வினயமுடன் வேண்டுகின்றோம்.

மேலைத்தேய நாடுகளிலுள்ள ஊடகங்களும், அனைத்துலக செய்தி நிறுவனங்களும் மனிதாபிமான நோக்குடன் ஈழத்தமிழர் பிரச்சினைகளை வெளியே எடுத்துவர நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று சகோதர ஊடகவியலாளர்கள் எனும் வகையில் கனடியத் தமிழ் ஊடகங்களின் ஒன்றியம் கேட்டுக்கொள்கின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments