ஈழத் தமிழர் படுகொலைக்கு கண்டனம்: தடையை மீறி போராட்டம் நடத்த முயற்சித்த பழ.நெடுமாறன் உட்பட 120 பேர் கைது
ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும், சிறிலங்காவுக்கு ஆயுத உதவிகளை வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் சென்னை கோட்டை முன்பாக தடையை மீறிப் போராட்டம் நடத்த முயற்சித்தபோது தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உட்பட 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை இனப்பிரச்சினையில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்து சென்னை கோட்டை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகத் தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளருமான நெடுமாறன் அறிவித்திருந்தார்.
ஆனால், இப்போராட்டத்திற்கு அனுமதியளிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். எனினும் ஏற்கெனவே அறிவித்தபடி தடையை மீறிப் போராட்டம் நடத்தப்படும் என்று நெடுமாறன் கூறியிருந்தார்.
அதன்படி, தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்வதற்காக சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பாக நெடுமாறனும், அவரின் ஆதரவாளர்களும் இன்று புதன்கிழமை காலை குவிந்தனர். அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினர், கோட்டை முன்பு போராட்டம் நடத்தவும், கோட்டையை நோக்கி பேரணி நடத்தவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். தடையை மீறினால் கைது செய்வோம் என்றும் காவல்துறையினர் எச்சரித்தனர்.
இதனைக் கண்டிக்கும் வகையில் நெடுமாறனும், அவரின் ஆதரவாளர்களும் அங்கேயே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய நெடுமாறன், இலங்கையில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்தக் கோரி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்றாததற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நாளை சந்திக்கவிருப்பதனைச் சுட்டிக்காட்டிய நெடுமாறன், இச்சந்திப்பின் போதாவது சண்டை நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர், ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக முறையில் நாங்கள் அறிவித்திருந்த போராட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்றார். இது போன்ற போராட்டங்களைத் தடுப்பதை விட்டுவிட்டு இலங்கையில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கலைஞரை அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து தடையை மீறிப் போராட்டம் நடத்துவதற்காகக் கோட்டை நோக்கிச் செல்ல முயன்ற நெடுமாறனும், அவரின் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர். சென்னை சிந்தாரிப்பேட்டையில் உள் சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நெடுமாறனும், அவரின் ஆதரவாளர்களும் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
Comments