இலங்கை இனப்பிரச்சினையை தீர்க்க 2 நாட்களில் மாற்று வழி: மருத்துவர் இராமதாஸ்


இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்ப்பதற்கான மாற்று வழிகள் என்னென்ன என்பது குறித்து முதலமைச்சர் கலைஞரிடம் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யவிருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை இனப் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25.11.08) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பேரணியை முடித்து வைத்து உரையாற்றும் போது அவர் கேட்டுக்கொண்டார்.

இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பின் சார்பில் சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் முற்போக்கு மாணவர் கழகத்தின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியை சென்னை மன்றோ சிலை அருகில் திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி தொடக்கி வைத்தார்.

அண்ணாசாலை வழியாக சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை நடைபெற்ற இப்போராட்டத்தை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் முடித்து வைத்தார்.

பேரணியின் முடிவில் மருத்துவர் இராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் உரையாற்றினர்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக முதன் முதலில் போராட்டம் நடத்தியது பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும்தான் என்பதை நினைவுகூர்ந்த மருத்துவர் இராமதாஸ், அதன்பிறகே இச்சிக்கல் தீவிரமடைந்தது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் போரை நிறுத்த ராஜபக்ச அரசு மறுத்து விட்டதை மருத்துவர் இராமதாஸ் கடுமையாகக் கண்டித்தார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் நிறுத்தப்பட வேண்டும் என்று நாம் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தி வருகிறோம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணியைச் சந்தித்து “போரை நிறுத்த சிறிலங்கா அரசு தயாராக இல்லை” என்று சிறிலங்கா அரச தலைவர் கூறிவிட்டதாகத் தெரிவித்தார்.

112 கோடி மக்களின் பேராளரான மன்மோகன்சிங் சொல்லியும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் அதனை சிறிலங்கா அரசு மதிக்கவில்லை.

இந்நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய மாற்று வழி என்ன என்பது குறித்து சில செய்திகளைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம். அதனை நாளை மறுநாள் முதல்வர் பார்வைக்கு அனுப்புவோம். இதில் அவர் நல்ல முடிவெடுத்து செயற்பட வேண்டும் என்று இராமதாஸ் கூறினார்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் மட்டுமல்ல, எல்லா பிரச்சினையிலும் திருமாவளவனும், நானும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று உறுதியளித்த மருத்துவர் இராமதாஸ், இச்சிக்கலில் மற்ற கட்சிகளும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அடுத்து என்ன என்பது குறித்து முதல்வர் கலைஞர் தலைமையில்தான் யோசிக்க வேண்டும். இந்த பிரச்சினையில் அவரின் கருத்துரையைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். நானும், திருமாவளவனும் இன்று ஒரு கூட்டத்தைக் கூட்டலாம். அக்கூட்டத்தில் வெடிகுண்டுகளோடு புறப்படலாம் என்றெல்லாம் பேசலாம். பேசுவது சுலபம். ஆனால் இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும்.

இலங்கை பிரச்சினையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையை 6 மாதங்களுக்கு முன்பே நாங்கள் பாராட்டினோம். இப்போது அக்கட்சி கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டம் முதலமைச்சருக்கு கருத்துரை கூறும் கூட்டமாக இருக்கும் என நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர்கள் தன்னிச்சியாகப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுதான் ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்கும் என்பதால், இந்தியக் கம்யூனிஸ்ட் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை தா.பாண்டியன் கைவிட வேண்டும். வேண்டுமானால் இன்னொரு அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தலாம் எனவும் இராமதாஸ் கூறினார்.

சிங்களப் பேரினவாத நாடான சிறிலங்கா எப்போதுமே இந்தியாவின் நேச நாடாக இருந்ததில்லை. சீனாவையும், பாகிஸ்தானையும்தான் நேச நாடாக சிறிலங்கா கருதுகிறது. நம்மை எதிரியாகத்தான் நினைக்கிறது. அதேநேரத்தில் நம்முடைய தென் பகுதியில் தமிழீழம் உருவானால் அது எந்தக் காலத்திலும் நமக்கு நேச நாடாக இருக்கும்.

எனவே வங்க தேசத்தை உருவாக்க அப்போதைய மேற்கு வங்காள முதல்வர் சித்தார்த்த சங்கரே எப்படி பாடுபட்டாரோ அதுபோன்று நாமும் தமிழ் மக்களுக்காகப் பாடுபட வேண்டும் என்றும் மருத்துவர் இராமதாஸ் கூறினார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளை வீழ்த்திவிட்டோம் என்று ராஜபக்ச அரசு கூறுவதெல்லாம் பொய்தான். இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யத் தேவையில்லை. தமிழீழம் உருவானால் அதனை ஏற்பளிப்புச் செய்ய வேண்டும். இதைத்தான் நானும், திருமாவளவனும் எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இந்த பிரச்சினையில் சில ஊடகங்கள் தங்களைத் தமிழர்களின் எதிரிகளாகக் காட்டிக் கொள்ளக்கூடாது. கருணா போன்ற காட்டிக்கொடுக்கும் இரண்டர்களுக்குத் துணை போகக்கூடாது. தமிழக மக்களைப் போல ஊடகங்கள் ஒன்றிணைந்து செயற்றட வேண்டும் என்று இராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

இந்தப் பேரணியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும், தமிழீழத்தை ஏற்பளிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.


Comments