கிளிநொச்சியில் இடம்பெயர்ந்தோர் குடியிருப்புக்கள் மீது வான்தாக்குதல்: சிறுவன் உட்பட இருவர் பலி; 21 பேர் படுகாயம்; 60 குடிசைகள் அழிப்பு

கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் இடம்பெயர்ந்தோர் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஐந்து வயது சிறுவனும் முதியவருமாக இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தருமபுரத்தில் உள்ள கல்லாறில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு அமைத்து கொடுக்கப்பட்ட செல்வராசா மற்றும் இராணிமைந்தன் குடியிருப்புக்கள் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை 1:55 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தின.

இதில் ஐந்து வயது சிறுவன் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். 60 குடிசைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

படுகாயமடைந்தவர்களில் பத்து வயதுக்கு உட்பட்ட ஏழு சிறார்களும் பத்து பெண்களும் அடங்குவர். படுகாயமடைந்த அனைவரும் தருமபுரத்தில் உள்ள கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுதர்சன் சிவகுமார் (வயது 05), முதியவரான இராமன் இராமசாமி (வயது 80) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த ஏழு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.

இத்தாக்குதல் இடம்பெற்றவேளை சிறிலங்கா வான்படையின் வேவு வானூர்தியும் வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்தது.

மக்கள் தூக்கத்தில் இருந்த வேளையில் மக்களை அவலப்படுத்தி இப்படுகொலையை சிறிலங்கா அரசாங்கம் செய்துள்ளது. ஏற்கனவே, வெள்ளத்தால் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டிருந்த இப்பகுதி மக்கள், வெள்ள பாதிப்பிலிருந்து அவர்களின் வதிவிடங்களில் இருந்து மீள்வதற்கு இடையில் இருள்வேளையில் அதிர்ச்சியுற வைக்கும் தாக்குதலை சிறிலங்கா வான்படை நடத்தியுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான இம்மக்கள் சிறிலங்கா படையினரின் வல்வளைப்பு தாக்குதல்களால் ஏற்கனவே இடம்பெயர்ந்தவர்கள் ஆவர்.

ந.செல்வராஜா (வயது 36)

மு.இராஜேந்திரம் (வயது 55)

தவச்செல்வி (வயது 16)

க.அமராவதி (வயது 40)

அ.சித்திரா (வயது 09)

இ.யசிந்தன் (வயது 10)

அ.மாலாதேவி (வயது 38)

ந.புஸ்பவல்லி (வயது 28)

ந.யசிந்தன் (வயது 10)

மு.ருக்குமணிதேவி (வயது 35)

சபவித்திரன் (வயது 05)

எஸ்.சங்கரப்பிள்ளை (வயது 55)

அ.வேலவன் (வயது 18)

இ.இராஜகுமாரி (வயது 28)

பழனியம்மா (வயது 60)

எம்.இராஜேந்திரன் (38)

அ.தேவர் (வயது 50)

செல்வம் (வயது 15)

ஈ.லோஜினி (வயது 7)

மதியழகன் (வயது 6)

ஜெயராணி

ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் தருமபுரத்தில் உள்ள கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Comments