நாகரிகங்களும் அநாகரிகங்களும் பெரும்பாலும் ஆற்றங்கரைகளில்தான் தொடங்குகின்றன.
மக்கள் தம் விருப்பத்தில் சுதந்திரமாக அலைந்து திரிந்து, கூடு கட்டி, குடித்தனம் செய்து, குழந்தை பெற்று, விவசாயம் செய்து, கல்வி, கலைகள் வளர்த்து, காலத்தில் நிலைத்து நின்றால், அது நாகரிகம்.
அதே மக்களை அரசியல் உள்நோக்கங்களுடன் ஓரிடத்திலிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டுபோய் இன்னோர் இடத்தில் குடியமர்த்தி மேற்கண்டவற்றையே வலுக்கட்டாயமாகச் செய்ய வைப்பது அநாகரிகம்.
நான்காவது ஈழ யுத்தம் என்று வருணிக்கப்படும் இப்போதைய யுத்தத்தின் தோற்றுவாய் இப்படியான ஓர் அநாகரிகம் செழித்த இடத்தில்தான் இருக்கிறது. அந்த ஆற்றின் பெயர் மாவிலாறு (Mavil Aru).தமிழர்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் ஓடுகிற ஆறு. திருகோணமலை மாவட்டத்தில் இருக்கிற ஆறு. இந்த மாவிலாற்றுத் தண்ணீரை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்துக்கு Operation Watershed என்று பெயர் வைத்தார்கள்.
சரத் ஃபொன்சேகா மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்குச் சரியாக மூன்று மாதங்கள் கழித்து ஜூலை 26, 2006 அன்று ஆரம்பிக்கப்பட்டது இது. ஒரு நதி. ஓர் அணை. ஒரு பக்கம் தமிழர்கள். இன்னொரு பக்கம் குடியமர்த்தப்பட்ட சிங்கள இனத்தவர். இரு தரப்புக்கும் பொதுவான நதிநீரை ஒரு பக்கம் மட்டும் பயனடையும் வண்ணம் திறந்து விட்டிருந்தது அரசாங்கம்.
அந்தப் பகுதிக்கு `செருவில்' என்று பெயர். சிங்கள இனத்தவர் பெருமளவு வசிக்கும் பகுதி. விளைநிலங்கள் அதிகம். எனவே, நீரின் தேவையும். அதனாலென்ன? திறந்து விட்டுவிடலாமே?
வயலுக்குப் போகும் தண்ணீர், வரப்புக்குப் போகுமளவு கூட தமிழர் பகுதிக்குக் கிடைக்காமல் போனதுதான் பிரச்னையின் தொடக்கம். என்ன செய்யலாம்? அணையை மூடிவிடலாம். நீதிமான்கள் பேச வருவார்கள் அல்லவா? அப்போது கேட்கலாம். மூதூர் பகுதி நீர் வினியோகத் திட்டம் என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட அணை நீர், அறுபதாயிரம் சிங்களர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமா? லட்சக்கணக்கான தமிழர்களுக்கும் சேர்த்தா?
கேட்கலாம். கேட்டுத்தான் ஆகவேண்டும். பதில் சொல்வார்கள் அல்லவா? சொல்லித்தான் தீரவேண்டும். போர் இல்லாமல் வாழ முடியாவிட்டால்கூடப் பரவாயில்லை. நீரில்லாமல் எப்படி வாழ்வது?
அணையிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த நீரை நிறுத்தினார்கள் புலிகள். யாராவது பேச வருவார்கள் என்று காத்திருந்தார்கள் மக்கள். நீதிமான்கள் வரவில்லை. ராணுவம் வந்தது. நான்காம் ஈழ யுத்தம் மாவிலாறு விவகாரத்தில் தொடங்கியது.
மாவிலாறு என்பது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. ராணுவத்தின் நோக்கம் வேறு. செயல்திட்டம் வேறு. இலக்கு முற்றிலும் வேறு. மட்டக்களப்பில் ஆரம்பித்து திருகோணமலை வழியே வவுனியா வரை உள்ள புலிகளின் அத்தனை தளங்களையும் கைப்பற்றி அழிக்கும் திட்டம் அவர்கள் வசம் இருந்தது. அப்படியே முடிந்தால் யாழ்ப்பாணம். சுற்றி வளைத்துக் கிளிநொச்சி. நிறுத்தப் போவதில்லை. என்ன ஆனாலும் சரி. போர் நிறுத்த ஒப்பந்தப் பத்திரம், பத்திரமாக இருக்கிறது. இன்னும் கிழித்துப் போடவில்லை. யார் கேட்கப்போகிறார்கள்?
சடாரென்று விமானப்படையைக் களத்தில் இறக்கினார்கள். யாரும் எதிர்பார்க்கவில்லை.
மாவிலாற்றுப் படுகை என்பது மூன்று தரப்பு மக்கள் வாழும் பிரதேசம். தமிழர்கள். தமிழ்தான் பேசுவார்கள் என்றாலும் முஸ்லிம்கள். அப்புறம் சிங்களர்கள். முழு நீள யுத்தம் என்றால் நிச்சயமாக பாதிப்பு எல்லோருக்கும் பொதுவானதே. ஆயினும் பிரச்னையில்லை. லவுட் ஸ்பீக்கர் வைத்து அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்துவிடலாமே?
ராஜபக்ஷே அந்த ஜூலை மாதத்தை யுத்தத்துக்குத் தேர்ந்தெடுத்ததற்குப் பல ராஜதந்திரக் காரணங்கள் உண்டு. தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் காரணங்கள் போல் தெரிந்தாலும், முக்கியமானவை. தவிரவும் மிகத் தீவிரமானவை. பிரதானமாக, சர்வதேச கவனத்தைச் சற்றுக் காலம் கடத்திப் பெறுவதற்கான சரியான, திட்டமிட்ட முயற்சி.
அடிக்க ஆரம்பித்த உடனேயே யாரும் `ஐயோ அம்மா' என்று அலற முடியாத சூழல். குறிப்பாக அமெரிக்காவில். கனடாவில். அப்புறம் தமிழ் நாட்டில்.
அந்த 2006-ம் ஆண்டு மத்தியில் உலக அளவில் பல முக்கியமான சம்பவங்கள் நடைபெற்றன. மே மாதம்தான் கனடாவும் ஐரோப்பிய யூனியனும் விடுதலைப் புலிகளைத் தடை செய்து அறிவித்திருந்தன. இது புலிகள் தரப்பில் மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. மனத்தளவில் சற்றே தளர்ச்சியுற்றிருக்கக்கூடும். ஆனால், இதற்கெல்லாம் உடைந்துவிடக் கூடியவர்களல்லர் என்பது ராஜபக்ஷேவுக்குத் தெரியும். ஆயினும் புலிகளுக்கான பணம் வரும் பாதை முன்னைப் போல் அத்தனை சுதந்திரமாக இனி திறந்திருக்காது என்று அவர் கருதினார்.
தவிரவும் யுத்தத்தை இப்போது ஆரம்பித்தால் அது மேற்குலகின் கவனத்தைக் கவரச் சற்று சமயம் பிடிக்கும். ஏனென்றால், அதே ஜூலையில்தான் லெபனான் _ இஸ்ரேல் யுத்தம் அதன் உச்சகட்டத்தைத் தொட ஆரம்பித்திருந்தது. ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலிய அரசுக்குமான யுத்தம். அமெரிக்க அரசும் அமெரிக்க ஆதரவு ஐரோப்பிய அரசுகளும் கனடாவும் மிகத் தீவிரமாக இஸ்ரேலுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் உதவலாம் என்று யோசித்து, செயல்படுத்திக்கொண்டிருந்தார்கள். இப்போது மாவிலாறில் ஒரு யுத்தத்தைத் தொடங்கினால் சட்டென்று கவனம் கலைத்து இங்கே யாரும் திரும்ப மாட்டார்கள். போர் நிறுத்தத்துக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கும் முன்னின்று ஏற்பாடு செய்த புண்ணியாத்மாக்கள்தான் என்றாலும், இஸ்ரேல் முக்கியம் அவர்களுக்கு. இலங்கையெல்லாம் மற்றும் பலர் பட்டியலில் வருகிற தேசம்.
ஐரோப்பிய யூனியன் தன் மீது விதித்த தடையைச் சுட்டிக்காட்டி, அமைதித் திட்டத்தின் அங்கத்தினர்களாக இருந்த ஐரோப்பிய தேசங்களான ஸ்வீடன், டென்மார்க், ஃபின்லாந்து, நார்வே ஆகிய தேசங்களை `யூனியனிலிருந்து விலகுங்கள்' என்று விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
ம்ஹும். சாத்தியமில்லை. டென்மார்க்கும் ஃபின்லாந்தும் செப்டம்பர் 1 முதல் அமைதித் திட்டத்திலிருந்து விடைபெறுவதாகச் சொல்லிவிட்டன. ஸ்வீடனும் ஒத்து வருகிறபடியாக இல்லை. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர் பகுதிகள்தான் என்றாலும் ஓர் அணையை மூடி வைப்பது, திறந்து விடுவது போன்ற காரியங்களை அவர்கள் செய்யக்கூடாது என்று இந்த தேசங்களின் இலங்கைப் பிரதிநிதிகள் கருத்துச் சொன்னார்கள். நார்வே மட்டும்தான் தொடர்ந்து அமைதி, அமைதி என்று அலறிக்கொண்டிருந்தது.
ஒன்றும் பயனில்லை. இலங்கை விமானப்படை விமானத்திலிருந்து முதல் குண்டு வந்து விழுந்ததிலிருந்து மொத்தமாகச் சுமார் இருநூறு பேரை பலி கொண்டு, ஐம்பதாயிரம் பேரை அகதிகளாக ஊரை விட்டுத் துரத்திவிட்டு, அணையைத் திறந்துவிட்டார்கள்.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே யுத்தம் என்று நடைபெறத் தொடங்கிய நாளாக வெற்றியும் தோல்வியும் இரு தரப்புக்கும் மாறி மாறித்தான் இதுவரை வந்திருக்கிறது. நிகரற்ற ஆள் பலம், ஆயுத பலங்கள், மத்தியக் கிழக்கு தேசங்கள் மாதிரி தொட்டதற்கெல்லாம் நாட்டாமைக்கு அமெரிக்கா வந்து உட்காராத வசதி, இந்தியாவின் நிரந்தர மறைமுக ஆதரவு எல்லாம் இலங்கை அரசுக்கு உண்டு.
புலிகளைப் பொறுத்தவரை சர்வதேசத் தமிழர்களின் அனுதாபம் கலந்த ஆதரவு என்பதைத் தவிர பிரமாதமான வசதிகள் ஏதும் கிடையாது. ஒசாமா பின்லேடனின் அமெரிக்கத் திருவிளையாடல்களுக்குப் பிறகு ஆயுதம் வாங்குகிற விஷயம்கூட அவர்களுக்கு அத்தனை எளிதானதல்ல. ஆனால் இதுவல்ல. எதுவுமே அவர்களுக்கு எப்போதும் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. ஆதியில் திலீபன் தொடங்கி நேற்றைக்கு பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் வரை எத்தனை மூளைகள், எத்தனை வீரர்களை இழந்தாலும் சிலிர்த்துக்கொண்டு திரும்ப எழுந்து வந்துவிடுவார்கள். ஒரு தோல்வியை அடுத்த வெற்றியில் கழுவித் துடைத்துவிடுவார்கள்.
ஆனால், மாவிலாறில் தொடங்கி நேற்றைக்குக் கிளிநொச்சிக்கு அருகே பூநகரி வரை இலங்கை ராணுவம் முன்னேறி வந்துவிட்டது. மட்டக்களப்பு. திருகோணமலை. முல்லைத்தீவு. யாழ்ப்பாணம். வவுனியா. மன்னார். பூமியின் சுற்றுக்கு எதிராக ஒரு சுற்று. கிழக்கிலிருந்து வடக்கைத் தொட்டு வடமேற்கு. எங்கும் இலங்கை ராணுவம்.
பூநகரியைப் பிடிக்க முடிந்தது மிகப்பெரிய விஷயம். அது புலிகளின் வலுவான கோட்டை. யாழ்ப்பாணத்தைச் சாலை வழியில் பிடிப்பதற்கு மிகப்பெரிய வாசல்.
எனவேதான் வெற்றிக்கூச்சல் விண்ணைத் தொடுகிறது. `நீ முதலில் ஆயுதங்களைக் கீழே போடு, அப்புறம் பேச்சுவார்த்தை குறித்துச் சிந்திக்கலாம்' என்று விரல் நீட்டிப் பேச முடிகிறது. எவ்வித நிபந்தனைகளுக்கும் தயாரில்லை என்று காதைப் பொத்திக்கொள்ள வைக்கிறது. ஜெயிக்கப் போகிறோம், எதற்கு சமாதானம் என்று சிந்திக்கச் சொல்கிறது.
ஒரு விஷயம். ஜெயிப்பது அத்தனை சுலபமல்ல. ஒதுங்க ஓரடி நிலமில்லாமல் வவுனியா காடுகளில் ஓடியபடியே வளர்ந்த இயக்கம் அது. மண்ணைப் பிடித்ததல்ல, அங்குள்ள தமிழர்களின் மனதைப் பிடித்ததுதான் விடுதலைப் புலிகளின் ஒரே பெரிய பலம். நிறைய தவறுகள் செய்தார்கள். தடுமாற்றங்கள் ஏராளம். பல கொலைகள். பல சறுக்கல்கள். அழித்தொழிப்புகள்.
ஆனால் இன்றைக்கு வரை தனது இலக்கில் எந்த மாற்றமும் இல்லாத ஒரே இலங்கைத் தமிழ் இயக்கமாக இருக்கிறபடியால் கிடைத்த அங்கீகாரம் அது. 1948_ல் இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் எந்த அரசியல் கட்சியோ, இயக்கமோ அங்கே கொள்கைத் திருத்தம் செய்யாது இருந்ததில்லை. கோஷங்களில் மாறுதல்கள் இல்லாமலில்லை. இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்று ஊசலாடாமல் இருந்ததில்லை.
இலங்கை என்ன? உலகில் எந்தத் தேசத்தை, எந்தக் கட்சியை, எந்த இயக்கத்தை எடுத்துக்கொண்டாலும் இதுதான் நிலைமை. காலம், சூழ்நிலை, தேவை, அவசியம் கருதி கொள்கைகளில் சிறு திருத்தங்கள் மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகவே இருந்திருக்கிறது. கம்யூனிசக் கோட்டையான சீனா இன்றைக்கு அந்நிய முதலீடுகளில் ஆர்வம் செலுத்துகிறது. புதிய அமெரிக்க அதிபருக்கு ஃபிடல் காஸ்ட்ரோ வாழ்த்துச் சொல்கிறார். நேபாள மாவோயிஸ்டுகள் ஆட்சி மட்டத்தில் கொள்கைகளிலிருந்து சற்றே விலகியிரும் பிள்ளாய் என்று தமக்குத்தாமே புதிய விதிகளை எழுதிக்கொள்கிறார்கள். ஹமாஸ் தலைவர்கள் சர்வசாதாரணமாக இஸ்ரேல் அரசுடன் பேச்சுவார்த்தைகளுக்குப் போகிறார்கள். ஒசாமா பின்லேடனுக்குக் கூட, தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுகிறது. வாழ்க்கை வரலாறு எழுதத் தோன்றுகிறது.
தனி ஈழம் என்கிற ஒற்றை இலக்கிலிருந்து இன்றுவரை ஓரங்குலம் கூட நகராதவர்களாக விடுதலைப் புலிகள் மட்டுமே இருக்கிறார்கள்.
தனி ஈழம். புலிகளுக்கு முன்னாலும் சிலர் பேசியிருக்கிறார்கள். புலிகளின் சமகாலத்தைச் சேர்ந்த வேறு பல இயக்கத்தவர்களும் பேசியிருக்கிறார்கள். ஒரு கனவாக அதனை முன்வைக்கத் தெரிந்த யாருக்கும், நனவாக்க செயல்திட்டம் வகுக்கத் தெரியவில்லை.
ஆனால், எழுபதுகளின் பிற்பகுதியில் ஆயுதப் போராட்டம் ஒன்றைத் தவிர, தமிழர்கள் தப்பிக்க வேறு வழியில்லை என்கிற முடிவுக்கு வருவதில் அங்கே யாருக்கும் அபிப்பிராய பேதம் இல்லை. ஜனநாயக வழியில் போராடலாம், காந்தியைப் பார், நேருவைப் பார் என்று இந்தப் பக்கம் விரல் நீட்டியவர்கள் எல்லாம் கூட அடங்கி ஒடுங்கி அமர்ந்து விட்டார்கள். யார் குத்தியாவது அரிசி வெந்தால் சரி என்று கண்ணை மூடிக்கொண்டிருக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்கள்.
உலகம் முழுதும் ஆயிரம் விதமான வாதங்கள், விவாதங்கள், விமர்சனங்கள். சுயாட்சி, தன்னாட்சி, அதிகாரப் பகிர்வு அழகழகான பேச்சுகள்.
உண்மை மிக எளிமையானது. அதே சமயம் மிகத் தீவிரமானதும்கூட. நாள், தேதி, வருடம் குறிப்பிடக்கூடிய அளவுக்கான சரித்திரத்தின் முதல் பக்கத்திலிருந்து அங்கே தமிழர்கள் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் முக்கியமல்ல.
(தொடரும்)
Comments