பிரித்தானியாவில் தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள்: 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு


பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டு மலர்வணக்கம் செலுத்திய தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
லண்டனின் உள்ள மிகப்பெரிதான எக்சல் உள்ளரங்க மண்டபத்தில் நேற்று முன்நாள் வியாழக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு அகவணக்கத்துடன் தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு தொடங்கியது.

ஈகைச்சுடரினை மாவீரர் லெப். கேணல் வைகுந்தனின் தாயாரான யோகராணி மனோகரராசா ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து சுடர்வணக்கம் நடைபெற்றது.



மிக நீண்ட வரிசைகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த மக்கள் மலர்வணக்கம் செலுத்தினர். இடையிடையே கவிதைகள் மற்றும் அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இம்முறை நடைபெற்ற இந்நிகழ்வில் பல பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலந்து கொண்டவர்களில் பிரித்தானிய பழமைவாத (ஊழளெநசஎயவiஎந) கட்சியின் இல்பேட் தெற்கு வேட்பாளர் டோபி பொன்டில் உரையாற்றினார். அவர் தனதுரையில், தமிழ்மக்களின் ஒருமைப்பாடு தொடர்பாக பேசினார்.








தாராளவாத ஜனநாயகக் கட்சியின் கிங்ஸ்டன் மாநகர நாடாளுமன்ற உறுப்பினர் எட்டேவி உரையாற்றும் போது தமிழ் மக்கள் இவ்வாறு திரண்டிருப்பது அவர்களின் உறுதியை வெளிப்படுத்துகின்றது என்றார்.

சிறிலங்கா அரசாங்கம் வன்முறையை விடுத்து, போரை நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருந்து வகைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் தமிழருக்காகக் குரல் கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்காக பல பிரச்சினைகளுக்கு உட்பட்டு வந்தாலும் தாம் தொடர்ந்தும் அவர்கள் சார்பாகப் பேசுவோம் என உறுதியளித்தார்.

தொழிற்கட்சியின் இல்பேட் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஆன் ரயன் உரையாற்றும்போது, சிறிலங்கா அரசை பிரித்தானிய அரசு சமாதானப் பாதையில் அடி எடுத்து வைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என கூறினார்.





தென்மேற்கு லண்டன் மிச்சம் மற்றும் மோர்டன் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டொனா இலங்கைத் தமிழரின் துன்பங்கள் தொடர்பாக மிகவும் வருத்தமடைவதாக தெரிவித்தார்.

சவுத்தோல் நாடாளுமன்ற உறுப்பினர் வீரேந்திரா சர்மா இவ்வளவு சனத்திரள் பிரித்தானியத் தமிழ்ச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனில் வேறு எவ்வளவு பேர் வரவேண்டும் எனக் கேட்டார்.

அத்துடன் தான் அங்கத்துவம் அளிக்கும் தமிழருக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற அமைப்பினூடாக தொடர்ந்தும் தமிழரின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாக உறுதியளித்தார்.

கேய்ஸ் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்டொனால்ட் விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது. ஆகவே, அது நீக்கப்படவேண்டும் என்றார்.

இத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கு வந்து குரல் கொடுப்பது பிரித்தானிய அரசு சமாதானத்திற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே என அவர் மேலும் கூறினார்.

இவர்களின் உரைகளைத் தொடர்ந்து பழ. நெடுமாறன் மற்றும் இயக்குநர் சீமான் ஆகியோரின் உரைகள் ஒலிக்க விடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றினார்.

அவர் தனது 40 நிமிட சிறப்புரையில், ஈழத்தமிழர் இந்தியாவுடன் எப்போதும் நட்புடையவர்களாகவே இருப்பர் எனவும் சிங்கள மேலாதிக்கம் கொண்ட சிறிலங்காவே அச்சுறுத்தலானது எனவும் கூறினார்.

ஆயுதப்போராட்டம் ஆரம்பிப்பதற்கு நெடுங்காலம் முன்னதாகவே தமிழ்த் தலைவர்கள் சிங்கள அரசுகளிடம் நீதி கேட்டுச் சலித்து, தொடர்ந்த சிங்கள இனவாதம் தனிநாடே தமிழரின் மானத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யக் கூடியது என்றாகிவிட்டது என்றார்.

மேலும் சில அரங்க நிகழ்வுகளைத் தொடர்ந்து இந்நிகழ்வு மாலை 6:00 மணியளவில் நிறைவு பெற்றது.


Comments