ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக புதுடில்லியில் மாபெரும் பேரணி: அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் அறிவிப்பு

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக புதுடில்லியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.11.08) அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் கிளை மாபெரும் பேரணி நடத்தவுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கண்ணீர்த்துளி வடிவத்தில் இலங்கை தீவு. தமிழ் மக்கள் அழுது கடலில் தேங்கிய வடிவம். அவர்களின் அழுகுரல் எட்டுத்திசைகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

உள்நாட்டு யுத்தம் உச்சநிலை அடைந்துள்ளது. சிங்கள இனவெறியோடு செயற்படும் சிறிலங்கா அரசு தன் சொந்த நாட்டு மக்கள் மீதே வானூர்தி மூலம் குண்டு போட்டுக கொல்கிறது. இதனால் உள்நாட்டிலேயே லட்சணக்கணக்கான மக்கள் அகதிகளாகிவிட்டனர்.

இவர்கள் காடு மேடுகளில், மரங்களின் அடியில் குடியிருக்கின்றனர். குண்டுகளுக்கு பலியாவதை விட பாம்பு, பூச்சிகளுக்கு அதிகம் பலியாகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 200 பேர் பாம்புக்கடிக்கு பலியாகியுள்ளனர். உணவு, மருந்துப் பொருட்கள் இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அரசு தமிழ் மக்களை கொன்று குவிக்கும் சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளை செய்து வருகிறது.

மேலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை வட்டியில்லா கடனாக வழங்கி வருகிறது. இப்பணத்தை போர் நோக்கத்திற்காக சிறிலங்கா பயன்படுத்தி வருகிறது.

அங்கு மின்சாரம் இல்லை@ மருத்துவம் இல்லை@ குழந்தைகளுக்கு கல்வி இல்லை@ அடுத்த தலைமுறையின் எதிர்காலம் கற்கால வாழ்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

போர் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விடாமல் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தை சிறிலங்கா அரசு வெளியேற்றியுள்ளது.

நோர்வே நாட்டின் அமைதிப் பேச்சுவார்த்தையையும் சிறிலங்கா முறித்துக்கொண்டு விட்டது. இலங்கை தமிழ் மக்களை மட்டுமல்லாமல், இந்திய தமிழ் மீனவர்களையும் இதுவரை 400-க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக்கொன்றுள்ளது.

இந்திய அரசு கண்டனம் கூட செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளது.

அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் இலங்கைத் தமிழ் மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறது. இனியும் போராடும்.

- உடனடி போர் நிறுத்தம்!

- இந்திய இராணுவ உதவி நிறுத்தம்!

- அரசியல் தீர்வு!


ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய அளவில் டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடைபெறுகிறது.

அனைத்து மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இப்பேரணியில் பங்கேற்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஒரு கோடிப் பேரை சந்தித்து இக்கோரிக்கைகளுக்கு ஆதரவாக அவர்களின் கையொப்பம் பெற்று 2,000-க்கும் அதிகமான மாணவர்கள் தனி தொடருந்தில் சென்று இப்பேரணியில் பங்கேற்கிறார்கள்.

இந்த சிறப்பு தொடருந்து நவம்பர் 12 ஆம் நாள் சென்னையிலிருந்து புறப்படுகிறது. நவம்பர் 14 ஆம் நாள் டெல்லியில் பேரணி நடைபெறுகிறது.

மாணவ நண்பர்களே, இலங்கை தமிழ் மக்களின் அவலக்குரலை இந்தியா முழுவதும் ஒலிக்க டெல்லியில் சங்கமிப்போம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comments