புலிகளின் மீது குண்டு வீசினாலும் தமிழர்கள் மீது வீசுகின்ற குண்டுதான்: மகிந்தவுக்கு கருணாநிதி பதில்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது குண்டு வீசினாலும் தமிழர்கள் மீது வீசுகின்ற குண்டுதான் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கருத்து குறித்து அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து கருணாநிதி ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 12 ஆம் நாள் இந்த சபையில் ஒரு மனதாக - ஒரே மனதாக ஒரு தீர்மானத்தை தமிழர்களின் இனம் காப்பாற்றப்பட, பாதுகாக்கப்பட, உளத்தூய்மையோடு நிறைவேற்றினோம். ஆனால், தமிழர்கள் எப்போதும் எப்படியிருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக 12 ஆம் நாள் நாம் காட்டிய ஒற்றுமையை 14 ஆம் நாள் மறந்து விட்டு இந்த சபையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்காக நான் உள்ளபடியே வேதனைப்படுகிறேன்.

நமது இந்தியத் திருநாட்டிற்கு சிறிலங்காவின் அரச தலைவர் வந்து பிரதமரையும், மற்ற அமைச்சர்களையும் சந்தித்து வெளியிட்ட கருத்துக்களைப் பற்றித்தான் எதிர்க்கட்சித் தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், தங்களின் கருத்துக்களை இங்கே வெளியிட்டு இதற்கு "உனது பதில் என்ன'' என்று கேட்டிருக்கின்றனர்.

எப்படியோ என்னை டில்லியில் இருக்கின்ற ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கின்ற ஒருவனாக பாவித்து உன் பதில் என்ன என்று கேட்டதற்காக நான் நன்றி கூறிக்கொள்கிறேன். ஆனால், நான் யார், எனது உயரம் என்ன என்பதை அறிந்திருக்கிற காரணத்தால், அந்த உயரத்திற்கு உட்பட்டு என்ன பதிலைச் சொல்ல வேண்டுமோ அந்த பதிலை இங்கே சொல்ல விரும்புகின்றேன்.

சிறிலங்கா அரச தலைவர் சொன்ன கருத்துக்கு உனது பதில் என்ன என்று கேட்கிற நேரத்தில், இந்தியா இதனை எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறது என்ற கேள்வியும் அதில் அடங்கியிருக்கிறது என்பதை நான் உணராமல் இல்லை. இந்தியா எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நாம் இந்தியப் பேரரசுக்கு வேண்டுகோள் விடுக்க தொடர்ந்து கடமைப்பட்டிருக்கிறோம்.

அன்றைக்கு வேகமாகப் பேச தவறிவிட்ட நமது எதிர்க்கட்சியின் துணைத் தலைவர், இன்று வேகமாகப்பேசி "எப்போது நீங்கள் எல்லாம் பதவி விலகப் போகிறீர்கள்'' என்று கேட்டிருக்கின்றார். அந்த வேகத்தை நான் பாராட்டுகிறேன்.

தமிழனுக்கு ஒரு தீங்கு வந்தால், அந்தத் தீங்கை சமாளித்துக்கொண்டு, சகித்துக் கொண்டு நாங்கள் பதவியிலே தான் இருப்போம் என்று சொல்கின்ற அளவிற்கு பதவி வெறியில் இங்கு யாரும் தி.மு.கழகத்திலும் இல்லை, அன்றைக்கு நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலே கலந்து கொண்ட தலைவர்களின் கட்சிகளிலேயும் இல்லை என்று நான் கருதுகின்றேன்.

ஆனால், அன்றைக்கு நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தை நாங்கள் மாத்திரம் தான் நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். சொல்லப்போனால், பா.ம.க. வினால் அதனை நடைமுறைப்படுத்தியிருக்க முடியும்.

மற்ற கட்சிகள் எல்லாம், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது ஏற்றுக்கொண்டு அன்றைக்கு - அனைத்துக் கட்சிக் கூட்டம் கலைவதற்கு முன்பே, இது பற்றி தங்களின் தலைமையிடம் கேட்டுத்தான் முடிவெடுக்க முடியும் என்று கூறி விட்டார்கள். அதனால் சற்று தயக்கம் ஏற்பட்டது.

இதற்கிடையே பல நிகழ்ச்சிகள் இலங்கையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்போது முடிந்த முடிவாக ராஜபக்ச என்ற சிறிலங்காவின் அரச தலைவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், எங்களுக்கு தீவிரவாதிகளாக இருக்கின்ற விடுதலைப் புலிகளை அடக்குவது, அவர்களை சரணடையச் செய்வதுதான் எங்களின் முக்கிய நோக்கம், குறிக்கோள் - அதேநேரத்தில் தமிழர்களை அவர்கள் உலகத்தில் எங்கிருந்தாலும் அந்தத் தமிழர்களை காப்பாற்றுகின்ற பொறுப்பை நான் தட்டிக் கழிக்க மாட்டேன் என்று சுவைபடக் கூறியிருக்கின்றார்.

அதனை 'சுவைபட' என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், அப்படி சொன்னால் தான் இங்கிருக்கின்ற தமிழர்களை ஏமாற்ற முடியும் என்று அவர் கருதியிருக்கின்றார். (மேஜையைத் தட்டும் ஒலி)

இதனை இந்திய அரசு - மத்திய அரசு தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் என்று நான் நம்புகின்றேன். ஏனென்றால், அவர் இந்த இலங்கைப் பிரச்சினையை இரண்டாகப் பிரித்துக் கொண்டு பேசியிருக்கிறார்.

ஒன்று, தீவிரவாத அமைப்புக்கு, அதாவது விடுதலைப் புலிகளுக்கு தங்களால் ஆதரவு தர முடியாது என்று சிறிலங்கா அரச தலைவர் கூறியிருக்கிறார். அதே நேரத்தில், தமிழர்கள் மீது தங்களின் படை செல்லாது, தங்கள் இராணுவத்தின் குண்டுகள் பாயாது - அவர்களைத் தாக்க மாட்டோம் - தங்கள் சிப்பாய்கள் தமிழர்கள் மீது பாய்ச்சல் நடத்த மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆக, அவர் இந்த யுத்தத்தை இரண்டாகப் பிரித்துக்கொண்டு தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார். இப்போது தான் நமது இந்திய அரசு மிக எச்சரிக்கையோடு இந்தப் பிரச்சினையைக் கையாள வேண்டும் என்று நான் பணிவன்போடு இந்தியப் பிரதமரையும், இந்திய நாட்டை ஆள்கின்ற ஆட்சிக்கு வழிகாட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்ற சோனியா காந்தி போன்றவர்களையும் நான் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

சிறிலங்கா அரச தலைவர், விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்று கருதுவாரேயானால் அந்தத் தீவிரவாதிகளை எப்படி அணுக வேண்டும், எப்படி அவர்களை அடக்க வேண்டும் என்பதற்கு வேறு முறைகளைக் கையாள வேண்டும். அதே நேரத்திலே தமிழர்கள் மீது குண்டுமாரிப் பொழிவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தீவிரவாதிகளாக இருக்கின்ற விடுதலைப் புலிகளோடு, அவர்களை அடக்க - அவர்களை செயற்படாமல் செய்ய என்ன முறைகள் வேண்டுமோ அந்த முறைகளை அவர் கையாளட்டும், அதே நேரத்தில், தமிழர்கள் மீது ஒரு குண்டு, தமிழர்களின் வீடு மீது ஒரு குண்டு, தமிழர்களின் ஆலயங்களின் மீது, தமிழர்களின் இருப்பிடங்களின் மீது, தமிழர்களின் வீதிகளின் மீது, தமிழர்களின் ஊர்களின் மீது ஒரு குண்டு என்று சிறிலங்கா அரசின் சார்பாக - சிறிலங்கா இராணுவத்தின் சார்பாக விழக் கூடாது.

அதற்கு ராஜபக்ச உத்தரவாதம் தரத் தயாரா என்றால், தயார் இல்லை. அவர்கள் இலங்கையில் தமிழர்கள் மீது போடுகின்ற குண்டு விடுதலைப் புலிகளின் மீதும் போடப்படுகின்ற குண்டுதான். விடுதலைப் புலிகளின் மீது போடுகின்ற குண்டு தமிழர்களின் மீது போடப்படுகின்ற குண்டு தான். இருவரையும் ஒருசேர அழிக்கத்தான் இந்த யுத்தத்தை ராஜபக்ச அங்கே நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது நமக்குப் புரியாமல் இல்லை.

அவர் ஏன் அதற்குக் கெடு கேட்கிறார் என்பதும் நமக்கு நன்றாகப் புரிகிறது. இதில் நாம் ஏமாந்து விடக் கூடாது என்று மத்திய அரசுக்கு இந்த மாமன்றத்தின் சார்பாக நான் எனது வேண்டுகோளை எடுத்து வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

ஏனென்றால் அவர்களுக்கு வழி இருக்கின்றது. நமது பிரதமரே சிறிலங்கா அரச தலைவருக்கு சொல்லலாம், உங்களுக்குப் பிடிக்காதது விடுதலைப் புலிகள் தானே, தீவிரவாதிகள் தானே, எல்லா நாட்டிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள்.

இந்தியாவிலே இல்லையா? பாகிஸ்தானில் இல்லையா? அமெரிக்காவில் இல்லையா? இங்கிலாந்தில் இல்லையா? தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அங்கெல்லாம் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று அந்த நாட்டு மக்கள் மீதே குண்டு போட்டுக்கொண்டா இருக்கிறார்கள்? இல்லை.

இதனை நமது பிரதமர், நமது நாட்டின் சார்பாக இங்கே ஏங்கிக் கொண்டிருக்கின்ற - வேதனையில் வெந்து கொண்டிருக்கின்ற தமிழர்களின் சார்பாக ராஜபக்சவுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதனை அவர் கேட்க வேண்டும். கேட்காவிட்டால், பிறகு என்ன என்பதை யோசிப்போம் என்று அவர் சொல்ல வேண்டும்.

அவர் சொல்கின்ற அந்தப் பின்னணியில் நாமும் நமது ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். தமிழினத்தைப் பாதுகாக்கும் நமது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள என்னென்ன வழிகள் உண்டோ அவைகளை யெல்லாம் நாம் சிந்திக்க வேண்டும்.

நம்மைப் பொறுத்தவரையில் அறப்போரிலே மட்டுமே நமக்கு அக்கறை உண்டு. அறப்போராட்டத்திலே நாம் இன்று நேற்றல்ல, பெரியார் காலத்திலிருந்து, அண்ணா காலத்திலிருந்து, ஏன் இந்திய நாட்டில் விடுதலைக்காக போராடி வெற்றி பெற்ற உத்தமர் காந்தியடிகள் காலத்திலிருந்து அறப்போர் முறைகளை நாம் அறிந்தவர்கள்.

அந்தப்போர் முறையில் ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற முடியும் என்றால், அதற்கு நாம் தயாராக இருப்போம். நம்முடைய எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் சொன்னதைப்போல பதவிகளை துறக்கவும் தயாராக இருக்கிறோம் என்று கூறி இந்த அளவில் எனது உரையை நிறைவு செய்கிறேன் என்றார் கருணாநிதி.


Comments