பிரபாகரன் என்ற வீரனை வீரன் என்று சொல்லக் கூடாதா..?என்னை மிரட்டாதீர்கள், :- புதுச்சேரியில் பாரதிராஜா

ஈழத்தமிழர் இன்னல் நீங்க போர் நிறுத்தம் ஒன்றே தீர்வு" என்ற தலைப்பில் புதுச்சேரியில் கருத்தரங்கு நடந்தது. இதில் இயக்குனர்களான பாரதிராஜா, வி. சேகர், செல்வமணி, ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கருத்தரங்கில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது:-

மனித இனம் அழிந்து கொண்டுள்ளது. நீ இறையாண்மையைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறாய்.புலியைக் காப்பாற்ற பாம்பும் கழுதைகளும் தேவையில்லை. ஈ. வெ.ரா. இருந்தால் பாம்பை அடையாளம் காட்டியிருப்பார்.புலிக்கு இடைஞ்சல் பண்ணாதே. இலங்கைத் தமிழர்கள் தற்காத்துக் கொள்வதற்காக போரிட்டுக் கொண்டுள்ளனர்.

பிரபாகரனின் பெயரைச் சொல்லாதே என்கின்றனர். ஓர் இனத்தை உலகம் முழுவதும் அடையாளம் காட்டியவன் வீரமானவன் அவனது பெயரை உச்சரிக்கக்கூடாது. ஒரு வீரனை வீரன் என்று சொல்லக்கூடாதா? என்னை மிரட்டாதீர்கள்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினை குறித்துப் பேசினால் இறையாண்மை போயிடும் என்கின்றனர்.ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு காநாடக அமைச்சகம் எதிர்ப்பு தெரிவிப்பது இறையாண்மைக்கு எதிரானது இல்லையா? முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறாய்; இது என்ன இறையாண்மை?

ராஜீவை கொன்று விட்டனர் என்ற ஒரே காரணத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறாயே ஒரே ஒரு முறை இலங்கையில் என்ன நடக்கிறது என பார்த்து விட்டுவா. 20 ஆண்டு காலமாக அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் கொஞசம் கொஞ்சமாக தமிழகத்திற்கு வந்து கொண்டுள்ளனர். மூன்று நாட்களுக்கு முன்னால் திடீர் என "தாயகம் திரும்பிப் போ" என்றால்; என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?

படைபலம், இராணுவ உதவி அனைத்தையும் அனுப்பிவிட்டு தீர்மானம் நிறைவேற்றுகிறோம் எம்.பிக்களை இராஜினாமா செய்ய வைப்பது உள்ளிட்ட அனைத்தையும் செய்துகொண்டிருக்கும் வேளையில்; அங்கு ஊரே தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பது உனக்குத் தெரியாதா? உளவுத்துறை இல்லையா? இது வலுப்பெற்றால் தமிழகம் பாகுபட்டுவிடும். இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

திரைப்பட இயக்குனர் வி.சேகர் தனது உரையில்:-


இலங்கைத் தமிழர்கள் 30 வருடங்களாக போராடி வருகின்றனர். இவர்களுக்காக இராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்தலாம் என முடிவு செய்தோம். இதற்குப் பின்தான் தெரிந்தது; ஏன்டா போராட்டம் நடத்தினோம் என்று.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது என நாங்கள் நினைத்த நேரத்தில் எங்கள் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. உள்ளூரிலேயே எங்களைக் காப்பாற்ற ஆள் இல்லை. ஈழத் தமிழர் பிரச்சினையை இந்து, தினமலர் நாளிதழ்கள் கொச்சைப் படுத்தி விட்டன. பாரதிராஜா, சேகர், செல்வமணி ஆகியோருக்கு சினிமாத் துறையில் ஆதரவு இல்லை. ஏனென்றால் தமிழன் கையில் சினிமா இல்லை. சினிமாத்துறை தமிழர் கையில் வரவேண்டும். தமிழ் விரோதிகள் அடையாளம் காணப்பட வேண்டும். தமிழருக்கு ஆதரவாகப் போராடாத எந்த இயக்கமும் தமிழினத் துரோகம் செய்பவைதான் என்றார்.

இயக்குனர் செல்வமணி தனது உரையில்:-


கடந்த 1991ம் ஆண்டு ராஜீவ் படுகொலை செய்யப்பட்டபோது விடுதலைப் புலிகள்மீது அனைத்து தரப்பு மக்களுக்கும் வெறுப்பு இருந்தது உண்மைதான்.ஆனால் 2008ம் ஆண்டு அனைத்து தரப்பு மக்களும் விரும்பக் கூடியவர்களாக புலிகள் உள்ளனர். காந்தி தேசம் காட்டிக் கொடுக்கிறது. புத்த தேசம் சுட்டுத் தள்ளுகிறது. யார் தீவிரவாதி என்பதை காலம் சொல்லும். தமிழல் தேசிய கீதம் பாடக்கூடிய நேரம் விரைவில் வரும். இவ்வாறு செல்வமணி பேசினார்.


Comments