தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவரின் 2008ஆம் ஆண்டிற்கான மாவீரர் தின உரை குறித்து புதிய விளக்கங்களோடு சொல்லாத விடயங்களைச் சிலாகித்துச் சிலர் பேசத் தொடங்குவார்களென்று தொலைக் காட்சி ஊடகமொன்று ""வியாக்கியானம்'' செய்கிறது. பிரபாகரனின் மாவீரர் உரை, மக்களால் எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில், தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
அதற்கு வியாக்கியானங்களோ, பொழிப்புரையோ தேவையில்லை. அண்மைக் காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக விடுக்கும் செய்திகளை அடியொற்றியே ஆழமாகவும் விரிவாகவும் இம் மாவீரர் தின உரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆயுதப் போராட்டத்தின் நியாயப்பாட்டினை வரலாற்றுப் படிநிலை மாற்றங்களூடாக விளக்கிய பிரபாகரன் சர்வதேச நாடுகள் விதித்த தடைகள் அகற்றப்பட வேண்டுமென்பதை அவ்வுரையில் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவோடு உறவினைப் பேண விரும்புவதாக குறிப்பிடும் புலிகளின் தலைவர், விடுதலைப் புலிகள் மீது விதித்திருக்கும் தடையை அகற்றுவதோடு, தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரு தரப்பு இராஜாங்க உறவினை வலுப்படுத்த, ஏனைய நாடுகளை நோக்கி விடுக்கப்படும் நட்புறவுச் செய்தியாகவே கருதலாம்.பிரபாகரன் நீட்டும் நட்புக் கரங்களை விடுதலைப் புலிகளின் பலவீனமாக இந்தியா கருதுமா? அல்லது மாற்றமடையும் பூகோள அரசியலுக்கும் தனது பிராந்திய நலனிற்கும் இசைவானதென இதனைப் புரிந்து கொள்ளுமாவென்பதை வருகிற 4 ஆம் திகதி தமிழகத் தலைவர்கள், பிரதமர் மன்மோ கன் சிங்கைச் சந்திக்கும் போது தெ?ந்து கொள்ளலாம்.ஏனெனில், தமிழக மக்களின் ஈழ ஆதரவு எழுச்சி உச்சம் பெற்றிருக்கும் இவ்வேளையில் டில்லியிலிருந்து தன்னிச்சையாக பிரபாகரனின்உரை குறித்துப் பேசுவதை இந்திய மத்திய அரசு தவிர்த்துக் கொள்ளுமென்பதை பு?ந்து கொள்வது மிக இலகுவானது.
ஏற்கனவே தமிழக சட்ட சபையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட அனைத்துக் கட்சித் தீர்மானத்தை எவ்வாறு இலங்கை அரசிடம் கொண்டு செல்வது என்கிற சங்கடத்தில் மன்மோகன்சிங் உள்ளார்.ஆகவே, தமிழகத்தில் உருவாகியுள்ள பாரிய எழுச்சி, இந்தியப் பேரரசின் நிலைப்பாட்டில் பெரும் மாறுதலை உருவாக்குமென்று புலிகளின் தலைவர் கணிப்பிடுவதை நாம் குறித்துக் கொள்ளலாம்.சர்வதேச நாடுகள், விடுதலைப் புலிகள் மீது விதித்துள்ள தடையானது, பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு முனைப்பிற்கு முண்டு கொடுப்பதோடு, அதனைத் தமிழின அழிப்பிற்கான சர்வதேச அங்கீகாரமாகவும் மாற்றியுள்ளது.
பெருந்தேசிய இனவாதமானது தனது சகல வளங்களையும் ஒன்று குவித்து, தமிழ் மக்கள்மீது ஏவி விட்டுள்ள இன அழிப்புப் போரினை எதிர்த்துப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கும் தார்மீக ஆதரவினை பிரபாகரன், உலகிற்கு எடுத்துக் கூறியுள்ளார்.அவர் உரையில் விரவி நிற்கும் ஆழமான போராட்டம் குறித்த அரசியல் பார்வை யொன்று தெளிவõகத் தென்படுகிறது.அதாவது, மக்கள் சக்தியே போராட்டத்தின் உந்துவிசையாகும் என்கிற செய்தி அங்கு முன்வைக்கப்படுகிறது.
விடுதலைப் போராட்டத்தின் சகல விரிதளப் பரிமாணங்களையும் குவிமையப் பார்வையூடாகத் தரிசிக்கும் ஆளுமை, இவ்வுரையெங்கும் பரவிக் கிடக்கிறது.குறிப்பாக புலம்பெயர்ந்த இளையோரின் தொடர்ச்சியான காத்திரமான போராட்ட முன்னெடுப்புப் பங்களிப்பைப் பாராட்டுகின்றார்.தமிழக மக்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் இந்தியத் தலைவர்களுக்கும் தனது அன்பை யும் நன்றியையும் தெரிவிக்கின்றார். ஆனாலும் சமாதானத் தூதுவர்களாக வலம் வந்த சில சர்வதேச நாடுகள், விடுதலைப் புலிகள் இயக்கத் தைத் தடை செய்த நிகழ்வுகளைச் சாடுகின்றார்.அத்தோடு முழுமையான தமிழின அழிப்புப் போரை முன்னெடுக்கும் சிங்கள தேசத்தோடு இனிச் சமரசம் இல்லையென்பதையும் தெளிவாக முன் வைக்கிறார்.
கிளிநொச்சியில் கொடி நாட்டி, பொதுத்தேர்தல் கனவோடு ஆட்சியதிகாரத்தை நீடிக்க முனையும் அரசாங்கத்திற்கும் இவ்வுரையில் ஒரு இராணுவச் செய்தி உண்டு.போராட்ட வரலாற்றில் எத்தனையோ பெருந் தடைகளையும் ஆக்கிரமிப்புக்களையும் வல்லரசாளர்களையும் எதிர்கொண்டு இற்றைவரை தமிழர்களின் போராட்டத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகள், சிங்களத்தின் தற்போதைய ஆக்கிரமிப்பையும் முறியடிப்பார்களென புலிகளின் தேசியத் தலைவர் உறுதிபடக் கூறுகின்றார்.ஆகவே, சர்வதேச குறிப்பாக பிராந்திய அரசியலில் நிகழும் மாறுதல்களை, அவர் மிக நுணுக்கமாக அவதானிக்கின்றார் என்று கணிப்பிடலாம்.
பராக் ஒபாமாவின் வருகையும் அடுத்த வருட முற்பகுதியில் இந்திய அரசியலில் ஏற்படவிருக்கும் திருப்பங்களும் உலகம் தற்போது எதிர்நோக்கும் பாரிய பொருளாதார நெருக்கடிகளும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புதிய கொள்கைகளை வகுக்க வேண்டிய கட்டாயத்தினை நிச்சயம் உருவாக்கப் போகிறது.
ஆகவே, இலங்கை இராணுவத்தை எதிர்கொள்ளும் படைபலம் விடுதலைப் புலிகளுக்கு இருக்கும் அதேவேளை அடுத்த கட்ட பிராந்திய அரசியல் நகர்வுகள் தமக்குச் சாதகமாக மாறும் நிலைவரை தற்காப்புப் பரிமாண நிலைக்குள் போராட்டத்தைத் தக்கவைக்கும் தந்திரோபாய உத்தி, புலிகளின் தலைமையால் பிரயோகிக்கப்படுவதனை இவ்வுரையின் சாரமாகக் கொள்ளலாம்.ஆனாலும் வன்னிமக்களை வல்வளைப்புச் செய்து நெருக்கி வரும் இராணுவம், மக்களின் ஒருங்கிணைப்புச் சக்தியின் வீரியத்தை அதிகரித்து, அடுத்த கட்ட போராட்ட படி நிலை வளர்ச்சிக்கு ஊக்கியாகவும் தொழிற்பட்டு, வலிந்த தாக்குதல் நிலைக்கு போராட்டச் சக்தியை இழுத்துச் சென்று விடும்.
அரசாங்கத்தின் போரியல் உத்தி இவ்வகையில் அமைந்தாலும் விடுதலைப் புலிகளின் மீது நிர்ப் பந்திக்கப்படும் வலிந்த தாக்குதல் நிலைப்பாடு, குறுகிய கால மீள் தகவு கொண்டதொரு நிகழ்வாக அமைந்து, மறுபடியும் தற்காப்பு நிலைக்குத் திரும்பி விடலாம்.இதனை உணர்ந்து கொள்ளும் அரசாங்கம், எவ்வகையிலாவது விடுதலைப் புலிகளை வலிந்த தாக்குதல் நிலைக்குத் தள்ளுவதற்கே, இவ்வளவு தூரம் அகலக் கால் நீட்டி கிளிநொச்சி வரை வந்துள்ளது.நிலத்தைப் பிடித்தாலும் புலிகளின் படைவலுவினைச் சிதைக்க முடியவில்லையென்கிற ஆதங்கம் இராணுவத் தலைமைக்கு உண்டு.
ஊர்களைப் பிடித்து ஊரின் பெயர்ப்பலகைக ளில் சிங்கக்கொடி நாட்டி, வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்தி?கைகளில் தமி ழர் போராட்டத்தை நசுக்கி விட்டோமென வெற்றிச் செய்திகளை அறிவிப்பதன் மூலம், அரசியல் இலாபம் கிடைத்தால் போதுமென்கிற சுயதிருப்தி ஆட்சி அதிகாரவாசிகளிடம் உண்டு.சு.க. வும், ஐ.தே.க.வும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் தமிழின ஒடுக்கல் என்கிற பேரினவாத அரசியல் சூத்திரத்துள் சுழலும் அதிகார வாழ்க்கை முறைமையில் மாறுதல் இல்லை.
படைவலு சிதைந்து சின்னாபின்னமானதால் புலிகளோடு பேச வந்தார் ரணில்.சமாதான காலத்தில் இழந்த சக்தியை மீட்க சீனாவைக் காட்டி, படைக்கல லேகியங்களை ஏனைய வல்லரசாளர்களிடமிருந்து வாங்கிக் குவித்து முறுக்கேறிய நிலையில் மறுபடியும் இன அழிப்புப் படலத்தை ஆரம்பித்தார் மஹிந்த ராஜபக்ஷ.ஐ. நா. வில் வீட்டோ உரிமத்தைக் கொண்ட சீன தேசத்தின் நிரந்தர நட்பு, சிங்களத்திற்கு இருப்பதால் மேற்குலக சக்திகளால் இவர்களை அசைக்க முடியவில்லை.
ஆனாலும் அண்டை நாடான இந்தியாவுடன் சிங்களத்தின் சீனச் சேட்டைகள் ஒரு குறிப்பிட்ட எல்லை வரையே பாயும்.ஓருலகத் தலைவர் பதவிக்குஆபத்து வந்துவிட்டதாக அமெ?க்க உளவு நிறுவனமே ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளதால் சிங்களதேசத்தின் இற்றை வரையான வல்லரசுக் காய் நகர்த்தல் உத்திகளும் இராஜதந்திரப் பொறிமுறைகளும் தோல்வி நிலை நோக்கி நகரப் போகிறது.ஆசியப் பிராந்தியத்திலுள்ள இரு நாடுகளான சீனாவும் இந்தியாவும் அமெ?க்காவின் உலக நாயகன் பதவியை விரைவில் தட்டிச் செல்லலாமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஒபாமாவின் ஆட்சியதிகார நிர்வாகிகளை இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கும் சவுத் புளொக் புத்திமான்களுக்கும் பிடிக்காது.எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி படுதோல்வியைச் சந்திக்குமென கருத்துக் கணிப்புக்கள் எடுத்தியம்புகின்றன. சும்மா கிடந்த மும்பாயை, முஸ்லிம் தீவிரவாதிகள் ஊதிக்கெடுத்து இந்துத்துவ பாரதீய ஜனதாக் கட்சியின் வாக்கு வங்கியில் மக்களாதரவை அதிகரித்துள்ளன.
இந்நிலையில் எதற்கெடுத்தாலும் ராஜீவ் கதை சொல்லும் காங்கிரஸார் ஆட்சியை இழப்பதும் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்கிற வரையறைக்குள் வைத்து பார்க்கக் கூடாதென்று கூறிய ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க இராஜாங்க அமைச்சர் பதவியேற்பதும் பேரினவாத வயிற்றுள் பெருங் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதென நம்பலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் நீட்டிய அன்புக் கரத்தினை இந்தியா பற்றிக் கொள்ளப் போகிறதா அல்லது தட்டி விடப் போகிறதா என்பதை குறுகிய கால அவகாசத்துடன் தெரிந்து கொள்ள முடியாதென்பதும் உண்மையே.
-சி.இதயச்சந்திரன் -
Comments