சரத் பொன்சேகாவின் பதவிக்காலமும் யுத்தமும்

சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா அதிகம் பெருமைப்பட்டுக் கொள்வதாகவே தெரிகின்றது. கஜபாகு ரெஜிமண்டின் 25ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், இதில் தன்னைப் பெருமைப்படுத்திக்கொள்ளும் வகையில் இரு விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

01. விடுதலைப் புலிகள் 80 வீதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர்.

02. எனது பதவிக்காலத்திற்குள் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துவிடுவேன்.


இவற்றைத் தவிர வேறுசில விடயங்களையும் பேசியுள்ள அவர், விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க- அதாவது போரில் வெற்றிபெற நான் அவசியம், என்னைவிட்டால் வேறு யாராலும் முடியாது என்ற தொனியிலும் பேசியுள்ளார். முதலில், விடுதலைப் புலிகளை 80 வீதம் தோற்கடித்துவிட்டதான விடயத்திற்கு வருவோம். இதுவரையில், 12,000 புலிகளை அதாவது வடக்குக் களமுனையில் கொன்றதன் மூலம் இது நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது சரத் பொன்சேகாவின் வாதமாகும். அத்தோடு வன்னிப் பெருநிலப்பரப்பின் மேற்குப் பகுதியின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருப்ப தானது அவரது இப்பேச்சிற்கு அடிப்படையும் உள்ளது.

இதில் 12,000 விடுதலைப் புலிகளைக் கொன்றதென்ற சரத் பொன்சேகா தெரிவிக்கும் கணக்கைச் சமன் செய்வதென்பது மிகவும் கடினமானதொன்றாகும். ஏனெனில் 2007 இன் ஆரம்பத்தில் வடக்கில் அதாவது வன்னிப் பெருநிலப்பரப்பில் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது, ஆறாயிரம் விடுதலைப் புலிகளே உள்ளதாகவும், அதில் 4000 பேர் வரையிலேயே போரிடும் வலு உள்ளவர்கள் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

தற்பொழுது, 12,000 விடுதலைப் புலிகளைக் கொன்றுவிட்டதாகவும், இன்னமும் 4000 வரையில் புலிகள் இருப்பதாகவும் அவர் கூறும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இவரது புள்ளிவிபரத்தைச் சமன்பாடு செய்ய அவராலேயே முடியும். இது ஒருபுறம் இருக்க, 80 சதவீதமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுவிட்டனர். அன்றி 80 சதவீதம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர் எனின், கிளிநொச்சி போன்ற இடங்களை ஆக்கிரமித்து கொள்வதற்குச் சிறிலங்காப் படைத்தரப்பிற்கு ஏற்படும் காலதாமதம் ஏன்?

சிறிலங்கா இராணுவத் தளபதி சரத்பொன் சேகா, வெற்றிபெறாத யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டதாகவும், தம்மால் தான் அது சாத்தியமானது எனவும் பேசிக்கொள்ளலாம். ஆனால், சரத்பொன்சேகா யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டாரா? பெறுவாரா? என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க, சரத்பொன்சேகாவிற்கு யுத்தத்திற்கென சிறிலங்கா அரசால் வழங்கப் பட்ட ஒத்துழைப்புப் போன்று வேறு யாருக்கும் இது வரை வழங்கப்பட்டதுண்டா? அன்றி இனி வழங்கப்படத்தான் முடியுமா? என்ற கேள்விக்குப் பதில் தேடுதல் என்பது முக்கியமானது. முதலில், சிறிலங்காவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள மகிந்த ராஜபக்ச இது வரையில் சிறிலங்காவில் ஆட்சி அதிகாரத் திற்கு வந்தவர்களில் தீவிர இனவாதியாகும். மேலும் குறிப்பிட்டுக் கூறுவதானால், தீவிர இன வாத அரசாங்கம் ஒன்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.

இவ் இனவாத அரசாங்கம் யுத்தத்தில் வெற்றிபெறுவதற்காக அதாவது தமிழர்களைத் தோற்கடிப்பதற்கும் அழிப்பதற்கும் நாட்டின் அனைத்து வளங்களையும், அதிகாரங்களையும் ஆயுதப் படைத்தரப்பிற்கு தாரை வார்க்கத் தயாராகவுள்ளது. இதனை அதிகரித்துச் செல் லும் இராணுவச் செலவீடுகளே வெளிப்படுத்தப் போதுமானதாகும். அத்தோடு, இராணுவத் தளபதி தனது விருப் பத்திற்கு ஏற்ப படையணிகளை உருவாக்கவும், பதவி உயர்வுகளையும் நியமனங்களையும் வழங்குவதற்கான ஒத்துழைப்பும் அரசினால் வழங்கப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாகக் கூறுவதானால் 2007 இன் ஆரம்பத்தில் அதாவது மார்ச்சில் 57ஆவது டிவிசன் படையணியை உருவாக்கி வன்னியின் மேற்கில் களமுனை யைத் திறந்த சரத்பொன்சேகா 2007 டிசம்பரில் 58வது டிவிசன் படையணியை உருவாக்கிக் களத்தில் இறக்கினார்.

இதனையடுத்து 59, 61, 62வது எனப் படையணிகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் சரத்பொன்சேகா, யுத்தச் செலவீனத்தையும், ஆளணியினையும் தனது விருப்பிற்கும் தேவைக்கும் என்ற வகையில் அதிகரிக்கவும் பயன்படுத்தவும் வாய்ப்புப் பெற்றவராக உள்ளார். இது ஒருபுறம் இருக்க சிறிலங்கா அரசிற்கு ஆயுத தளவாடங்கள், பயிற்சிகள், உளவுத்தகவல்கள் என் பனவற்றுடன் தேவைப்படின் படைநடவடிக்கைக்கு ஒத்துழைக்கவும் பல நாடுகள் முண்டியடித்த வண்ணமுள்ளன. பிராந்திய மற்றும், பூகோள நலன்பாற்பட்டதாக இந்நாடுகளின் செயற்பாடுகள் இருப்பினும், சிறிலங்கா இராணுவத்திற்கு போதிய ஒத்துழைப்பு ஏன் தேவைக்கதிகமான ஒத்துழைப்புக்கூடக் கிடைக்கப்பெற்றது என்று கூடக் கூறலாம். இந்த வகையில் பார்க்கையில், சரத்பொன் சேகாவிற்குச் சிறிலங்காத் தரப்பிலிருந்து இதுவரையில் கிடைக்கப்பெறாத ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கப்பெற்றது என்பதே நிதர்சனமாகும். இந்நிலையில் சரத்பொன்சேகா யுத்தத்தை எந்தவிதத் தடங்கலுமின்றி நடத்திச் செல்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வாறு வழங்கப்பட்ட வாய்ப்பின் உச்சமே, யுத்தம் குறித்து ஊடகங்களின் வாய்கள் அடைக்கப்பட்டமையும், களமுனையில் ஏற்படும் இழப்புக்களை வெளியிடுவதில்லை என்ற அரசாங்கத்தின் தீர்மானமுமாகும். இதன் மூலம், சரத் பொன்சேகாவிற்கு என்ன விலை கொடுத்தும் யுத்தத்தை நடத்தலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டது. இது இராணுவ ஆட்சி நடைபெறும் நாட்டிலுள்ள தலைவர் ஒருவர் பெற்றுக்கொள்ளும் அதிகாரத்திற்கு ஒப்பானதொன்றாகும்.

இத்தகையதொரு நிலையில், இராணுவத் தளபதி சரத்பொன்சேகா யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் இழப்புக்கள் என ஒரு பெரும் எண்ணிக்கையைக் கூறிக்கொண்டு பெரும் சாதனை புரிந்துவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொள்வதில் என்ன இருக்கின்றது. அவர் கூறுவது போன்று விடுதலைப் புலிகள் இழப்புக்களைச் சந்தித்துள்ளார்களா? அன்றி இராணுவம் தான் இழப்புக்கள் இன்றி சண்டைகளில் நொந்துபோகாமல் சிதைவுறாமல் போரிட்டு வருகின்றதா? அவ்வாறானால், சரத் பொன்சேகா மீண்டும், மீண்டும் புதிய புதிய படையணிகளை உருவாக்க வேண்டியதான தேவை ஏன் வந்தது? கிளிநொச்சியை இதுவரை ஆக்கிரமிக்க முடியாமல் போவது ஏன்? 80 வீதம் தோற்கடிக்கப்பட்ட புலிகளை விரட்டியடிக்க அன்றிக் கொன்றொழிக்க காலதாமதம் ஏன்?

இதனால் யுத்தத்தில் சரத் பொன்சேகா சாதித்தது எதுவாக இருப்பினும், அவரின் சாத னையாகச் சில விடயங்கள் எஞ்சியிருக்கும் என்றே கொள்ளமுடியும். இதில், முதலாவதாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட இரா ணுவ நடவடிக்கை ஒன்றைப் பெயர் குறிப்பிடாது நடத்தியதோடு, இலக்குக் குறிப்பிடாமலும் நடத்தி முடிவில் ஆக்கிரமித்த பகுதிக்கான நடவடிக்கை எனக் கூறி வெற்றிப் பெருமிதம் கொள்ளுதல். இரண்டாவதாகக் குறுகிய காலப்பகுதிக்குள் அதாவது, இரண்டு வருட காலத்திற்குள் ஐந்து படையணிகளை ‘டிவிசன்களை' உருவாக்கி களமிறக்கியமையும் அவரது இச்சாதனைப் பட்டியலில் சேரக்கூடும்.

சரத்பொன்சேகா கூறும் இரண்டாவது விட யத்திற்கு வருவோம். இது எனது பதவிக் காலத்திற்குள் விடுதலைப் புலிகளைத் தோற் கடித்து விடுவேன் என்பதாகும். இதில் முதல் எழும் கேள்வியானது எந்தப் பதவிக்காலத்திற்குள் என்பது. அதாவது, இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தற்போதைய பதவிக் காலம் முடியவடையும் இவ்வருடம் டிசம்பர் 17ம் திகதிக்குள்ளா? அன்றி சனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் வழங்கப்படும் ஓராண்டுப் பதவி நீடிப்புக்குள்ளா? அன்றி கால எல்லை எண்ணி நீடிக்கக்கூடிய பதவிக் காலத்திற்குள்ளா? அதாவது சிறிலங்கா இராணுவத் தலைமைப்பதவி தனக்கு ஆயுட்காலப் பதவியாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலா?

ஏனெனில், இப்பதவிக்காலத்திற்குள் எனின், இன்னமும் ஒருமாத காலத்திற்குள் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அவ்வாறு சரத்பொன்சேகா எண்ணியிருக்கமாட்டார். ஓராண்டு பதவி நீடிப்பிற்குள் எனில் அதுவும் போதுமானதாக இருக்காது. சிலவேளை, வருடங்கள் இருபது வரையில் புலிகளின் போராட்டம் நீடிக்கவே செய்யும் எனச் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்திற்கமைவாக 20 வருடகால பதவி நீடிப்பு வழங்கப்படின், அதாவது ஆயுட்காலப் பதவி நீடிப்பில் இது சாத்தியமாகக் கூடுமா?

ஆனால், இராணுவத் தளபதி சரத்பொன் சேகாவிற்கு இவை புரியாதவையல்ல. புரியாது இருந்திருப்பினும் வன்னிக் களமுனையின் தற்போதைய நிலைமை - அதாவது சிறிலங்கா இராணுவம் சந்தித்துவரும் நாளாந்த இழப்புக்கள், கிழக்கில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அதிகரிப்பு என்பன அவருக்குப் புரியவைத்திருக்கும். இந்த நிலையில் சரத் பொன்சேகாவின் புலிகள் எண்பது வீதம் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். பதவிக் காலத்திற்குள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்பதெல்லாம் தனது பதவிக் காலத்தை நீடிப்பதற்கான அரசிடமான வலியுறுத்தலாகவே கொள்ள வேண்டியதொன்றாகவுள்ளது.

அதாவது விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கத் தன்னைவிட்டால் வேறு தளபதிகள் இல்லை என்ற தொனியில் - தன்னால் செய்ததாகக் கூறப்படும் சாதனைகளின் அடிப்படையில் தனது பதவிக் காலத்தை நீடித்துச் செல்வதற்கான பிரகடனங்களாகவே சரத்பொன்சேகாவின் அறிப்புக்கள் நோக்கப்படத்தக்கவையாக இருத்தல் வேண்டும். இதற்கு அப்பால், யுத்தம் குறித்த சரியான மதிப்பீடுகள் அதாவது யுத்தத்தில் சிறிலங்காப் படைத்தரப்பின் இழப்புக்கள் யுத்தத்தில் செலவிடப்படும் வளங்கள், யுத்தத்தினால் சிறிலங்கா குறிப்பாகச் சிங்கள மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் என்பன மதிப்பீடு செய்யப்படுமானால் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராணுவ வெற்றிகள் குறித்துக் கேள்விகள் எழுவது தவிர்க்கப்பட முடியாததாகிவிடும்.

எடுத்துக்காட்டாகக் கிழக்கை மீட்டுவிட்டோம் என்ற பெரும் பிரகடனத்துடன் வடக்கில் யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா தற்பொழுது கிழக்கையும் திரும்பிப்பார்க்க வேண்டியதான நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார். இன்று கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், சில சமயங்களில் அவற்றிற்கு வெளியில் அம்பாந்தோட்டை, மொனறாகலை மாவட்டங்களிலும் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இடம்பெற்றுவருகின்றன. இவற்றைப் புறம் தள்ளிவிட்டு, சிறிலங்கா இராணுவத் தளபதியால் யுத்தத்தின் வெற்றி குறித்து எவ்வாறு பேசமுடியும்.

வன்னிக் களமுனையில், சிறிலங்காப் படைத்தரப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டிருப்பினும், அதற்காகப் பெரும்விலை கொடுத்து வருகின்றது. கடந்த ஒரு வாரகாலத்திற்குள் வன்னியில் புலிகளின் பல முறியடிப்புத் தாக்குதலில் பல டசின் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கில் காயமடைந்துள்ளனர். குறிப்பாகக் கடந்த ஆறாம் திகதி பனிச்சங்குளம், கிழவன்குளம், முற்கொம்பன் பகுதியிலும் 09ம், 11ம், 12ம் திகதிகளில் கோணாவிலிலும், 10ம், 12ம் திகதிகளில் செம்மன்குன்றிலும் சிறிலங்காப் படைத்தரப்புச் சந்தித்த இழப்புக்களை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட முடியும். இத்தகைய இழப்புக்களைச் சிறிலங்காப் படைத்தரப்பால் எவ்வளவு காலத்திற்கு மூடி மறைத்துவிட முடியும்? இழப்புக்களை எவ்வளவு காலத்திற்குத் தாங்கிக்கொள்ள முடியும்.

செய்தித் தணிக்கை மூலம் இது மறைக்கப்பட்டாலும், எதிர்க்கட்சியினர் வெளியிடும் தகவல்கள் மூலமும், அரசாங்கம் விடும் தப்பியோடிய இராணுவத்தினருக்கான பொது மன்னிப்பு அறிவித்தல்கள் மற்றும், தப்பியோடியோர் மீதான நடவடிக்கை தொடர்பான தகவல்களும் சிறிலங்கா இராணுவம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை வெளிப்படுத்தும் குறிகாட்டிகளாகக் கொள்ளத்தக்கவையாகும். இத்தகையதொரு நிலையில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் ஆசியுடன் மக்களுக்கும், இலங்கைக்கும் அழிவைக் கொடுக்க முடியுமே ஒழிய வெற்றியையோ அமைதியையோ தேடிக்கொடுக்க முடியாது.

- ஜெயராஜ் -


Comments