பொதுத்தேர்தல் நடக்குமா? அல்லது சர்வஜன வாக்கெடுப்பா?

யுத்தக் களமுனையில் முன்னகர்வுத் தீர்மானங்களையும், அதையொட்டிய நடவடிக்கைகளையும் வேக வேகமாக முன்னெடுத்து வரும் அரசுத் தரப்புக்கு, அரசியல் கள முனையில் அடுத்த நடவடிக்கை என்ன வென்பதைத் தீர்மானிப்பதிலும், அதைச் செயற்படுத்துவதிலும் மட்டும் பெரும் தடுமாற்றம் நீடிப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

பெருமளவு நிதியையும் நாட்டின் தேசிய வளத்தையும் தனது போர்வெறித் தீவிரத் திட்டத்துக்காகக் கொட்டிக்கொடுத்து வீணடித்து வரும் இந்த அரசு, அதனால் பெரும் பொருளாதார நெருக்கடி நிலையைத் தேசத்துக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.
போதாக்குறைக்கு தீர்க்கதரிசனமற்ற திட்டச் செயற்பாடுகள், ஊழல்கள், மோசடிகள், வீண் விரயங்கள், தவறான ஆட்சி முறை நடவடிக்கைகள் மற்றும் சர்வதேசப் பொருளாதாரப் பின்னடைவு நிலைகள் போன்றவையும் நாட்டின் பொருளாதாரத்தைப் பெரும் அதலபாதாளத்துக்கு வீழத்தி நிற்கின்றன.

தொடரும் கொடூர யுத்தம் நாட்டின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிப் பாதைகளைத் தடுத்துவிட, பெரும் பொருளாதார நெருக்கடி நிலைக்குள் மீள முடியாமல் இலங்கைத் தீவு ஆழ்ந்துபோகும் இக்கட்டு நெருங்கி வருகின்றது.

நாட்டின் வடக்கு, கிழக்கு, தெற்குக் கரையோரங்களை நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆழிப்பேரலைகள் தாக்கிப் பேரனர்த்தத்தை ஏற்படுத்தியமை போல -
இலங்கையின் வாழ்வியல் இருப்பையே சின்னாபின்னமாக்கக் கூடிய ஆபத்தை ஏற்படுத்தும் பொருளாதாரப் பேரலை (‘சுனாமி’) எச்சமயத்திலும் தேசத்தைத் தாக்கலாம் என்று இப்போது அஞ்சப்படுகின்றது.

இந்த யதார்த்தப் புறநிலையும், ஆபத்து ஏதுநிலையும் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது ஆலோசகர்களுக்கும் நன்கு தெரிந்த - புரிந்த - விடயமே.
தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் வரையாகும். அதேவேளை, ஜனாதிபதியின் தற்போதைய பதவிக்காலம், 2012 நவம்பர் வரையாகும்.
முற்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாயின் கூட, அதற்கும் 2009 நவம்பர் வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்திருக்க வேண்டும். ஒரு ஜனாதிபதி தமது முதலாவது பதவிக் காலத்தின் இறுதியில் முற்கூட்டியே தேர்தலை நடத்துவதாயின் அதற்கு அவர் தமது முதலாவது பதவிக் காலத்தில் நான்கு ஆண்டுகளையாவது பூர்த்தி செய்திருக்கவேண்டும் என்பதே சட்ட விதி.

ஆகவே, ஜனாதிபதித் தேர்தலை இப்போதைக்கு அவர் நடத்த முடியாது. அதற்கு அவர் இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டும்.
தற்போது சீர்கெட்டுவரும் நாட்டின் பொருளாதாரப் பின்னடைவு, இனிமேல் எந்நேரத்திலும் பொருளாதாரப் பேரலையாக நாட்டைத் தாக்கலாம் என்ற நிலைமை. அத்தகைய சூழல் ஏற்பட்டால் அதற்குப் பின்னர் மக்களிடம் முகம் கொடுப்பதோ செல்வாக்கைப் பெறுவதோ இந்த அரசுக்குச் சாத்தியமற்றது என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகப் புரிந்த விடயமே.

எனவே, அத்தகைய‘பொருளாதார சுனாமி’ தாக்க முன்னர் -
இப்போது யுத்த வெற்றி அறிவிப்புகளால் தென்னிலங்கையில் தமது அரசுக்குக் கிளர்ந்திருக்கும் செல்வாக்கு மற்றும் ஆதரவை வசமாகப் பயன்படுத்தி -
தமது அரசியல் எதிர்காலத்தையும், அதிகாரச் செல்வாக்கையும் எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது என்ற முனைப்பில் அரசுத் தலைவர் இருக்கின்றார் என்று கூறப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலை நடத்த ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்பதால் -
அதற்கு முன்னர் இப்போதே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, தமது அரசின் பதவிக்காலத்தை அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தொடர்வதை இப்போதே உறுதிப்படுத்திக் கொள்வது குறித்து அரசுத் தலைவர் ஆராய்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.
ஆனால், அதிலும் அவருக்கு சில சிக்கல்கள் உள்ளன.

பொதுத்தேர்தல் அறிவிப்புக்கும் வாக்களிப்புத் தினத்துக்கும் இடையில் யுத்தக் களமுனையில் அரசுத் தரப்புக்குப் பின்னடைவுகள், களநிலை மாற்றங்கள் போன்றன ஏற்பட்டுவிட்டால் அது தேர்தலில் அரசுக்குப் பலத்த அடியாகி விடலாம் என்ற அச்சம் அரசுப் பக்கம் உள்ளது.
அத்தோடு, பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவிலிருந்து அரசுப் பக்கம் தாவி, அமைச்சுப் பதவிகளைப் பரிசாகப் பெற்றுக் கொண்டுள்ள 25 எம்.பிக்களும் இப்போது - முற்கூட்டியே - நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். அப்படித் தேர்தல் முற்கூட்டியே நடந்தால் தங்களின் அரசியல் எதிர்காலம் அதோ கதியாகிவிடும் என்ற பயம் அவர்களுக்கு.

அதனால், பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தாமல், தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெற்றால் என்ன என்ற திட்டமும் அரசுத் தலைமையினால் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

1977 இல் வெளியான தமது அரசின் பதவிக் காலத்தை இப்படி ஒரு சர்வஜன வாக்கெடுப்பு மூலமே 1989 வரை ஜனாதிபதி ஜெயவர்த்தனா நீடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எது, எப்படியென்றாலும் யுத்தக் களமுனையில் இனி அரங்கேறப்போகும் நிகழ்வுகளின் போக்கே இத்தகைய தேர்தல் அபத்தங்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் என்பது மட்டும் உறுதி.


Comments