முதலாவது தீர்மானம்கூட நிறைவேறவில்லை!: ராமதாஸ்

"இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைத் தீர்க்க, சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றிய முதலாவது தீர்மானம்கூட இன்னமும் நிறைவேறவில்லை" என்று வருத்தம் தெரிவித்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

கரூரில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:

"ஈழத் தமிழர்களைக் காக்க இது சரியான தருணம். இதைத் தவறவிட்டால், வேறு வாய்ப்பு வராது. ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானம்கூட இது வரை நிறைவேற்றப்படவில்லை.

வங்கதேசப் போருக்கும் பிகார் வெள்ளத்துக்கும் பல கோடி ரூபாய் நிவாரணத்தொகை கொடுத்த இதே முதல்வர் கருணாநிதி, ஈழத் தமிழர்கள் பிரச்னையில் முதல் நபராக ரூ. 20 கோடி வரை அறிவித்திருக்க வேண்டாமா?

போரை நிறுத்துங்கள் என மத்திய அரசு இதுவரை இலங்கை அரசிடம் கூறவில்லை. பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண வேண்டும் என்றுதான் கூறுகிறது. "இலங்கையில் போரை நிறுத்துங்கள்' என மத்திய அரசு கூற முதல்வர் கருணாநிதி வலியுறுத்த வேண்டும்.

அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் படுகொலைகள் நிகழ்ந்தபோது மேற்கு வங்க முதலமைச்சராக இருந்த சித்தார்த்த சங்கர் ரே, வங்க மக்களுக்கு உதவ உறுதியான முடிவெடுத்தார். ""மத்திய அரசு ராணுவத்தை அனுப்பாவிட்டால் மேற்கு வங்கப் போலீஸôர் கிழக்கு பாகிஸ்தானுக்குச் செல்வார்கள்'' என்று எச்சரித்தார்.

இதையடுத்தே, ராணுவத்தை அனுப்ப அன்றைய பிரதமர் இந்திரா காந்தி முடிவெடுத்தார்; வங்கதேசம் பிறந்தது.

இத்தகைய துணிச்சலான முடிவைத் தமிழக முதல்வரும் எடுக்க வேண்டிய தருணமிது.

ஈழத் தமிழர்களின் உயிர் பறிக்கப்படுவதைக் கண்டும் காணாமலும் எல்லைகளை, அதிகாரங்களைக் காரணம் கூறிக்கொண்டும் இனியும் இருக்க வேண்டாம்.

வெள்ளையர்கள் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்காவில் இப்போது கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஓபாமா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், சிங்களர்களுக்கே இலங்கை சொந்தம் எனக் கடந்த 50 ஆண்டுகளாகக் கூறிவருவதாலேயே அது சிக்கலாக மாறியிருக்கிறது.

இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் 22 பேர் தமிழகம் வரும்போது, அவர்களைத் தமிழக முதல்வர் கருணாநிதி சந்திக்க வேண்டும். பிரதமர் மன்மோகன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை அவர்கள் சந்திக்கவும் முதல்வர் கருணாநிதி ஏற்பாடு செய்ய வேண்டும்.

இம் மாதம் 10-ம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், இலங்கை அதிபர் ராஜபக்ஷ நடத்தும் தமிழினப் படுகொலையைக் கண்டித்தும், போர்நிறுத்தத்தை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தீப்பந்த ஆர்ப்பாட்டம்: இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் ராஜபக்ஷவைக் கண்டித்து, தீவுத்திடலில் தீப்பந்தத்துடன் பாமக இளைஞர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் விரைவில் நடத்தப்படும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன், ஈழத் தமிழர்கள் பிரச்னைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் பாமக நிச்சயம் பங்கேற்கும்.

நிலக்கரி விவகாரம்: தரமற்ற நிலக்கரியை அனல் மின் நிலையங்களில் பயன்படுத்துவதால், மின் உற்பத்தி குறைந்துபோனது என பல முறை புகார் கூறப்பட்டது.

அப்போது, மத்திய அரசிடம் இருந்து நிலக்கரி பெறுவதாக முதல்வர் தெரிவித்திருந்தார். ஆனால், அண்மையில் 5 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்து தருவதற்கான ஒப்பந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. முதல்வர் கூறியது சரியா, ஒப்பந்த விளம்பரம் சரியா?'' என்றார் ராமதாஸ்.


Comments