வல்லூறுகளைப் போல வட்டமிட்டு குண்டுவீசும் போர் விமானங்கள், இன்னொரு பக்கம் எறிகணை, ஏவுகணை வீச்சு என்று எக்கச்சக்கப் பீதியில் கிடக்கிறது ஈழத்தின் வன்னிப்பகுதி. அங்கே என்ன நடக்கிறது என்பதே தெரியாத அளவுக்குச் சூழ்ந்து கிடக்கிறது போர்மேகம். இந்த நிலையில், இருட்டைக்கிழிக்கும் ஒரு வெளிச்சக் கீற்றாய், வன்னிப் பகுதியில் உண்மை நிலவரத்தைக் கண்டறிய, தன் உயிரையும் துச்சமாக மதித்து அங்கு சென்று திரும்பியிருக்கிறார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராஜா ஜெயானந்த மூர்த்தி. கொழும்பு திரும்பியுள்ள அவரிடம் நாம் தொலைபேசி மூலம் பேசினோம்...
கடும்போர் நடந்துவரும் வன்னிப்பகுதியில் குறிப்பாக கிளிநொச்சியில் என்ன மாதிரியான சூழ்நிலை நிலவுகிறது?
``உயிரைப் பணயம் வைத்து வன்னி சென்று, அங்கே பதினொரு நாட்கள் தங்கியிருந்து இரண்டு நாட்களுக்கு முன்புதான் கொழும்பு வந்தேன். நிலைமை அங்கே படுமோசமாக இருக்கிறது. மன்னார் தொடங்கி, கிளிநொச்சி வரை மக்கள் அங்கே நாளுக்கு நாள் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். புதுக்குடியிருப்பு, விஸ்வமடு, தம்மாபுரம், கண்டாவளை என பல கிராமங்களின் அருகே தோட்டக்காணிகளிலும், கழனிக்காடுகளிலும் மக்கள் தங்கியிருக்கிறார்கள்.
பலர் குடிசையோ, கூடாரமோ கூட அமைக்க வசதியில்லாமல் மரங்களின் அடியில் துணிகளால் பந்தல் அமைத்து அதன்கீழ் தங்கியுள்ளனர். நான் தங்கியிருந்த நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாம்புக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஓயாத குண்டுவீச்சு மற்றும் மழை காரணமாக பாம்புகள் இடம்பெயர்ந்து மக்களைக் காவு வாங்கி வருகின்றன. ஒரு வயதுக் குழந்தை முதல் கர்ப்பிணிகள் வரை பதினெட்டுப் பேர் இதுவரை பாம்புக்கடிக்கு பலியாகி இருக்கிறார்கள்.
இறந்தவர்களுக்காக அழக்கூட அங்கே நேரமில்லை. அடுத்த குண்டுவீச்சுக்கு அஞ்சி, அவசர கதியில் உடல்களைப் புதைத்துவிட்டு ஓடுகிறார்கள். நாளை உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கையே மக்களிடம் இல்லை. பதுங்கு குழியே அவர்களின் வாழ்விடமாகிக் கொண்டிருக்கிறது.''
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரர் பசில் ராஜபக்ஷே இந்தியப் பிரதமரைச் சந்தித்தபோது, `மக்கள் மீது குண்டு வீசவில்லை. அவர்களுக்கு வேண்டிய வசதிகளை இலங்கை அரசு செய்கிறது' என்றாரே?
``இந்தியாவை மட்டுமல்ல, உலக சமுதாயத்தையே நம்பவைத்து ஏமாற்றும் வேலை இது. நான் அங்கே இருந்தவரை விமானக் குண்டுவீச்சுகள் அனைத்தும் மக்கள் மத்தியில்தான் நடந்தன. இருபது பொதுமக்கள் இறந்தே போனார்கள். 38 பேர் படுகாயமடைந்தார்கள். அவர்களுக்கான சிகிச்சை வசதிகூட அங்கே இல்லை. கிளிநொச்சி நகர வைத்தியசாலையிலுள்ள முக்கிய மருத்துவக் கருவிகள் விஸ்வமடு, தம்மாபுரம் பகுதி பாடசாலைகளுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளன. அங்கும் மக்கள் போக முடியாத நிலைதான் உள்ளது.
காயமடைந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களை வவுனியா அல்லது கொழும்புக்குக் கொண்டுசெல்ல ராணுவம் தடை விதித்துள்ளது. அந்தப் பாதையில் தொடர் எறிகணைத் தாக்குதல் நடப்பதால் யாரும் போகவும் முடியாது. தவிரவும், அப்பகுதி முழுவதும் சிங்கள ராணுவத்தின் ஆழஊடுருவித் தாக்கும் படையினரின் கிளேமோர் (கண்ணிவெடி) தாக்குதல்கள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. அதோடு காயமடைந்தவர்களை எடுத்துச் செல்ல காவு வண்டிகளுக்கும் (ஆம்புலன்ஸ்) அங்கே தட்டுப்பாடு. அவற்றுக்கு எரிபொருள் தர ராணுவம் தடை போட்டிருக்கிறது. இந்தக் கொடுமைகள் எல்லாவற்றையும் வன்னியில் நான் கண்கூடாகப் பார்த்தேன்.
வன்னி பெருநிலப்பரப்பில் ஆறுலட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூன்று லட்சத்து பத்தாயிரம் பேர் இடம்பெயர்ந்து இன்று அகதிகளாக நிற்கிறார்கள். அவர்களின் விவசாய நிலம் அழிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்த வேலைக்கும் போக முடியாத நிலை. ஒரு வேளை உணவுக்கே அல்லாடும் நிலைதான் உள்ளது.''
இலங்கை அரசு நிவாரண உதவி தருவதாகச் சொல்லப்படுவது....?
``முழுப் பொய்! அங்கே பட்டினிக் கொடுமைகளைக் கண்கூடாகப் பார்த்தேன். தற்போது தாய்த் தமிழகத்திலிருந்து வரும் நிவாரணப் பொருள்கள் எம் மக்களுக்கு முழுமையாகச் சென்று சேருமா என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.''
ராணுவக் குண்டுவீச்சை நேரடியாகக் பார்த்தீர்களா?
``ஆம்! விஸ்வமடு, புதுக்குடியிருப்புப் பகுதிகளில் தொடர்ந்து விமானத் தாக்குதல்கள் நடப்பதைப் பார்த்தேன். கடந்த 31-ம்தேதி நான் கிளிநொச்சியில் இருந்தபோது ஜெயந்திநகரில் குண்டுவீச்சு நடந்து ஆறுவீடுகள் தரைமட்டமாயின. பத்து வீடுகளுக்கும் மேல் சேதமடைந்தன. பள்ளி மாணவன் ஒருவர் பலியானார். பலருக்குக் காயம். அதேநாள் புதுக்குடியிருப்பு வள்ளிவனம் பகுதியில் செல்வராஜா என்ற மாணவர் விமானக் குண்டுவீச்சுக்குப் பலியானார். பெரும்பாலான மக்கள் பதுங்கு குழிகளில் இருந்ததால் உயிர்தப்பினார்கள். அதுபோல இரண்டு பாடசாலை மாணவர்கள் அந்தநேரம் பதுங்கு குழியில் இருந்ததால் உயிர் தப்பினார்கள். குண்டுவீச்சுகளில் கால்நடைகள்தான் நிறைய பலியாகின்றன. அவற்றுக்குப் பதுங்கு குழியில் பதுங்கத் தெரியாதே?''
உண்மை நிலவரம் தெரிந்துவிடும் என்பதால் போர் நடக்கும் வன்னிப்பகுதியில் ஈ, காக்கையைக் கூட இலங்கை ராணுவம் அனுமதிப்பதில்லை. நீங்கள் மட்டும் எப்படிச் சென்றீர்கள்?
``மிகுந்த சிரமமெடுத்து உயிரைப் பணயம் வைத்துதான் சென்றேன். வன்னிப் பகுதியின் நுழைவாயிலில் உள்ள சோதனைச் சாவடியில் அனுமதி கேட்டபோது, நான் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் நீண்டநேர யோசனை, விவாதத்திற்குப் பின் அனுமதி தந்தார்கள். வவுனியாவில் இருந்து கண்டி-யாழ் சாலையான ஏ-9 வழியாகத்தான் கிளிநொச்சிக்குச் செல்ல முடியும். அந்தப் பாதை முழுவதும் எப்போதும் எறிகணை வீச்சு நடந்து கொண்டே இருக்கும். பாதை வேறு சேதாரம். வழியில் நான் எறிகணை வீச்சில் சிக்கி இறந்துவிடுவேன் என்று நினைத்தே ஒருவேளை அவர்கள் அனுமதி தந்திருக்கலாம்.
நான் ஏ-9 சாலை வழியாகச் செல்லாமல் இன்னொரு பாதையைத் தேர்ந்தெடுத்துச் சென்றேன். அது சிங்கள ராணுவத்தின் ஆழஊடுருவும் படைப் பிரிவு சுற்றித்திரியும் இடம். அவர்கள் சில காலத்துக்கு முன் கிளேமோர் (கண்ணிவெடி) தாக்குதல்கள் மூலம் தமிழ் எம்.பி.க்கள் சிலரை காவு வாங்கியிருக்கிறார்கள். போதாக்குறைக்கு ஒட்டுப்படை அணிகளும் (ராணுவத்துக்கு ஆதரவான தமிழ்க் குழுக்களும்) அங்கே சுற்றித் திரிகின்றன. இந்த ஆபத்துகள் இருந்தாலும், எம் மக்களின் அவலத்தை வெளியுலகிற்குக் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்பில் துணிந்து பயணித்தேன். நான் கடந்து சென்ற இரண்டு இடங்களில் கிளேமோர் தாக்குதல் நடந்ததாக அறிந்தேன். ஒரு வழியாகப் புலிகள் பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்து விட்டுத் திரும்பியிருக்கிறேன்.''
புலிகளைச் சந்தித்தீர்களா? அவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள்?
``உண்மையைச் சொல்வதென்றால் புலிகள் இன்னும் முழுமையான போரையே தொடங்கவில்லை. கிளிநொச்சியை நோக்கி நகரும் ராணுவத்தை அவர்கள் வழிமறித்துத் தாக்குகிறார்கள். அவ்வளவுதான். புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ராணுவம் திக்குமுக்காடுகிறது. ராணுவத் தரப்பில் பலர் பலியாகி இருக்கிறார்கள். ராணுவத்தின், வன்னி பெருநிலப்பரப்பு நோக்கிய நகர்வு முறியடிக்கப்பட்டு வருகிறது. `இழந்த பகுதிகள் மீண்டும் புலிகள் வசம் வரும். அங்கே அமைதியாக வாழ்வோம்' என்ற நம்பிக்கை புலிகளுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கும் பாரிய அளவில் இருக்கிறது. அப்படி ஒரு முரட்டு வேகத்தில் புலிகளின் படை இருப்பதை நான் கவனித்தேன்.''
`நாச்சிக்குடாவை சுற்றி வளைத்துவிட்டோம். அக்கராயனைப் பிடித்துவிட்டோம். வன்னிப் பகுதியில் கால் சதவிகிதம் மட்டுமே புலிகளிடம் இருக்கிறது. விரைவில் பிரபாகரனையும் பிடித்து விடுவோம்' என்று அதிபர் ராஜபக்ஷே கூறுகிறாரே?
```நாற்பத்தெட்டு மணிநேரத்தில் கிளிநொச்சியைப் பிடித்துவிடுவோம்' என்றார்கள். அது ஒரு வாரமாகி, இப்போது மாதக்கணக்காகி விட்டது. சிங்கள ராணுவத்தின் நிலைமையை உணராத முட்டாளாகவே ராஜபக்ஷே இருக்கிறார். பகல் கனவு கண்டுகொண்டிருக்கும் அவர் கடைசிவரை இப்படிக் கூறிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
புலிகள் சில பகுதிகளை விட்டு நகர்ந்திருப்பது உண்மைதான். ஆனால், பின்வாங்கி ஓடவில்லை. கிளிநொச்சிக்கு மேற்காக, அக்கராயன் குளத்திற்கு சற்று அப்பால் புலிகள் விலகி நிற்கிறார்கள். பாரிய எதிர்ப்பைக் காட்டவில்லை. அதுபோல வன்னேரிக்குளத்தைப் பிடித்துவிட்டதாக ராணுவம் கதையளக்கிறது. அங்கே சில நூறு மீட்டர் தூரம் ராணுவம் முன்னேறியிருப்பதே உண்மை. புலிகள் போருக்குத் தேவையில்லாத இடங்களை இனம்கண்டு அந்தப் பகுதிகளிலிருந்து நகர்ந்திருக்கிறார்கள். போருக்கான பகுதிகள் அவர்கள் வசம்தான் இருக்கின்றன. ராணுவத்தால் அங்கே நுழைய முடியவில்லை.
கிளிநொச்சிக்கு மேற்கே பல மைல் தூரத்தில் ராணுவம் நிற்கிறது. அங்குதான் கடும்போர் நடக்கிறது. அங்கே எல்லைமீறி உள்ளே நுழைய முயன்றால் கடும் விளைவு ஏற்படும் என்பது ராணுவத்துக்கும் நன்றாகத் தெரியும். இதனால் விமானப் படையை மட்டுமே பயன்படுத்தித் தாக்குகிறார்கள். இப்போது முறியடிப்புப் போர் நடத்தி வரும் புலிகள் முழுதாகப் போரில் இறங்கினால் ராணுவத்தின் நிலைமை படுமோசமாகி விடும். சர்வதேச சமுதாயத்தை ஏமாற்ற, ராணுவம் முன்னேறுவதாக ராஜபக்ஷே சும்மா கதையளந்து வருகிறார்.''
வன்னிப்பகுதிக்குச் சென்று திரும்பிய உங்களுக்கு ராணுவத் தரப்பிடமிருந்து மிரட்டல் வந்ததா?
``இதுவரை இல்லை. ஆனால் அரசுக்கும், ராணுவத்திற்கும் நிச்சயம் என்மேல் கோபம் இருக்கும். வன்னிப்பகுதி போர்நிலவரம் வெளியுலகிற்குத் தெரியக்கூடாது என்பதற்காக அங்கே தொலைத்தொடர்பு வசதிகளை ராஜபக்ஷே துண்டித்து வைத்துள்ளார். தொண்டுநிறுவனங்களை அங்கிருந்து வெளியேற்றியிருக்கிறார். இதையும் மீறி எம் மக்கள் படும் அல்லல்களை நான் நேரில் சென்று பார்த்து அம்பலப்படுத்தியிருப்பதால் அரசும், ராணுவமும் என் மீது கோபத்தில்தான் இருக்கும். இன்று நான் உயிரோடு இருக்கிறேன். நாளை உயிரோடு இருப்பேனா? தெரியாது.''
இலங்கை மந்திரியான டக்ளஸ் தேவானந்தா ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், `தமிழ்த் திரைப்படங்களைத் தடை செய்தவர் பிரபாகரன். அவருக்குப் போய் தமிழ் நடிகர்கள் ஆதரவு தருகிறார்களே? இந்திய தலையீட்டை ஆதரிக்காதவர் பிரபாகரன். தற்போது வன்னிப் பகுதி தமிழ் மக்களில் கால்பகுதி பேர்தான் புலிகள் வசமுள்ளனர். அவர்களை புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள்' என்றெல்லாம் கூறியிருக்கிறாரே?
``இந்த டக்ளஸ் தேவானந்தா யார் என்பது உலகத் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் ராஜ பக்ஷேவின் கைக்கூலி. விலைபோன இனத்துரோகி. தாய்த் தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஓர் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதை ராஜபக்ஷே சீர்குலைக்கப் பார்க்கிறார். அதற்கு துரோகி டக்ளஸ் தேவானந்தா துணை நிற்கிறார். அப்படியொரு இனத் துரோக வேலையை டக்ளஸ் செய்யாவிட்டால் அவர் உயிரோடு இருக்க முடியாது. அவரைக் கொன்று விட்டு புலிகள்மேல் ராஜபக்ஷே பழியைப் போட்டு விடுவார். அதனால் கைக்கூலி வேலையை டக்ளஸ் செய்தே ஆக வேண்டிய கட்டாயம். அவரது அறிக்கையை தாய்த் தமிழக உறவுகள் ஏற்க மாட்டார்கள்.
அடுத்ததாக, தமிழ்த் திரைப்படங்களுக்கு புலிகள் எப்போதுமே எதிரானவர்கள் இல்லை. இங்கு இன்றளவும் தமிழ்த் திரைப்படங்கள் மக்களால் பார்க்கப்பட்டு வருகின்றன. ஆபாசமான சில காட்சிகள் மட்டும் குறைக்கப்படுகின்றன அவ்வளவுதான். அது நடிகர்களுக்கும் தெரியும். இதற்கு அடுத்தபடியாக பிரபாகரன் எப்போதும் இந்திய தலையீட்டை எதிர்த்தவரல்ல. சுயநிர்ணய உரிமை என்ற எம் மக்களின் நிலைப்பாட்டிற்கேற்ப பேச்சுவார்த்தையை ஆதரித்து வரவேற்றவர் அவர்.
அடுத்தாக புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வல்லுறவு, போதைப் பழக்கம் எதுவுமில்லை. நள்ளிரவு நேரத்தில் கூட ஒரு பெண் அங்கே தன்னந்தனியாக நடமாட முடியும். இதற்கு மாறாக, ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தினந்தோறும் ஆள்கடத்தல், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், டக்ளசின் குற்றச்சாட்டை ஒரு மட்ட மான இனத்துரோக செயல்பாடு என்றுதான் கூற வேண்டும்.'' ஸீ
பா. ஏகலைவன்
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர், Nov 16, 2008
Comments