உதவிகள் போயச்சேருமா?

அன்புமிக்க கலைஞர் அவர்களுக்கு, வணக்கம். ஒரு கழுகின் கோரக்கால்களில் சிக்கியது போல் இன்றைக்கு ஈழமக்கள் சிங்கள ராணுவத்தின் நெருக்குதலில் சிக்கித் தவிக்கிறார்கள். `போராளிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வாருங்கள்' என்று அந்த ராணுவம் அழைக்கின்றது. அந்த அழைப்பை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

ஏனெனில், ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லும் எந்த தமிழ் சகோதரியின் மானத்திற்கும் பாதுகாப்பில்லை. அங்கே செல்கின்ற இளம் சிறுவர்களை கருங்காலி கருணா கும்பல் கடத்திச் செல்கிறது. எனவே, போராளிகளைப் பின் தொடர்ந்தால் மரணம் உறுதி என்று தெரிந்தும் அவர்களையே அவர்கள் பின் தொடருகிறார்கள். இந்த நிலையில், தமிழகம் அவர்களுக்கு பழங்கஞ்சியைக் கொடுத்தாலும் பஞ்சாமிர்தமாக ஏற்றுக் கொள்வார்கள். எனவே, அந்த மக்களுக்காக தாங்கள் நிதி திரட்டுவதை இதயம் படைத்த அனைவருமே வரவேற்கிறார்கள். தாய் வீட்டுச் சீதனம் வரப்போகிறது என்று ஈழமக்களும் பெருமை கொள்கிறார்கள்.

ஆனால், நாம் தரும் உதவி நேரடியாக அவர்களுடைய கரங்களை எட்டுமா? அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டாமா? ஏனெனில், நடைமுறை அனுபவங்கள் கசப்பானவை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தைத் தாக்கிய சுனாமி இலங்கையில் ஈழப் பிரதேசத்தைத்தான் கொடுமையாகத் தாக்கியது. எல்லாம் இழந்து விட்ட ஈழமக்களுக்காக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு இன்ன பிற நாடுகள் கப்பல் கப்பல்களாக நிவாரண உதவிகளை அனுப்பின. அந்த நாடுகளின் தன்னார்வ நிறுவனங்கள் நேரடியாக உதவிகளை வழங்க ஆசைப்பட்டன.

ஆனால், அதற்கு சிங்கள அரசு மறுத்து விட்டது. `அனுப்புங்கள். நாங்களே அவர்களுக்கு அனுப்பி வைப்போம்' என்றார் சிங்கள அதிபர் ராஜபட்சே. உலகம் நம்பியது. ஆனால் ஒரே ஒரு பொட்டலம் கூட ஈழ மக்களுக்குக் கிடைக்கவில்லை. கொழும்பு - யாழ்ப்பாணச் சாலையையும் அடைத்து விட்டார்கள். காரணம், யாழ்ப்பாண மக்களைப் பட்டினி போட்டே பணிய வைப்பதுதான் அவர்களுடைய குறிக்கோள்.

`எங்கள் உணவுப் பொருள் உதவிகள் என்ன ஆயிற்று?' என்று உலக நாடுகள் உலுக்கின. அவற்றை ஈழத்திற்கு அனுப்பக் கூடாது என்று சிங்கள இனவாதக் கட்சிகள் சீற்றம் கொண்டன. `அவர்களுடைய தயவில் நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற என்னால் எதுவும் செய்ய முடியவில்லை' என்று ராஜபட்சே பகிரங்கமாகச் சொன்னார்.

கலைஞருக்கு ஒரு நிகழ்வை நினைவுபடுத்துகிறோம். ஈழமக்கள் படும் துயரத்தை அறிந்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றீர்கள்.

அதனைத் தொடர்ந்து நமது பிரதமர் தங்களுக்குக் கடிதம் எழுதினார். இலங்கை வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, 5,200 மெட்ரிக் டன் அரிசியும் 1500 மெட்ரிக் டன் சர்க்கரையும், 300 மெட்ரிக் டன் பால் பவுடரும் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார். நெஞ்சம் பூரித்துப் போனோம்.

இந்தியா அனுப்பிய இந்த மாபெரும் உதவி ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இறக்கப்பட்டது. இந்தியா அனுப்பிய உணவு வந்து சேர்ந்து விட்டது என்று யாழ் மக்கள் அடுப்பு மூட்டத் தயாரானார்கள். இறக்கப்பட்ட உணவுப் பொருட்கள் அவர்களுடைய நகரங்கள் வழியாக, அவர்களுடைய வீதிகள் வழியாக, அவர்கள் வீடுகள் வழியாகத்தான் ராணுவ வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் அவர்களுடைய எல்லை கடந்து சிங்கள ராணுவ முகாம்களுக்குச் சென்று சேர்ந்தன.

யாழில் ஈழப் போராளிகளின் முற்றுகையில் ஒரு லட்சம் சிங்களத் துருப்புக்கள் சிக்கிக் கொண்டன. பசி, பட்டினி என்ற நிலைதான். அவர்களுக்கு உயிர்ப்பிச்சை அளிக்க இந்தியா அனுப்பிய உணவுப் பொருள்கள் உதவின. இந்தியா அனுப்பிய உதவியில் 80 சதவிகிதம் ராணுவத்திற்கும் 20 சதவிகிதம் யாழ் மக்களுக்கும் பயன்பட்டதாக சிங்கள அரசே தெரிவித்தது. அந்த இருபது சதவிகிதமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வன்னிப் பரப்பில் போர் உக்கிரம் பெற்றிருக்கிறது. சிறகுகளை இழந்த பறவைகளைப் போல் தவிக்கும் ஈழமக்களுக்கு உதவ உலகத் தன்னார்வ நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. அங்கேயும் நெடுஞ்சாலை அடைக்கப்பட்டு விட்டதால் அவர்களால் செல்ல முடியவில்லை. செல்ல முடிந்தாலும், அவர்களை சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. இருந்தவர்களையும் வெளியேற்றி விட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அனுப்பும் உதவிகள் கிளிநொச்சியைக் கூட எட்டிப் பார்த்ததில்லை. உணவை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி ஈழமக்களை ராஜபட்சே அரசு பணிய வைக்க முயற்சிக்கிறது. தோற்றுப் போகிறார்கள்.

கலைஞர் அவர்களே, இப்போது நாம் சொல்லும் தகவல்கள் உண்மையா? பொய்யா? என்று சிதம்பரங்கள் வரும்போது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர் ஆண்டிற்கு ஒரு முறை கொழும்பு செல்வார். அதிகார பீடத்தோடு அளவளாவுவார். அப்படித்தான் சென்ற ஆண்டும் சென்றார்.

அப்போது பருப்பு ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருந்தது. அந்தத் தடையை நீக்க வேண்டும் என்று ராஜபட்சே அரசு கேட்டுக் கொண்டது.

அடப்பாவிகளா! எங்கள் ரத்த உறவுகளை இங்கே பட்டினி போட்டு விட்டு பாயாசம் சாப்பிட பருப்பா கேட்கிறீர்கள்? என்று சிதம்பரம் கேட்டிருப்பார் என்று நாம் எண்ணினால், வரலாற்றுப் பிழை செய்தவர்களாகி விடுவோம்.

சிதம்பரம் டெல்லி சென்றார். மத்திய அமைச்சரவை கூடியது. பருப்பு ஏற்றுமதிக்கு இருந்த தடை நீங்கியது.

கலைஞர் அவர்களே! உடனடியாகப் போர் நிறுத்தம் என்று அனைத்துக் கட்சிக் கூட்ட கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று டெல்லித் தலைமையிடம் வலிமையாக வாதாடியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தாலே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான முழக்கங்கள்தான். ஆகவே இனி தி.மு.க. உறவு வேண்டாம் என்றும் வாதிட்டிருக்கிறார்கள். இந்தத் தகவல் கண்டிப்பாகத் தங்களை எட்டியிருக்கும். அவர்களை சிங்கள அரசு விரைவில் கொழும்பிற்கு அழைத்து சிறப்புச் செய்யப்போகிறது.

இப்போதும் இலங்கைக்கு 800 டன் உணவும் மருந்தும் அனுப்பப் போவதாக பிரணாப் முகர்ஜி தங்களிடம் தெரிவித்தார். அந்த உதவியை யாருக்காக யார் மூலம் விநியோகிக்கப் போகிறார்கள்? இன்னல்படும் ஈழமக்களுக்கு நாமே நேரடியாக உதவி செய்வதை சிங்கள அரசு ஏற்றுக் கொள்ளுமா?

சிங்கள அதிபரே விநியோகத்திற்கு ஏற்பாடு செய்வார் என்று டெல்லிச் செய்தி கூறுகிறது. அதனைவிட வங்கக் கடலுக்கு நாமே வாரிக் கொடுத்து விடலாம்.

இல்லை இல்லை. செஞ்சிலுவைச் சங்கம் விநியோகிக்கும் என்று இன்னொரு செய்தி கூறுகிறது. தாங்கள் கொடுத்த எந்த உதவியும் ஈழ மக்களை எட்டவில்லை என்று அந்த அமைப்பு திரும்பத் திரும்பக் கூறுகிறது. நேசிக்கத் தெரிந்த அவர்களுக்கு ஈழமக்களின் நெஞ்சம் புரிகிறது.

இந்தியாவின் நேரடிக் கண்காணிப்பில் ஈழ மக்களுக்கு உதவி செய்ய ஏற்பாடு இல்லாது அனுப்பப்படும் எந்த உதவியும் சிங்கள ராணுவ முகாம்களுக்கே சென்று சேரும். இதுதான் இதுவரையுள்ள அனுபவம்.

By: சோலை
Courtesy: குமுதம் ரிப்போட்டர்- கார்த்திகை 9, 2008

Comments