ஈழம்: தேர் நகருமா?




ஈழப் பிரச்னையை முன் வைத்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்ற அனைத்து இயக்கங்களும் கலந்து கொண்டன.

ஈழப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தக் கூட்டம் அறைகூவல் விடுத்தது. அதற்கு மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும், குறிப்பிட்ட தேதிக்குள் செய்யப்படவில்லையென்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதன் எதிரொலி டெல்லி அதிகார வட்டத்திலும் கேட்டது. கொழும்பில் சிங்கள அரசும் பதற்றம் கொண்டது. வன்னிக் காடுகளில் வதைகின்ற மக்களுக்கு நம்பிக்கை ரேகையும் தெரிந்தது.

அதன் பின்னர் சென்னையில் நடந்த மனிதச் சங்கிலி ஈழமக்களுக்கு ஆதரவான எழுச்சியை ஏற்படுத்தியது. அந்த மனிதச் சங்கிலியில் கல்லூரி மாணவர்கள், எந்த இயக்கத்தையும் சாராத பொது மக்கள், இளைஞர்கள், பள்ளிச் சிறுவர்கள் என்று சமுதாயத்தின் பல்வேறு கண்ணிகளும் தம்மை இணைத்துக் கொண்டன.

மனிதச் சங்கிலியைப் பார்வையிட்ட கலைஞரைப் பார்த்து, மக்கள் ஆங்காங்கே எழுப்பிய ஒரே குரல் ``தாங்கள்தான் ஈழமக்களின் கடைசி நம்பிக்கை'' என்பதுதான்.

அனைத்துக் கட்சிக் கூட்ட செய்தி வந்ததுமே உலகத் தமிழர்கள் அனைவருமே நன்றிப் பெருக்கோடு முதல்வருக்கு வாழ்த்துச் சொன்னார்கள். காரணம், இனியாவது ஈழத்துச் செவ்வானம் சிவக்கும் என்று நம்பினார்கள்.

தமிழகம் கொந்தளிக்கும் போதெல்லாம் சிங்களச் சீமான்கள் டெல்லிக்கு ஓடி வருகிறார்கள். தமிழ் நெஞ்சங்களின் நெருப்புச் சங்கீதத்தை நிறுத்த வேண்டும் என்பதுதான் அவர்களுடைய குறிக்கோள்.

நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் பதவி விலகினாலே மைய அரசு ஆட்டம் காணும். எனவே குறிக்கப்பட்ட கெடு நெருங்க நெருங்க சிங்கள அரசுடன் பேச்சு வார்த்தை என்றனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிராணப் முகர்ஜி சிங்கள அதிபரின் தூதரைச் சந்தித்த பின்னர், தமிழகம் விரைந்தார். முதல்வரைச் சந்தித்தார். ஏதோ வரம் கொடுக்கும் தேவன் கரம் கொடுக்க வருகிறாரோ என்று நமது இதயங்கள் எதிர்பார்ப்பில் படபடத்தன.

போர் நிறுத்தம் பற்றிப் பேசினார்களா? பேசினார்கள். ``ஈழப் போர்க்களத்தில் நாமும் ஒரு தரப்பினர் என்றால் போர் நிறுத்தம் பற்றிப் பேசலாம். எனவே போர் வேண்டாம் என்று நாம் எப்படிக் கோர முடியும்'' என்று கலைஞரைச் சந்தித்த பின்னர் பிரணாப் முகர்ஜி நிருபர்களிடம் தெரிவித்தார் இது முதல்வருக்கும் ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும். எனவேதான் ``நாற்பதாண்டுப் போரை எப்படி நான்கு நாட்களில் முடிக்க முடியும்'' என்று முதல்வர் கேட்டார். அதே கருத்தினை நிருபர்களிடம் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். எனவே, போர் நிறுத்தம் பற்றிப் பேசவே இல்லை என்பது சரியாக இருக்காது. இல்லையெனில் இருவரும் ஒரே கருத்தைத் தெரிவித்திருக்க முடியாது.

போர் நிறுத்தம் பற்றி பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றதாக அறிகிறோம். போர் நிறுத்தம் என்றால், களத்தில் நிற்கும் இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். போரை நிறுத்து என்று சிங்கள அரசைக் கேட்பது ஒருகை ஓசை. வாதத்திற்காக அதனை சிங்கள அரசே ஏற்றுக் கொண்டாலும் விடுதலைப் புலிகள் போரை நிறுத்துவார்கள், மனித வெடிகுண்டுத் தாக்குதல்களை நிறுத்துவார்கள் என்பதற்கு யார் உத்தரவாதம் தருவது? இது ஒரு பிரச்னை.

விடுதலைப் புலிகளின் கேந்திரமான கிளிநொச்சியின் புறநகர்ப்பகுதி வரை சிங்கள ராணுவம் சென்றிருக்கிறது. இப்போது நடைபெறுவதுதான் இறுதிப்போர் என்பதனை இருதரப்பினரும் ஒப்புக் கொள்கின்றனர். எனவே, இந்த நிலையில் போர் நிறுத்தம் என்பதனை சிங்கள அரசு ஏற்கும் நிலையில் இல்லை. இது இன்னொரு பிரச்னை. எனவே, முடிவு தெரியாத சில புதிர்களை பிரணாப் முகர்ஜி போட்டுச் சென்றிருக்கிறார்.

விடுதலைப் புலிகளுக்காக நாம் பரிந்து பேசவில்லை. ஆனால் அவர்களோடு யுத்தம் என்ற பெயரால் ஈழமக்கள் மீதும் அவர்களுடைய குடியிருப்புக்கள் மீதும்தான் சிங்கள ராணுவ விமானங்கள் குண்டு போடுகின்றன. இப்போது அந்த ராணுவம் கிளிநொச்சி மருத்துவமனை மீதே குண்டுகளை வீசியிருக்கிறது. ஏற்கெனவே செஞ்சோலை குழந்தைகள் காப்பகம் மீது குண்டு போடவில்லையா?

அண்மையில் சென்னை வந்த இலங்கையின் அமெரிக்கத் தூதர் சொன்ன ஒரு கருத்தை மட்டுமே நினைவுபடுத்துகிறோம். அவர் சொன்னார்: ``இந்தப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கலாம். ஆனால் அடிப்படைப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாது. சில ஆயிரம் ஈழ இளைஞர்களாவது மீண்டும் கெரில்லாப் போர் நடத்தத் தலைமறைவாவார்கள். அந்த யுத்தத்தை வெல்வது கடினம். எனவே, இப்போது போர் உக்கிரம் பெற்றிருந்தாலும் இன்னொரு பக்கம் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். தீர்வு காணப்பட வேண்டும்'' என்று கொழும்பு நகரிலேயே குடியிருக்கும் அமெரிக்கத் தூதர் சொன்னார்.

அவர் இன்னும் சொன்னார்: ``சிங்கள அரசின் மனித உரிமை மீறல்களுக்கு அளவே இல்லை. எனவே இலங்கைக்கு ஆயுதம் விற்பனை செய்வதை அமெரிக்கா நிறுத்தி விட்டது'' என்றார். எந்த அளவிற்கு இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கேள்வி கேட்பாரன்றி கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள் என்பது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஒரு நாட்டிற்குத் தெரிகிறது. ஆனால் எட்டிய தூரத்தில் இருக்கும் இந்தியாவிற்குத் தெரியவில்லையே? அதனால்தான் இலங்கையில் நடைபெறும் வன்கொடுமைகளுக்கு இதுவரை இந்தியா கண்டனம் கூடத் தெரிவித்ததில்லை.

``ஈழமக்களுக்கு இந்திய நிவாரண உதவிகள், அங்குள்ள வடக்கு _ கிழக்கு மாநிலங்களுக்கு இன்னும் அதிகாரப் பரவல் என்பதனையெல்லாம் இலங்கை அரசு செயல்படுத்தும்'' என்று பிரணாப்முகர்ஜி தெரிவித்தார். நன்றி. மகிழ்ச்சி. தீபாவளிக்கு இனிப்புக் கொடுத்திருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஈழ மக்களின் துயரங்களைக் கலைஞர் வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும், வெளியுறவுச் செயலாளர் சிவசங்கரமேனனும் கொழும்பிற்கு ஒரு நடைபோய் வந்தனர். கலைஞரைச் சந்தித்தனர்.

அப்போது சிங்கள அரசு தெரிவித்த எந்தத் திட்டமாவது செயல்படுத்தப்பட்டதா? கிளிநொச்சி செல்லும் எண்-9 சாலையை சிங்கள அரசு இரண்டரை ஆண்டுகளாக மூடி விட்டது. அதனால் சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் எந்த உதவியும் வன்னிப் பகுதிக்குச் செல்ல முடியவில்லை. வழியிலேயே சிங்கள ராணுவம் பறித்துக் கொள்கிறது. இதனை உலகமே கண்டித்தது. ஆனால் இந்திய அரசு என்ன செய்கிறது. கண்டித்து வாய்ச் சொற்களாவது உதிர்த்ததுண்டா?

ஆனாலும் அனைத்துக் கட்சிக் கூட்டம், மனிதச் சங்கிலிக்குப் பின்னாலும் டெல்லித் தேர் நகரவில்லையென்றாலும் அசைவுகள் தெரிகின்றன. அந்த அசைவுகள் வேகம் பெற வேண்டுமெனில் அனைத்துக் கட்சி அமைப்பு தொடர்ந்தாக வேண்டும். களத்தில் நிற்கும் விடுதலைப் புலிகளுக்காக நாம் வாதாட வேண்டாம். கானகத்தில் தவிக்கும் ஈழமக்களுக்காக நேசக் கரம் நீட்ட வேண்டாமா? அதுதான் கொட்டும் மழையில் வெட்ட வெளியில் நிற்கும் இரண்டரை லட்சம் ஈழத் தமிழர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.


Comments