வன்னிப்பெரு நிலப்பரப்பில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் கடும் காற்றினால் பெரும் அழிவுகளும் பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. இதில் இருவர் உயிரிழந்தும் உள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் குளங்கள் நிரம்பி வழிகின்ற நிலையில் மக்கள் பெரும் அவலங்களை சந்தித்து வருகின்றனர்.
வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் அவர்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர்.
உடையார்கட்டுக்குளம்-விசுவமடுக்குளம் என்பன நீர் நிரம்பிய நிலையில் அவற்றின் கீழ் வாழும் மக்கள் பாதுகாப்பை தேடிக்கொள்ளுமாறும் இயன்ற வரை பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
மழையுடன் கடும் காற்று வீசி வருவதால் மரங்கள் வீழ்ந்துள்ளன. வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
இந்நிலையில் மக்களின் பாதிப்பு தொடர்பில் தமிழீழ காவல்துறை மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்பன துரிதமாக உதவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தொடர்ந்து பெய்து வரும் மழையினால் புதுக்குடியிருப்பு கல்வி அலுவலகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
தொடர் மழையினால் மழை வெள்ளம் அலுவலகத்தினுள் புகுந்ததன் காரணமாக மாணவர்களின் பாடப் புத்தகங்கள் நனைந்துள்ளன. மேலும் கல்வி உபகரணங்கள் பாதிப்படைந்துள்ளன.
கட்டட நெருக்கடிக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் புதுக்குடியிருப்பு கல்வி அலுவலகம் மழையினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதேவேளை, தற்போது பெய்து வரும் பருவ மழை காரணமாக புதுக்குடியிருப்பு கோட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழ் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பின் இரணப்பாலை-ஆனந்தபுரம்-கைவேலி-வள்ளிபுனம்- உடையார்கட்டு-மல்லிகைத்தீவு உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.
புதுக்குடியிருப்பு நகரினுள் தொடர் வெள்ளம் பாய்ந்ததன் காரணமாக ஆண்டு இறுதித்தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் புதுக்குடியிருப்பு சிறீ சுப்பிரமணியா வித்தியாசாலை வெள்ளத்தில மூழ்கிக் காணப்பட்டுள்ளது.
நகரில் உள்ள பத்துக்கும் அதிகமான வணிக நிலையங்கள் பாதிப்படைந்துள்ளன.
இதில் ஐந்துக்கும் அதிகமான தொழில் நிறுவனக் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.
தொடர் மழை காரணமாக புதுக்குடியிருப்பில் பாடசாலைகள் இயங்கவில்லை.
வீதிகளின் குறுக்காக நீர் வடிந்தோடுவதால் புதுக்குடியிருப்பின் சில வீதிகளால் மக்கள் போக்குவரத்து செய்யமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, விசுவமடு மேற்கு அதிசய விநாயகர் கோவிலடி 10 ஆம் கட்டை ஆகிய பகுதிகளில் வெள்ளம் காரணமாக 500-க்கும் அதிகமான குடும்பங்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும் வெள்ளப் பாதிப்பு அதிகமாகவுள்ளது. சேதம் பற்றி விபரங்கள் திரட்டப்படுகின்றன.
இதேவேளை, விசுவமடு றெட்பானா பகுதியில் இடம்பெயர்ந்து இடைக்கால வீட்டில் தங்கியிருந்த இளம் பெண்ணொருவர் இன்று புதன்கிழமை அதிகாலை 1:00 மணியளவில் மரம் முறிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.
விஜயகுமார் குணவதி (வயது 23) எனும் இளம் பெண்ணே உயிரிழந்தவர் ஆவார். இதில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
அதேவேளை, உடையார்கட்டு வடக்கில் வயல் பாக்கச் சென்ற ஒருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சூசைப்பிள்ளை மரியதாஸ் (வயது 52) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
Comments