மட்டக்களப்பில் சிறிலங்கா படையினர் நடத்தி வரும் தொடர் கொலை வெறியாட்டத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம்



மட்டக்களப்பில் அண்மைக்காலமாக சிறிலங்கா அரச படையினர் நடத்தி வரும் தொடர் கொலை வெறியாட்டத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாவீரர்களின் இலட்சியக் கனவை சுமந்து, எமது தனிப்பெரும் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலில், தமிழீழம் முழுவதும் எழுச்சி கொண்டுள்ள இந்த வேளையில், மீண்டும் ஒரு கோர இனக்கருவறுப்புப் படுகொலை நடவடிக்கையை தென் தமிழீழ மண்ணில் சிங்களப் படைகள் அரங்கேற்றியுள்ளன.

தென் தமிழீழத்தில் எமது வேங்கைகளின் வீரம் செறிந்த தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது, திக்குமுக்காடி வரும் சிங்கள இனவெறிப் படைகள், தமது கையாலாகாத்தனத்தை மீண்டும் அப்பாவித் தமிழ் உறவுகள் மீது காண்பித்து வருகின்றன. இதன் வெளிப்பாடாகவே, நேற்று முன்நாள் ஒரே நாளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு குடும்பங்கள் உட்பட பதினைந்து அப்பாவிப் பொதுமக்களை வயது வேறுபாடின்றி தமது கோரப் பற்களுக்கு சிங்களப் படையினரும் அவர்களின் ஒட்டுக்குழுக்களும் இரையாக்கியுள்ளன.

அப்பாவிப் பொதுமக்களை சிங்களப் படைகள் படுகொலை செய்வது இது முதற்தடவையல்ல. இவ்வாறான கொடூரங்களை கடந்த காலங்களிலும் பல தடவைகள் எமது தென்தமிழீழ மண் சந்தித்துள்ளது.

"கிழக்கின் விடியல்" என்ற மகிந்தவின் கொக்கரிப்பிற்கு முடிவு கட்டி சிங்களப் படைகளை தென்தமிழீழ மண்ணை விட்டு ஓடோட விரட்டியடிப்பதற்கு நாம் எல்லோரும் உறுதி பூண்டு நிற்கும் இந்த வேளையில், எமது மக்களின் உயிர்களைப் பலியெடுத்து தமது கோழைத்தனத்தை சிங்கள இனவெறி அரசும் அதன் கைக்கூலிப் படைகளும் ஒட்டுக்குழுக்களும் கட்டவிழ்த்து விட்டுள்ளன.

சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுவினரும் நடத்திய கொலை வெறியாட்டத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

சிங்களப்படைகள் மீது நடாத்தப்படும் தாக்குதல்களுக்கு எதுவுமே அறியாத அப்பாவி மக்களை படுகொலை செய்து பழி தீர்ப்பது எந்த வகையிலுமே நியாயமாகாது என்பதனை சிங்களப் படைகளும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களும் புரிந்து கொள்ளவேண்டும்.

தென்தமிழீழத்தில் தொடர்ந்து கொண்டுள்ள அப்பாவி மக்களின் படுகொலைகளுக்கான முழுப்பொறுப்பையும் சிங்கள தேசமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதோடு அப்பாவி பொதுமக்கள் மீதான படுகொலைச் சம்பவங்களை இனிமேலும் தொடராமல் சிங்கள தேசம் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments