நீதி செய்யுமா பிரிட்டன்?


ஈழத் தமிழர்களுக்கு எதிராக வரலாற்று ரீதியாகத் தன்னால் இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்காக அவர்களுக்கு நீதியும், நியாயமும், நிவாரணமும் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் பிரிட்டனுக்கு - அதன் நாடாளுமன்றத்துக்கு - உள்ளது.

- இப்படி பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்துப் பலமாகக் குரல் கொடுத்திருக்கின்றார் தமிழகத்தின் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ.

தமிழர்களுக்கான பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிக் குழுவின் முன்னால் உரையாற்றுகையிலேயே, ஈழத் தமிழர்களுக்கு பிரிட்டன் இழைத்த பெரும் தவறை சூடாக எடுத்துரைத்து, அந்தத் தவறினால் ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்துள்ள அவலத்திலிருந்து அவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய மீட்சி பெற்றுக்கொடுக்கும் பொறுப்பும், கடமையும் பிரிட்டனுக்கு உண்டு என்று அழுத்தம் கொடுத்திருக்கின்றார் வைகோ.

இலங்கையில் தமிழர்கள் இன்று படும் அவலங்களுக்கும், இன்னல்களுக்கும் பிரிட்டனே காரணம் என்ற குற்றச்சாட்டைப் புரிந்து கொள்வதற்கு இலங்கைத் தீவின் சரித்திரப் பின்புலத்தை சற்று நோக்குவது அவசியமானதாகும்.

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே இலங்கைத் தீவில் போர்த்துக்கேயர்கள் முதன் முதலில் வந்து இறங்கியபோது இங்கு பாரம்பரியமான - புராதன - அரசுகள் இரண்டு இருப்பதைக் கண்டார்கள். வடக்கு, கிழக்கில் தமிழர்களும் தெற்கில் சிங்களவர்களும் வெவ்வேறான பண்பாடுகளோடு, வேறுபட்ட இரண்டு சமூகங்களாக, தமக்கென தனித்துவமான மொழி, வாழிடம், வாழ்க்கைமுறை, வழக்காறு ஆகியவற்றோடு கூடிய தனித்தனி ஆட்சியமைப்புகளின் கீழ் வாழ்ந்து வருகின்றமையை அவர்கள் கண்ணுற்றனர்.

1619 இல் தமிழர் இராச்சியத்தைப் போர்மூலம் போர்த்துக்கேயர் தோற்கடித்துக் கைப்பற்றினர். எனினும், போர்த்துக்கேயரும் சரி, அதன் பின்னர் இலங்கைத் தீவை ஆக்கிரமித்த ஒல்லாந்தரும் சரி, தமிழர் தேசத்தை தனி இராச்சியமாக ஆண்டு, அதன் பிரதேச ஒருமைப்பாட்டைத் தனித்துவமாகப்பேணி, ஈழத் தமிழரின் இன அடையாளத்தையும் அங்கீகரித்தே வந்துள்ளனர்.

ஆனால், 1799 இல் ஒல்லாந்தரிடமிருந்து இலங்கைத் தீவின் ஆட்சிக் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பிரிட்டிஷ் சாம்ராச்சியம், தனது நிர்வாக வசதிக்காக இந்த இரண்டு இராச்சியங்களையும் இணைத்தது. இரண்டு தனித்துவ இன அடையாளங்களோடு இருந்த இரு தேசக் கட்டமைப்புகளை, அவற்றின் தனித்துவச் சிறப்பைப் பொருட்படுத்தாது புறமொதுக்கி, உதாசீனம் செய்துவிட்டு, 1833 இல் இரு தேசங்களையும் ஒன்றாக்கி, ஒற்றையாட்சிக் கட்டமைப்பைத் திணித்தது பிரிட்டிஷ் சாம்ராச்சியம்.

சிறுபான்மையினரான தமிழர்களின் தேசத்தையும், பெரும்பான்மையினரான சிங்களவரின் தேசத்தையும் ஒன்றாக்கி, ஒரே அரசுக் கட்டமைப்புக்குள் கொண்டுவந்த பிரிட்டிஷார், தாம் இந்த இலங்கைத் தீவை விட்டுப் புறப்பட்டுச் செல்லவேண்டிய வேளை வந்த சமயத்தில், தமிழர் தேசத்தின் காலாதிகால இறைமையை, பெரும்பான்மையினரான சிங்களவர்களின் கையில் அடிமைத்துவமாக ஒப்படைத்துவிட்டு வெளியேறினர்.

அந்நிய குடியேற்றவாதம் அன்று அடித்தளமிட்ட அந்த இன அடிமைப்படுத்தலுக்கான ஏற்பாடே இன்று இலங்கைத் தீவில் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டம் இவ்வளவு தீவிரமாக - பெரும் வன்முறைப் புயலாக - வீசுவதற்கான காரணமாக அமைந்தது.

பிரிட்டனின் தற்போதைய எம்.பிக்களுக்கு இந்த வரலாற்றுப் பின்புலத்தை எடுத்து விளக்கிய வைகோ, இலங்கையின் இனப்பூசல் இத்தகைய மோசமான கட்டத்தை எட்டுவதற்கான கருவை உற்பவித்தது பிரிட்டனே என்ற உண்மையையும் அங்கே ஆணித்தரமாக - சரித்திர நிகழ்வுகள் பற்றிய தகவல்கள், சான்றுகளோடு - எடுத்துரைத்திருக்கின்றார்.

பிரிட்டன் இழைத்த மாபெரும் வரலாற்றுத் தவறின் அடித்தளத்தில் நிமிர்ந்த பௌத்த - சிங்களப் பேரினவாத மனவமைப்புடன் கூடிய இலங்கையின் ஆட்சிக் கட்டமைப்பு, தமிழர் தேசம் தொடர்பாகத் தொடர்ந்து மேற்கொண்டு வந்த அடக்குமுறைச் செயற்பாட்டையும் அங்கு நன்கு விவரித்திருக்கின்றார் வைகோ.

இலங்கைத் தீவின் தேசிய இனங்களின் பிரச்சினைக்கு அமைதி வழியிலும், சமரச முறையிலும், சமாதான நெறியிலும் தீர்வு காண காலத்துக்குக் காலம் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளும், எத்தனங்களும் பேரினவாதத் திமிரினாலும், செருக்கினாலும் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டன என்பதையும் அங்கு விவரித்திருக்கிறார் வைகோ.

இந்தக் காரணங்களினால், ஈழத் தமிழருக்கு நீதியையும், நியாயத்தையும், கௌரவத்துடன் கூடிய வாழ்வியல் உரிமைகளையும் மீளப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமையும், பொறுப்பும் பிரிட்டனுக்கே உரியது என்றும் வைகோ தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

வைகோ சுட்டிக்காட்டிய விடயங்களின் பிரகாரம் ஈழத் தமிழருக்கு வரலாற்றுத் தவறிழைத்த பிரிட்டன், இனியாவது நீதி, நியாயம் கிடைக்க வழி செய்யுமா?




Comments