ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை போக்க வேண்டிய அரசியல் தீவிரம் தமிழக அடித்தள கிராமங்களில் மிகவும் கூடுதலாகி வருகிறது என்பதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும்.
நகர்ப்புறங்களிலிருந்து வெகு தொலைவில் ஒதுங்கிய, ஊடகங்களின் கருத்துக்கள் கூட போய்ச்சேர முடியாத கிராமங்களிலும் பெரும் எழுச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதன் விளைவு பொதுமக்களின் போராட்டம் எல்லா மட்டங்களிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.
கிராமத்து மக்கள் எத்தகைய எழுச்சியோடு இருக்கிறார்கள் என்பதற்கு அண்மையில் இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கிராமத்து மக்கள் கோபத்துடன் தொடர் மறியல் செய்து தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.
யாருக்கும் தெரியாத இரகசியமாகவே ரணில் விக்கிரமசிங்கவின் வருகை வைக்கபட்டிருந்ததது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் பேராளத்தூர் ஊராட்சி ஓன்றியத்தில், திருக்கொள்ளிக்காடு என்ற சிற்றூர் அமைந்துள்ளது.
இது சிற்றூர் என்றாலும் இங்கு அமைந்துள்ள சனீஸ்வரன் கோயில் மேல்மட்ட மக்களிடம் பிரபலமானது.
இங்குள்ள பொங்கு சனி கோயிலுக்கு வந்தால், எல்லாத் தடைகளும் நீங்கி அவர்கள் நினைத்த வெற்றியை அடைய முடியும் என்ற நம்பிக்கையை கடவுள் நம்பிக்கையாளர்களிடம் இருக்கிறது.
ரணிலுக்கும், இந்த கோயிலுக்கு சென்று வந்தால் அவரைப் பிடித்துள்ள சனி விலகும் என்று யாரோ சோதிடர் ஓருவர் ஆலோசனை கூறியிருக்கிறார்.
எனவே மிகவும் பாதுகாப்பாக இவர் வருவதற்கு தமிழக அரசு எற்பாடு செய்துள்ளது.
எப்படியோ, கம்யூனிஸ்ட் கட்சியும் பொதுமக்களும் இவருடைய வருகையை முன் கூட்டியே அறிந்து கொண்டுவிட்டனர்.
இவ்வளவு இரகசியமான செய்தி எப்படி வெளியானது என்ற வியப்பு காவல்துறைக்கு இப்பொழுது எழுந்துள்ளது.
ஊடகங்களின் மூலம் தகவல் கசிந்திருக்கலாம் என்று இவர்கள் சந்தேகப்படுகிறார்கள்.
திருச்சியிருந்து திருக்கொள்ளிக்காடு 145 கிலோ மீட்டம் தூரத்தில் அமைந்துள்ளது.
திருச்சியிலிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்த நீடாமங்கலத்திலிருந்து, காவரியின் வடி நிலமான இந்தப் பகுதி முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பலம் பொருந்திய பகுதிகளாகும்.
திருக்கொள்ளிக்காடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வெற்றிப் பெற்று வரும் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க பலத்த பாதுகாப்புடன் வந்த போதிலும் ஏழு இடங்களில் இவருடைய காரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களும் பொதுமக்களும் மறியல் செய்து பெரும் ஆச்சரியத்தை ஊடகங்களுக்கு அளித்துள்ளனர்.
நீடாங்கலத்தில் முதல் மறியல் நடந்துள்ளது.
இங்கு காரை நிறுத்ததாமல் மிகவும் வேகமாக வந்ததால், இதிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்த கொராடாச்சேரி என்னும் ஊரில் வெண்ணாறு என்ற ஆற்றங்கரையில் அமைந்த சாலையில் மாட்டு வண்டியை இழுத்து சாலையின் குறுக்கே நிறுத்தி, காவல்துறையின் துரித வேகத்துடன் ஓடி வந்த கார்களை முற்றாக நிறுத்தி மறியல் செய்திருக்கிறார்கள்.
இதில் முன்னாள் நாடாளுமன்ற ஊறுப்பினர் எம்.செல்வராஜ் உட்பட மொத்தம் 15 முன்னணி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் அனைத்திந்திய மாணவர் மன்ற மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் திருவாரூரில் நடைபெற்ற மறியலில் காவல்துறை 20 பேரை கைது செய்திருக்கிறார்கள்.
கடைசியாக கோயில் நுழைவாயிலில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கூடி விட்டார்கள்.
பெண்கள் மட்டும் நூறு பேர்.
இதில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற ஊறுப்பினர் கே.உலகநாதன், பி.பாண்டியன், இரா.தமிழ்ச்செல்வி, பாஸ்கரவள்ளி முதலிய ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் பங்குபற்றினர்.
காவல்துறையினரின் எண்ணிக்கை பொதுமக்களை கட்டுப்படுத்தக்கூடியதாக இல்லை. இது பெரும் பதட்டத்தை காவல்துறைக்கு உருவாக்கி விட்டது.
எப்படியும் தமிழ் மக்களின் உரிமையைப் பெற்றுத்தருவதில் நான் உதவியாக இருப்பேன் என்று பதட்டத்துடனேயே ரணில் கூறிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இறுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே.உலகநாதன், 'கேட்பதற்கு யாருமில்லை என்று தமிழ் மக்களை கொலை செய்து கொண்டே எத்தகைய தைரியத்தோடு தமிழ் நாட்டிற்குள் இவர்களால் வரமுடிகிறது" என்ற ஆத்திரம் தான் இந்த மறியல் போராட்டம் நடக்க காரணம் என்று கூறியுள்ளார்.
இது ஓரு சிற்றூரில் நடைபெற்ற நிகழ்ச்சி என்றாலும், அண்மைக்காலத்தில் இலங்கைத் தமிழர்கள் கொல்லபடுவதைப் பார்த்துக்கொண்டு தமிழகம் பொறுத்துக் கொண்டிருக்காது என்ற ஊணர்வு கிராமப்புறங்களில் எழுச்சி கொண்டுள்ளதை இந்த நிகழ்ச்சி உறுதி செய்கிறது.
-சிங்காரவேலன்-
நன்றி: ஜனசக்தி
Comments