இலங்கை தமிழன் அமைதியாக வாழ வழிகாண்பதே என் கடைசி சாதனை - கருணாநிதி



இலங்கைத் தீவிலே தமிழன் அமைதியாக வாழ ஒரு வழி கண்டாகி விட்டது என்ற அந்தச் செய்தி தான் நான் முதலும் கடைசியுமாக செய்யும் சாதனையாக இருக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

தமிழக ஆயர்கள் பேரவையின் ஊடகக் குழுவான, சாந்தோம் கலைத் தொடர்பு நிறுவனம், கருணாநிதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது. விருதை பெற்றுக் கொண்டு அவர் ஆற்றிய உரை:

இன்றைய தினம் 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டிருக்கின்றது. என்னை சாதனையாளன் என்று குறிப்பிடுவதை விட, நான் பல சோதனைகளைக் கண்டவன் என்ற முறையில் சோதனையாளன் என்றே குறிப்பிடலாம்.

எனவே சாதனையாளர் விருது இப்போது எனக்கு வேண்டாம், விழாவை ஒத்தி வையுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். இப்படிப்பட்ட ஒரு சிறப்பான விழா, தமிழகத் தலைநகரத்தில் நடைபெறும்போது, அதிலே கலந்து கொள்ள என் மனம் ஒப்பவில்லை. காரணம், விழா நடக்கின்ற இந்த நேரம், நம்முடைய தமிழன் வெட்டப்பட்டு, குத்தப்பட்டு, சுடப்பட்டு இலங்கைத் தீவிலே பிணமாகச் சாய்ந்து கொண்டிருக்கிறான்.

இந்த நேரத்திலே விருது பெறுவதை நான் சிறப்பாகக் கருதவில்லை, ஆகவே வேறொரு நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று எவ்வளவோ வேண்டினேன்.

சாதனையாளன் என்பதை நீங்கள் விரும்புகிறவாறு நான் ஏற்றுக்கொண்டாலுங் கூட, என்னுடைய சாதனைகளை வரிசைப்படுத்தித் தொடர்ந்தாலும் கூட, என்னுடைய சாதனை, என்னுடைய உணர்விற்கேற்ப, தமிழர்கள் உண்மையிலேயே வாழ்த்துவதற்கேற்ப அமைந்தது அந்தச் சாதனை என்று சொன்னால், அது இலங்கைத் தீவிலே தமிழன் அமைதியாக வாழ ஒரு வழி கண்டாகி விட்டது என்ற அந்தச் செய்தி தான் நான் முதன்மையானதாகவும், கடைசியாகவும் செய்கின்ற சாதனை என்பதை உங்களுக்கு நான் இந்த நேரத்தில் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒரு இனமே, பக்கத்திலே இலங்கைத் தீவிலே அழிக்கப்படுகிறது. எந்த இனம்? அங்கே ஆண்ட இனம். எந்த இனம்? ராஜ ராஜ சோழனால் படையெடுக்கப்பட்டு, வெற்றிக்கொடி பறக்க பரிபாலனம் செய்யப்பட்ட அந்த நாட்டில், இன்றைக்கு அவனுடைய இனம் அழிந்து கொண்டிருக்கின்ற அந்தக் காட்சியை காணுகிறோம்.

அவர்களைக் காப்பாற்ற முடியாமல், காப்பாற்ற நம்முடைய கரத்தை நீட்ட முடியாமல், நம்முடைய நிலை, பரிதாபத்திற்குரியதாக ஆகியிருக்கிறது.

இந்த நிலை மாறினால், மாறித் தீர வேண்டும், மாற்றப்பட வேண்டும், மாற்றுவதற்கு எல்லா தமிழர்களும், தமிழகத்திலே உள்ள மக்களும் உலகத்திலே வாழ்கிற தமிழர்களும் ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும், அணி வகுக்க வேண்டும்.

அப்போது தான் நீங்கள் இங்கே வழங்குகின்ற வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பெருமை, சிறப்பு, பொருத்தம் என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றார் கருணாநிதி.

Comments