மாவீரர் உரையில் இன்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இந்தியாவுக்கு சமரச சமிக்ஞை?

‘மயிலே, மயிலே இறகு போடு!’ என்றால் போடாது. பிடுங்கித்தான் எடுக்க வேண்டும். - என்பார்கள்.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழகக் கட்சிகளும் இந்த நிலைப்பாட்டுக்குத்தான் வந்துவிட்டன போலும். நேற்று முன்தினம் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தலைமையில் கூடிய தமிழக சர்வக் கட்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம் இத்தகைய நிலைப்பாட்டைத்தான் வெளிப்படுத்தி நிற்கின்றது.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுக்கு ஒரு வேண்டுகோளாகத் தொடர்ந்து விட்டுக்கொண்டிருப்பதை விடுத்து, அதைச் செய்தாகவேண்டும் என்று குரல் கொடுத்து எச்சரிக்க வேண்டும் என சர்வகட்சிக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

ஆக, இனி இலங்கை அரசுக்கு ‘மயிலே,மயிலே இறகுபோடு!’ என்ற மாதிரி போர்நிறுத்தத்துக்கு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிராதீர்கள். மயில் இறகைப் பிடுங்கி எடுப்பதுபோல, ‘யுத்த நிறுத்தத்தை மேற்கொள்!’ என்று இலங்கை அரசுக்குக் கடிந்து - வலியுறுத்தி - எச்சரித்து - நடந்துகொள்ளுங்கள் என இந்திய மத்திய அரசைக் கோரியிருக்கின்றது தமிழகம்.

இனி இவ்விடயத்தில் இந்தியா எப்படி நடந்துகொள்ளப் போகின்றது என்பதுதான் கேள்வி.
நாளை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேசும் போதும் -

அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, இந்தியப் பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடும்போதும் -

இந்தியாவின் போக்கு எப்படி அமையும் என்பது பற்றிய சில கோடி காட்டல்கள் வெளிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமது வருடாந்த மாவீரர் தின உரையை இன்று மாலை ஆற்ற இருக்கையில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உணர்வெழுச்சி தமிழகத்தில் பீறிட்டுக் கிளர்ந்து நிற்பது பற்றிய அறிவிப்பாகத் தமிழக முதல்வர் கூட்டிய சர்வகட்சி மாநாட்டின் பெறுபேறுகள் அமைந்திருக்கின்றன.
கடந்த வருடம் இதேநாளில் உரையாற்றிய பிரபாகரன், பூமிப்பந்தில் வாழும் எட்டுக் கோடித் தமிழர்களுக்கும் ஓர் அழைப்பை - அறைகூவலை - விடுத்திருந்தார்.

"உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன்." - என்பதே அவரின் அந்த மாவீரர் தினப் பேச்சின் முத்தாய்ப்பாக - இறுதி அழைப்பாக - அமைந்தது.
சரியோ, பிழையோ அன்றைய அந்தப் பேச்சு சமயத்துக்கும் இன்றைய இந்த நிலைக்கும் இடையில் தமிழகத்தில் பெரும் மாற்றம் - பேரதிசயம் - நிகழ்ந்திருக்கின்றது என்பது யதார்த்தமே.

"தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுங்கள்!" - என்று பிரபா அப்போது அழைப்பு விடுத்திருந்தார்.

இன்று தமிழகம் உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுந்து நிற்கின்றது. அது விடுதலைப் புலிகளுக்கு - அவர்களின் தனிநாட்டுப் போராட்டத்துக்கு - ஆதரவான எழுச்சியா என்ற சர்ச்சை வேறு விடயம்.

ஆனால், தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக உணர்வெழுச்சி இவ்வருடத்தில் - எதிர்பாராத வகையில் - எழுந்திருக்கின்றது என்பது மட்டும் உண்மை.
இந்த உணர்வெழுச்சிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் - அதை ஊக்குவிக்கும் வகையில் - தமது இன்றைய மாவீரர் தின உரையில் சில பிரதிபலிப்புகளைத் தலைவர் பிரபாகரன் காட்டுவார் என நம்பப்படுகின்றது.

கடந்த மாவீரர்தின உரையில், தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்குக் குந்தகமான வகையில் இந்தியா நடந்துகொண்டுள்ளது என்பதைப் புட்டுப் புட்டு வைத்திருந்தார் தலைவர் பிரபாகரன். ஆனால், இம்முறை அத்தகைய இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை அவர் கோடிகாட்ட மாட்டார் என்றும், தமிழக மக்களின் உணர்வெழுச்சியைச் சுட்டிக்காட்டி, அதனடிப்படையில் ஈழத் தமிழர் பிரச்சினையில் நியாயத்தோடு பங்காற்ற இந்தியா முன்வரவேண்டும் என அழைப்பு விடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தகைய அழைப்புக் கிடைக்குமானால் அதனை இந்தியத்தரப்பு சாவகாசமாகப் பரிசீலிக்குமா? புலிகள் நீட்டும் சமாதானக் கையை இந்தியா பற்றிக்கொள்ளுமா? - என்பவற்றை எல்லாம் நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியிருக்கும்.

வன்னியில் புலிகளின் தலைவர் இன்று ஆற்றும் உரையை கௌரவிக்கும் சர்வதேச சமூகம் காத்திருப்பது போல, புதுடில்லியிலும் அதிக சிரத்தையுடன் பார்த்திருக்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது


Comments