இந்தியாவின் பூகோள நலன் பேணும் தந்திரோபாயம் : தமிழர்கள் பகடைக்காய் -- புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி

இந்தியாவின் பூகோள நலன்சார்ந்த காய் நகர்த்தும் தந்திரோபாயத்தினால் தமிழர்கள் பகடைக்காய்களாகிப் பாதிக்கப்பட்டு வருவதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார்.

பார்த்தசாரதி, வெங்கடேஸ்வரன் போன்றவர்கள் இந்திய அரசில் இருந்தபோது ஈழத்தமிழர்கள் தொடர்பாக இருந்த புரிந்துணர்வுகூட தற்பொழுது இல்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார்.

இந்திய அரசைப் பொறுத்தளவில் சிறீலங்கா அரசை தனது கைக்குள் வைத்திருப்பதற்கு எவ்வாறு தமிழர்களைப் பயன்படுத்தலாம் என சிந்திக்கின்றதே தவிர, தமிழர் நலன்சார்ந்து சிந்திக்கவில்லை எனவும் யோகி கூறினார்.

மறு புறத்தில் சிறீலங்கா அரசாங்கமும் இந்திய அரசை தந்திரோபாயமாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ்காந்தி மீது கொழும்பில் நடத்தப்பட்ட தாக்குதலை இந்திய அரசு மறந்திருப்பதாகவும், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை 21 வருடங்களின் பின்னர் சிறீலங்கா அரசு முற்றாக மறுத்து, அதனைத் தூக்கி எறிந்துள்ள போதிலும், இந்திய அரசு அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய தொலைக்காட்சியின் கிளிநொச்சி கலையகத்தில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி இந்தக் கருத்துக்களைக் கூறினார்.

இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகளே சீர்குலைத்தனர் என அண்மையில் நிதியமைச்சர் சிதம்பரம் கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், இலங்கை, இந்திய ஒப்பந்தம் என்பது சிறீலங்கா அரசுடன் மட்டுமே செய்யப்பட்டது எனவும், விடுதலைப் புலிகளுடன் செய்யப்படவில்லை எனக்கூறியதுடன், அந்தக் காலப்பகுதியில் இந்திய அரசினால் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் ஒரு பொழுதும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என ராஜீவ்காந்திக்கும், ஜெயவர்த்தனவிற்கும் இடையில் கனவான் ஒப்பந்தம் (Gentlemen Agreement) செய்யப்பட்டிருப்பதாக, தற்பொழுது தமிழர் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டின் இந்து பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ராம் தன்னிடம் நேரடியாகக் கூறியிருந்ததையும் யோகி இந்த நேர்காணலில் நினைவு கூர்ந்தார்.

இந்திய மத்திய அரசு உண்மையில் ஈழம், மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும், குரல்களுக்கும் செவி மடுப்பதாக இருந்தால், அது உடனடியாக சிறீலங்கா அரசுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்த வேண்டும் எனவும், போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அழுத்தம் பிரயோகிப்பதற்கான வலு மத்திய அரசிடம் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், இன்னொரு நாட்டின் விடயத்தில் தலையிட முடியாது எனக் கூறுவது எல்லாம் பொய்யான நடவடிக்கை எனவும் தெரிவித்தார்.

இந்தியாவின் படைத்துறை உதவி இன்றி, சிறீலங்கா அரசினால் இவ்வாறான முனைப்பான போரை நடத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் மக்களின் பிரச்சினையை எவ்வாறு தீர்பது என்பது பற்றி மத்திய அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும், அதற்கான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் யோகி கேட்டுக்கொண்டார்.

தமிழ் மக்களது போராட்டத்தை தமிழீழத்தையும், தமிழ்நாட்டையும் இணைத்துப் பார்ப்பதாலேயே, தமிழ் மக்களின் குரலையும், போராட்டத்தையும் ஏனைய நாடுகளுடன் கூட்டாக இணைந்து இந்திய அரசு முடக்க நினைப்பதாகவும் யோகி கூறினார்.

தமிழ்நாட்டின் 6 கோடி மக்களின் குரலை மதிக்காத மத்திய அரசு இலங்கையிலுள்ள ஒன்றரைக் கோடி சிங்களவர்களுக்கு உதவி செய்வதாகவும், தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு சிங்களவர்களுக்கு அடிமைகளாக வாழ வேண்டும் என இந்திய மத்திய அரசு நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புலிகளை வெற்றி கொண்டுவிட்டோம் என சிறீலங்கா அரசும், புலிகள் அழிந்து விட்டனர் என இந்திய அரசும் நினைப்பதாகவும், அவ்வாறு நினைப்பதில் இருந்து இரு அரசுகளும் பின்வாங்க முடியாது எனினும், வரலாறு அவ்வாறு நகர்ந்து செல்லாது எனவும், மக்களின் போராட்டம் ஒருபோதும் தோற்றுப்போகாது எனவும் யோகி ஆணித்தரமாகக் கூறினார்.

விடுதலைப் புலிகள் எந்த அரசுகளையும் நம்பி போராட்டம் நடத்தவில்லை எனவும், யாராவது தமக்கு உதவினால் வரவேற்போம் எனவும், அதேநேரத்தில் எந்த அரசாவது எதிர்த்தால் அதற்கு எதிராகப் புலிகள் போராடுவார்கள் எனவும் யோகி திட்டவட்டமாகக் கூறினார்.

இந்திய மத்திய அரசிலுள்ள கட்சிகள் மத்தியிலும், தமிழ்நாட்டிலும் இனப்படுகொலை, ஈழம் என்ற சொற் பிரயோகங்கள் தற்பொழுது கட்சிகளாலும், அதன் தலைவர்களாலும் பயன்படுத்தப்படுவதாகக் கூறிய யோகி, சிந்தனை, மற்றும் கருத்தோட்டத்தில் மாற்றம் ஏற்படுதை இந்த சொற் பிரயோகங்கள் சுட்டி நிற்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் நிவாரண சேகரிபபு பற்றிக் கருத்துரைத்த யோகி, தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் மக்களிற்காக நான்கு கோடி நிதி சேகரிக்கப்பட்ட கால கட்டத்தில், ஈழத்தில் 40 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், உணவு போன்ற நிவாரணப் பொருள்கள் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்த்து வைக்காது எனவும் கூறினார்.

யாழ் மண்டைதீவில் தமிழர்களை உயிருடன் புதைத்த கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச போன்ற ராஜபக்ச குடும்பம் கூறும் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து, அவை தோற்றுப்போய் தொடர்ந்தும் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டால், விடுதலைப் புலிகளும் மரியாதை வைத்திருக்கும் ஒரு மூத்த தலைவரும், சிறந்த இராசதந்திரியுமான கலைஞர் கருணாநிதி தனது இராசதந்திரத்தில் தோற்றுப்போய் விட்டார் என்ற வரலாறு தோன்றும் என்ற கவலை விடுதலைப் புலிகளுக்கு இருப்பதாக அவர் கூறினார்.

போராட்டம் என்பது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது எனவும், அந்த நம்பிக்கை விடுதலைப் புலிகளுக்கு என்றும் இருப்பதாகவும் யோகி கூறினார்.

தமிழ்நாட்டில் இன்று எழுந்துள்ள ஆதரவலை தமக்கு உற்சாகம் கொடுப்பதாகவும், அதனால் மத்திய அரசில் மாற்றம் ஏற்பட்டால் விடுதலைப் புலிகள் அதனை வரவேற்பர் எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி மேலும் தெரிவித்தார்

Comments