விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்காவின் ஆழ ஊடுருவும் படையணியின் கட்டளைத் தளபதி பலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டுசுட்டான் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியின் கட்டளைத் தளபதி கொல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு படையணியான ஆழ ஊடுருவும் படையணி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊடுருவி தாக்குதல்களை மேற்கொண்டு வருவது உண்டு.

இந்நிலையில் கடந்த வாரம் ஒட்டுசுட்டான் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு சிறிலங்கா இராணுவத்தின் எட்டுப் பேர் கொண்ட அணி ஊடுருவிய போது விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அதன் கட்டளைத் தளபதி மேஜர் லலித் ஜெயசிங்க கொல்லப்பட்டார்.

ஜெயசிங்க தலைமையிலான அணியினர் பல தடவைகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

எனினும், ஒட்டுசுட்டான் பகுதி விடுதலைப் புலிகளின் தீவிர பாதுகாப்புக்கு உட்பட்ட பிரதேசம். அங்கு மக்களும் செறிவாக வாழ்கின்றனர்.

இலக்கினை தாக்குதவற்கு இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி பதுங்கியிருந்த போது விடுதலைப் புலிகளின் அணி சடுதியாக தாக்குதலை நடத்தியது.

தாக்குதலில் காயமடைந்த கட்டளைத் தளபதியை சக படையினர் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்க முற்பட்ட போது விடுதலைப் புலிகளின் அணிகள் மீண்டும் தேடி அழிக்கும் தாக்குதலை நடத்திய போது ஜெயசிங்க பலியானதுடன் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தில் வழங்கப்படும் மிகவும் உயர்ந்த விருதான "வீர விக்கிரம விபூசன" விருதையும், ஏனைய பல விருதுகளையும் மேஜர் ஜெயசிங்க பெற்றிருந்தவர் என படைத்தரப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.


Comments